தவறான தகவலை தரும் சரவணன் பதவி விலக வேண்டும்

[அண.பாக்கியதாதன், பூச்சோங்]

கூட்டரசுப்பிரதேச நகர்புற நல்வாழ்வு துணைஅமைச்சரும் ம.இ.காவின் உப தலைவருமான சரவணன் பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி நிகழ்வில், எந்த காலத்தில் இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கொடுத்திருக்கிறார்கள் என்று ஏக வசனம் பேசியிருக்கிறார். சிவராசா தமிழ்பள்ளியில் படிக்காததனால் சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். உண்மை, சில ம.இ.கா தலைவர்களைப் போல் புரட்டி-புரட்டி பேச சிவராசாவுக்கு தெரியாதுதான். ஆனால், உண்மைக்கு இறுதிவரை போராடும் மனிதர்.

இந்திய சமுதாயத்துக்காக குரல் கொடுக்க வேண்டிய ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளவர், தமிழ்ப்பள்ளிகள்  குறித்து அரசாங்க கோட்பாடுகளைக் கூட அறியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தன் கட்சியை காப்பாற்றவும், பதவியை காப்பாற்றிக்கொள்ள அரசாங்கத்தையே மட்டந்தட்டி பேசியுள்ளார். ஆக மொத்தத்தில், இருப்பதை இல்லை எனக்கூறி  முழு பூசணிக்காயை துணையமைச்சர் சட்டைப் பையில் மறைக்க பார்க்கிறார்.

அவர் கூற்றுக்கு மாறாக ஆறு ஏக்கருக்கு மேற்பட்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை, அதற்கு ஆதாரமாக பந்திங் சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளியை குறிப்பிடலாம். இதனை உண்மையா? இல்லையா என்று பள்ளியிலும், கல்வி இலாக்காவிலும் கூட அவர் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசாங்கத்தின் நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் பிரிவின் வழிகாட்டி கையேட்டின் பரிந்துரை, மாணவர்கள் எண்ணிக்கை 420க்கு மேற்பட்டு இருந்தால் 5 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தைப் பெற அப்பள்ளிக்குத் தகுதி உண்டு என்கிறது. ஒரு துணை அமைச்சருக்கு எப்படி அரசாங்க விதிமுறைகள் கூடத் தெரியவில்லை?

ஆக, எப்பிங்கம் தமிழ்ப்பள்ளி 1992ம் ஆண்டே 475 மாணவர்களைக் கொண்டு இருந்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை 420க்கு மேற்பட்டு இருப்பதாலும் அருகில் வேறு தமிழ்ப்பள்ளிகள் இல்லாததாலும் 5 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தைப் பெற ஒரு பள்ளிக்குத் தகுதி உண்டு என்கிறது அந்த பரிந்துரை என்பதனை துணை அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்பிங்கம் தமிழ்ப்பள்ளிக்கான ஒரு பகுதி நிலம் அதிகாரபூர்வமாக  ம.இ.கா  பெயரில் பதிந்துக் கொண்டது 2005ம் ஆண்டில். சிப்பாங் தெலுக் மெர்பாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் அதிகாரபூர்வமாக மாநில அரசு மூலம் 6.65 ஏக்கர் நிலம் வழங்கியதும்  அதே காலக்கட்டத்தில்தான்.  அப்பொழுது தெலுக் மெர்பாவ் பள்ளியில் 464 மாணவர்கள் இருந்தனர் என்பதனை  ஆய்வுகள் காட்டுகின்றன. ஆக, ஒரே மாநிலத்தில், ஒரே காலக்கட்டத்தில், ஒரே மாதிரியான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட இரு வேறு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் பாகுபாடு காட்டியது யார்? அரசாங்கமா?  ம.இ.காவா?

