14-வது யோரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன.
ஏ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் கிரீஸ் அணியும், செக் குடியரசு அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு அணியின் கையே ஓங்கி இருந்தது. ஆட்டம் துவங்கிய 3-வது நிமிடத்திலேயே கிரீஸ் அணிக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் செக் குடியரசின் ஜிராசெக் அபாரமாக கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் செக் குடியரசின் பிலர் கோல் அடித்து, கிரீஸ் வீரர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளித்தார். முதல் பாதியின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு முன்னிலை வகித்தது.
கிரீஸ் அணிக்கு ஒரே ஆறுதலாக ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் அந்த அணியின் பிளண்டர் லாவகாமாக கோல் ஒன்றை அடித்தார். 2-வது பாதியில் மேலும் கோல் அடித்து செக் குடியரசுக்கு பதிலடி கொடுக்க கிரீஸ் வீரர்கள் முயற்சித்தனர். அவர்களது முயற்சிகள் அனைத்தும் செக் குடியரசு வீரர்களால் தடுக்கப்பட்டன. இதனால் இறுதி வரை கிரீஸ் அணியினர் இரண்டாவது கோல் அடிக்க முடியாமல் போனது.
இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கிரீசை தோற்கடித்த செக் குடியரசு அணி, புள்ளிப்பட்டியலில், ஏ பிரிவில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் வகிக்கிறது.