கிள்ளான் புக்கிட் ராஜா தோட்டம் மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 2006ம் ஆண்டில் அத்தமிழ்ப்பள்ளிக்கு  5.4 ஏக்கர் நிலம், ஒதுக்கப்பட்டது  எப்பிங்கம் திருவிளையாட்டில் ஈடுபட்ட அதே ஆட்சிக்குழு உறுப்பினரின் காலத்தில்தான், இதுவும் நடந்துள்ளது, ஆனால் பள்ளிக்கு வழங்கப்பட்டதோ 3 ஏக்கர் நிலம் மட்டுமே, ஏன்  2.4 ஏக்கர் நிலத்தை தனியாக ஒதுக்கி வைத்தார்கள்? சிலாங்கூரில்  ஆட்சி மாறியதால் இவ்விவகாரத்தை ஆராய்ந்த டாக்டர் சேவியர்,  மேம்பாட்டு நிறுவனம் ஒதுக்கி வைக்கப்பட்ட மீத நிலம் பள்ளிக்கு திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அந்தநில உரிமையாளரை வற்புறுத்தி நிலத்தையும் மீட்டார்.

இதே காலக்கட்டத்தில் மேம்பாட்டால் பாதிக்கப்பட்ட இன்னொரு தமிழ்ப்பள்ளி ஷா ஆலாம் ராசாக் தமிழ்ப்பள்ளி ஆகும்.  இப்பள்ளியில் மாணவர்கள் விளையாட திடல் இல்லை. ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.  அதில் ஒரு ஏக்கர் நிலத்தை பெட்ரோல் பங்குக்கு விற்றதுயார்?  இன்னும் ஒரு ஏக்கர் நிலம் எப்படி மறைந்தது?

மாணவர் எண்ணிக்கை மேற்குறிப்பிட்டுள்ள அளவு இருந்தால், மேம்பாட்டு நிறுவனங்கள்  மாநில  அரசின் வற்புறுத்தலுக்கு இசைந்து  6 ஏக்கர் நிலத்தை வழங்குகின்றன என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு, மத்திய அரசுக்கு சொந்தமான  (R.R.I) ஆர்.ஆர்.ஐ தோட்டம்,  யாருடையது என்பது கவலையில்லை. தமிழ்ப்பள்ளிக்கான 6 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினால் மட்டுமே, நிலம் கைமாற அனுமதிக்கப்படும் என்ற டாக்டர் சேவியரின் உடும்புப்பிடியால், மேம்பாட்டாளர் 450 மாணவர்கள் பயிலும் ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலத்தை வழங்கும் உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

ஆக, எப்பிங்கள் மட்டுமல்ல, மற்ற தமிழ்பள்ளிகளுக்கும் வழங்கப்பட்ட நிலம் ஒழுங்காக பள்ளிக்கு சென்று சேரவில்லை என்பதற்கு இவைகளை ஆதாரமாக  எடுத்துக் கொள்ளலாம். தமிழ்பள்ளிகளின் நில விவகாரத்தில் ம.இ.கா தலைவர்கள்  விளையாடியுள்ளச் சதுரங்கங்கள் பற்பல என்பதற்கு போதிய ஆதரங்கள் உண்டு, அவைகளைப் பட்டியல் போட இப்போது விரும்பவில்லை.

அம்னோ இந்நாட்டு இந்தியர்களுக்கு இழைத்துள்ளக் கொடுமைகளை யாரும் மறக்கமுடியாது. அதனால், ம.இ.கா தலைவர்கள் தங்கள் தவறுக்கும் அரசாங்கத்தின் மேல் பழி போட்டு தப்பிக்கவும் முடியாது. மேடை ஏறிச் சவால் விட்டு தோல்விக்கண்டால் தான் பதவி துறக்க வேண்டும் என்பதல்ல. கௌரவமான மனிதர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள இங்குக் கொடுக்கப் பட்டுள்ள ஆதாரங்களே போதுமானது. இந்த ஏழை சமுதாயத்திற்குச் சேர வேண்டிய பங்கை வாங்கித்தர வேண்டிய ம.இ.கா  தலைவர்களே சுரண்டிவிட்டால், அம்னோ எப்படி நமக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கும் என்பதனை ம.இ.கா. தலைவர்கள் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

TAGS: