“நம்பிக்கை” நஜிப்பின் நம்ப இயலாத குற்றச்சாட்டுகள்

-ஜீவி காத்தையா, ஜூன் 13, 2012.

பெர்சே 3.0 428 இந்நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் பொறுப்புணர்வற்ற சந்தர்ப்பவாதிகள் என்பதை நிருபித்து விட்டது. அவர்கள் நாட்டை நாட்டு மக்களுக்காக ஆளும் பொறுப்பை விடுத்து தங்களுடைய சுயநலன்களைப் பாதுகாப்பதற்காக எந்தப் பாதகச் செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தி விட்டது பெர்சே 3.0.

 

பாதுகாப்புக்கு மிரட்டல் இல்லை

 

பெர்சே 3.0 428 தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நாட்டின் உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் பெர்சே 3.0 நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு மிரட்டல் அல்ல (Not a security threat) என்று அறிவித்தார். ஏன் பெர்சே 3.0 ஒரு மிரட்டல் அல்ல? மக்கள் மீதான அதன் ஈர்ப்பு சக்தி சிறிதளவுதான் என்பதால் ஏப்ரல் 28 ஒரு பிரச்னையல்ல (April 28 is not an issue as it had gained little traction with the people) என்று பெர்சே 3.0 நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு மிரட்டல் அல்ல என்று உள்துறை அமைச்சர் அவர் பகிரங்கமாக செய்திருந்த பிரகடனத்திற்கு காரணம் கூறினார்.

 

பெர்சே 3.0 428 பேரணி பிற்பகல் மணி 4.00 அளவில் முடிவிற்கு வருவதாகவும் அப்பேரணியில் பங்கேற்ற மக்களை கலைந்து செல்லுமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்ளும் வரையில் 250,000 மக்கள் பங்கேற்றதாக கூறப்படும் அப்பேரணி அமைதியாக நடைபெற்றது. அதன் பின்னர், குழப்பங்களும் போலீசாரின் வழக்கமான அடிதடிகளும் நடைபெற்றன.

 

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி

 

நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் அல்ல என்று உள்துறை அமைச்சர் அறிவித்த அப்பேரணியில் ஏன் அடிதடிகளும் வன்செயல்களும் ஏற்பட்டன? அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக  அங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுதான் காரணம். இப்படி கூறியவர் இந்நாட்டின் பிரதமர் நஜிப். அது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சி என்றாரவர்.

 

பெர்சே 3.0 பேரணி நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல்ல என்ற உள்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு  உள்துறை அமைச்சரிடம் போதுமான ஆதாரங்கள் இருந்திருக்க வேண்டும். அந்த அறிவிப்புகளுக்கான ஆதாரங்களை அவர் தாமாகவே திரட்டியிருக்க முடியாது. அரசாங்க போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உளவுத்துறைகள் போன்றவற்றிடமிருந்துதான் தகவல்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பதவியில் இருக்கும் ஐஜிபியிடமிருந்து அவ்வித அறிவிப்பு ஏதும் வரவில்லை.

 

அரசைக் கவிழ்ப்பது என்பது பாதுகாப்புக்கு மிரட்டலான காரியம். பேரணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சி என்று கூறுவதற்கு பிரதமரிடமும் ஆதாரம் இருந்திருக்க வேண்டும். அதனை அவரே திரட்டி இருக்க முடியாது. தற்போதைய ஐஜிபி அப்படியான ஆதாரம் ஏதும் இருப்பதாகக் கூறவில்லை.

 

ஆனால், பேரணிக்குப் பின்னர் நஜிப் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து போலீஸ் படையின் முன்னாள் ஐஜிபிகளான ஹனிப் ஒமார்,  அப்துல் ரஹிம் முகமட் நோர் மற்றும் மூசா ஹசான் ஆகியோர் பெர்சே 3.0 ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்ற குற்றச்சாட்டிற்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

 

ஆமாம், கம்யூனிச அனுதாபிகள் அங்கிருந்தனர். அவர்கள் பின்பற்றும் வியூகங்களும் அங்கு காணப்பட்டன. அவற்றை படங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பிரதமரின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சி என்ற கூற்றுக்கு சப்பைக் கட்டினார் நாட்டின் போலீஸ் படையின் முன்னாள் ஐஜிபியான ஹனிப் ஒமார்.

 

1970 ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த கம்யூனிச அனுதாபிகள் பெர்சே 3.0 பேரணியில் இருந்ததைக் கண்டதாக ஹனிப் கூறினார். எந்த மாதிரியான கம்யூனிஸ்ட்கள் – மார்க்சிஸ்ட்களா?, லெனிஸ்ட்களா?, ஸ்டாலினிஸ்ட்களா?,  ட்ரோட்ஸ்கிட்களா?, மாவோஸ்ட்களா?  அல்லது சின் பெங்கிஸ்ட்களா? – என்று ஹனிப் கூறவில்லை. ஆனால், அவருக்குப் பின்னர் ஐஜிபியான ரஹிம் நோர் பேரணியில் கம்யூனிஸ்ட் அனுதாபிகளைக் கண்டதாக கூறவில்லை. பெர்சேயின் பின்னணியில், அதாவது பெர்சே 3.0 ஏற்பாட்டாளர்கள், இருப்பவர்கள் மார்க்சிஸ்ட் அல்லர் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த தேர்தல் சீர்திருத்த இயக்கம் பின்பற்றிய வியூகங்கள் மார்க்சிஸ்ட் போன்றது என்றார். (“According to the report, Abdul Rahim conceded that the people behind Bersih were not Marxist, but said the tactics adopted by the polls reform movement was similar to it.”)

 

 கம்யூனிஸ்ட்டும் இல்லை, கவிழ்க்கும் முயற்சியும் இல்லை

 

பெர்சே 3.0 428 பேரணியில் கம்யூனிஸ்ட்களும் இல்லை; அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளும் இல்லை என்று அம்னோவின் தலைவரும் நாட்டின் பிரதமருமான நஜிப்பின் அரசாங்கத்தில் துணை உயர்கல்வி அமைச்சராக இருக்கும் சைபுடின் அப்துல்லா பகிரங்கமாக கூறியுள்ளார்.

 

“பெர்சே 3.0 கம்யூனிஸ்ட்களின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது அல்லது அது தெருப் போராட்டத்தின் வழி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” (“I don’t agree that Bersih 3.0 was influenced by communists or that it was an attempt to topple the government through street demonstrations”), என்றார் சைபுடின்.

 

அம்னோவில் ஒரு சீர்திருத்தவாதி என்று கருதப்படும் சைபுடின் பெர்சே 3.0 ஐ தாம் ஆதரிக்கவில்லை என்றும்  ஆனால், “அப்பேரணியை ஒரு கண்ணால் மட்டும் பார்க்க மாட்டேன்” என்பதை அவர் வலியுறுத்தினார்.

 

ஆக, நஜிப்பின் துணை அமைச்சரான சைபுடினை பொறுத்தவரையில் பெர்சே பேரணி 3.0 இல் கம்யூனிஸ்ட்டும் இல்லை, அரசைக் கவிழ்க்கும் முயற்சியும் இல்லை.

 

ஏன் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை?

 

என்ன ஆச்சரியம்! நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் அல்ல என்று உள்துறை அமைச்சரின் சான்றிதழைப் பெற்ற பெர்சே 3.0 ஒரே வாரத்தில் கம்யூனிச அனுதாபிகளையும் சிறுவர்களையும் இலட்சக்கணக்கில் திரட்டி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியை மேற்கொண்டு விட்டது! இப்படி கூறிய ஹிசாமுடினும் நஜிப்பும் ஹனிப்பும் இந்நாட்டில்தான் அக்காலகட்டத்தில் இருந்தனரா அல்லது மங்கோலியாவில் கனவு கண்டுகொண்டிருந்தனரா?

 

மேலும், பெர்சே 3.0 பேரணி ஒரு மிரட்டல் அல்ல என்ற உள்துறை அமைச்சரின் அறிவிப்பும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சி அப்பேரணியில் மேற்கொள்ளப்பட்டது என்ற பிரதமர் நஜிப்பின் கூற்றும் எதிர்மாரானதாக இருக்கின்றன. இது பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையில் முரண்பாடு இருப்பதைக் காட்டுகிறது.

 

1970 ஆம் ஆண்டில் ஹனிப் கண்ட கம்யூனிச அனுதாபிகள் 2012 ஆம் ஆண்டு பெர்சே பேரணியில் பங்கேற்பர் என்பதும் ரஹிம் நோர் கண்ட மார்க்சிஸ்ட் வியூகங்களும் பெர்சே பேரணியில் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பயன்படுத்தப்படும் என்பதும் தற்போதைய ஐஜிபிக்கும் உள்துறை அமைச்சருக்கும் அப்பேரணி நடப்பதற்கு முன்பு எப்படி தெரியாமல் போனது? இது நஜிப்பிற்கு எதிராக ஹிசாமுடின் சதி செய்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

 

ஆக, அரசாங்கத்தைக் கவிழ்க்க பேரணியில் முயற்சிக்கப்பட்டது என்பது உண்மையிலும் உண்மை என்பதற்கு நஜிப்பிடம் ஆதாரம் இருக்குமானால், மலேசிய வரலாற்றின் மிகப் பெரிய பேரணியான பெர்சே 3.0 ஐ அமைதியாக நடக்க வைத்து கடைசி நேரத்தில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான வன்செயல்களில் இறங்க அனுமதித்த உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஏன் இன்னும் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை?

 

ஏன் துணை அமைச்சர் நீக்கப்படவில்லை!

 

அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று எந்தப் பேரணியை பிரதமர் நஜிப் குற்றம் சாட்டினாரோ அந்தப் பேரணியில் அவ்வித முயற்சி ஏதும் கிடையாது என்று பகிரங்கமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார் பிரதமரின் துணை அமைச்சர் சைபுடின். பிரதமரின் பகிரங்க குற்றச்சாட்டை பகிரங்கமாக மறுத்துள்ள துணை அமைச்சரின் செயல் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு சவாலாக அமைந்துள்ளது. பிரதமருக்கு சவால் விடும் துணை அமைச்சர்! துணை அமைச்சரின் மறுப்பில் உண்மையில்லை என்றால், அவருக்கு எதிராக ஏன் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

 

துணை அமைச்சர் சைபுடினின் மறுப்பு உண்மை என்பதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நஜிப்பின் அரசாங்கம் பேரணியில் பங்கேற்ற இதர மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

 

வருமுன் காக்கத்தவறிய பிரதமரா?

 

பெர்சே பேரணி தமது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சி என்பதற்கான ஆதாரம் நஜிப்பிற்கு எப்போது கிடைத்தது? பேரணி முடிவிற்கு வந்த பின்னர்தான் கிடைத்ததா? அடுத்த பெர்சே 3.0 பேரணி நடக்கப்போகிறது என்பது பல மாதங்களுக்கு முன்பே உலகமறிந்த தகவல். அப்பேரணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியாக அமையும் என்பதை அப்பேரணி முடிவுற்ற பின்னரே பிரதமர் கண்டுபிடித்தார் என்றால், நஜிப் மிகவும் ஆபத்தான, நம்பிக்கைக்கு அருகைதயற்ற பிரதமர் ஆவார். வரும்முன் காப்பதுதான் அமைச்சரின் கடமை. அக்கடமையிலிருந்து நாட்டின் தலைமை அமைச்சர் தவறிவிட்டார் என்பது வந்தபின் அவர் விடுத்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

 

கடமையிலிருந்து தவறிய அமைச்சர் பதவி விலகுவது அரசியல் நாகரீகமுடைய தலைவர்களின் பண்பாடு. நமது நாட்டு தலைவர்களின் பண்பாடே வேறு விதமானது. இங்கு திருட்டுக்குப் பெயர் “தியாகம்”. ஆக, நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்க்கவிருந்த முயற்சியைக் கையாள்வதில் மெத்தனமாகவும் பொறுப்பின்மையுடனும் செயல்பட்ட பிரதமர் நஜிப் பதவி துறக்க வேண்டும். அதனை அவர் செய்யமாட்டார். அதனைச் செய்ய வேண்டியது மக்கள்தான்.

 

கம்யூனிஸ்ட் பூச்சாண்டி

 

பெர்சே 3.0 428 பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி என்ற பிரதமர் நஜிப்பின் கூற்றுக்கு நேரடியான ஆதாரம் எதனையும் நஜிப் அளிக்கவில்லை. அவரது தற்போதைய போலீஸ் படையின் தலைவரோ உள்துறை அமைச்சரோ அப்படி ஒரு முயற்சி இருப்பதாகக்கூட பேரணி நடப்பதற்கு முன்பு கூறவில்லை. .

 

ஆனால், போலீஸ் படையின் முன்னாள் தலைவர் ஹனிப் ஒமார் பிரதமர் நஜிப்பின் கூற்றை ஆதரித்துள்ளார். ஹனிப்பினிடம் இருந்த ஆதாரங்கள் என்ன?

 

பெர்சே 3.0 428 பேரணியில் கம்யூனிஸ்ட் அனுதாபிகள் இருந்தனர். அவர்களின் வியூக முறைகள் கையாளப்பட்டன. இவைதான் அவரிடமிருந்த ஆதாரங்கள். அவற்றை அவர் படங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார். இந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் அவர் நஜிப்பின் கூற்றை ஆதரித்தார்.

 

கம்யூனிஸ்ட் அனுதாபிகள் நாட்டில் இருந்தால், அவர்கள் பெர்சே பேரணியில் கலந்துகொள்வார்கள் என்பது உள்துறை அமைச்சருக்கும் போலீஸ் படையினருக்கும் தெரிந்திருக்காதா? அவர்கள் பேரணியில் கலந்து கொண்டால் அரசைக் கவிழ்க்கப் போகிறார்கள் என்றாகிவிடுமா? அதுதான் நடக்கும் என்றால், போலீசார் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை? பேரணியால் பாதுகாப்புக்கு மிரட்டல் இல்லை என்று ஏன் அறிவிக்க வேண்டும்?

 

கம்யூனிஸ்ட் அனுதாபிகளைத் தம்மால் அடையாளம் காண முடிந்தது என்று ஹனிப் கூறுகிறார். அவரால் முடியும். கம்யூனிஸ்ட் அனுதாபிகள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார்? அவர்கள் அப்பேரணியில் காணப்பட்டாலும் அவர்கள் பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது என்று தடை செய்யும் சட்டம் ஏதேனும் உண்டா?

 

ஹனிப் சுட்டிக் காட்டியுள்ள கம்யூனிஸ்ட் அனுதாபிகள் யார்? ரஷ்யர்களா? சீனாவின் சீனர்களா? இந்தியாவின் இந்தியர்களா? ஆப்ரிக்கர்களா? அல்லது ஐரோப்பியர்களா? அல்லது சந்திர மண்டலத்தவர்களா? அப்படி ஏதும் இல்லை.

 

கம்யூனிஸ்ட் அனுதாபிகளை அப்பேரணியில் தாம் கண்டதாக ஹனிப் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால், அவர்கள் முன்னாள் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) உறுப்பினர்களாக இருக்கலாம். ஹனிப் அடையாளம் கண்ட கம்யூனிஸ்ட் அனுதாபிகள் அவர்கள்தான் என்றால், அந்த அனுதாபிகள் அப்பேரணியில் கலந்துகொள்வதற்கான தடை ஏதும் விதிக்கப்படவில்லை. அது அந்த கம்யூனிஸ்ட் அனுதாபிகளின் உரிமை. அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கியது மலேசிய அரசாங்கமும் அதனைப் பிரதிநிதித்த மலேசிய பிரதிநிதிகளில் ஒருவரான ஹனிப்பும்தான்.

 

மலேசிய அரசாங்கத்திற்கும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் தாய்லாந்தில் டிசம்பர் 2, 1989 இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு சிபிஎம் உறுப்பினர்கள் மலேசிய அரசியலில் பங்கேற்கும் உரிமையை அளிக்கிறது:

 

“7.1 Members of the CPM and members of the disbanded armed units, who are Malaysian citizens, are free to participate in political activities including the formation of a political party or parties within the confines of the Federal Constitution and the laws of Malaysia.”

 

இந்தப் பிரிவின் கீழ் சிபிஎம் உறுப்பினர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹாஜ் யாத்திரைக்கு செல்லவும் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. பேராக் சுல்தானின் தரிசனம் பெற்றவர்களும் உள்ளனர். ஆகவே, அவர்களின் யாரேனும் அப்பேரணியில் கலந்துகொண்டிருந்தால் அது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி என்றாகிவிடாது.

 

மேலும், ஹனிப்பின் கூற்றை அறவே நம்ப முடியாது ஏனென்றால் அவருக்குப் பின்னர் ஐஜியியானவரும் சிபிஎம் மலேசியா 1989 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் மலேசியாவின் சார்பில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான ரஹிம் நோர், பெர்சே பேரணயின் பின்னணியில் இருந்தவர்கள் மார்க்சிஸ்ட்கள் அல்லர். அவர்கள் பின்பற்றிய வியூகங்கள்தான்
மார்க்சிஸ்ட் போன்றது என்றார்.

 

பெர்சே பேரணி 3.0 அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி என்று பிரதமர் நஜிப் சுமத்திய குற்றச்சாட்டு கடுமையானது. பெர்சே 3.0 பேரணி நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டத்தைக் கொண்டிருந்ததா? அத்திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மேற்கொண்டதா? அதற்கான ஆதாரங்கள் என்ன?

 

எவ்வித ஆதாரங்களையும் பிரதமர் முன்வைக்கவில்லை. உள்துறை அமைச்சரிடம் எதுவும் இல்லை. தற்போதைய ஐஜிபி எதுவும் கூறவில்லை. முன்னாள் ஐஜிபிகள் கண்டார்கள், ஆனால் எதனையும் காணவில்லை. துணை அமைச்சர் சைபுடின் பிரதமரின் கன்னத்தில் அறைவதுபோல் அப்பேரணி கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கவில்லை என்பதோடு ஆட்சி கவிழ்ப்பு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

 

மேலும், இன்று (ஜூன் 13) நாடாளுமன்றத்தில் எதிரணியினரின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பெர்சே 3.0 பேரணியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதற்காக ஆதாரங்களை வெளியிடுமாறு பிரதமரை கேட்டிருந்ததற்கு வேறொரு அமைச்சரின் மூலம் கிடைத்த பதில் ஆட்சியைக் கவிழ்க்க “போத்தல்கள்” போதும் என்பதாகும்.

 

இப்பதிலிலிருந்து தமது ஆட்சியையும் பதவியையும் நிலைநிறுத்திக்கொள்ள பிரதமர் நஜிப் நம்பத்தகாத பயங்கரமான, கொடூரமான குற்றச்சாட்டுகள் எதனையும் எவருக்கும் எதிராகச் சுமத்துவார் என்பது தெளிவாகிறது.

 

பெர்சே 3.0 பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்ற அவரது நம்பத்தகாத குற்றச்சாட்டைவிட மனச்சாட்சியற்ற, படுபயங்கரமான பொய்க் குற்றச்சாட்டை பெர்சே தலைவர் அம்பிகாவுக்கு எதிராகச் சுமத்தியவர்தானே இந்த “நம்பிக்கை” நஜிப்!

 

“அம்பிகாவை யாருக்குத் தெரியாது? அவர்தான் இஸ்லாத்தை மிரட்டியவர். அவருக்குக்கீழ் மாட் சாபு” என்று நஜிப் கூறியபோது அவர் தம்மை “இஸ்லாத்திற்கு மிரட்டலானவர்” (Ambiga related, Najib had labelled her as a “threat to Islam” when he said: “Who doesn’t know Ambiga. She’s the one who threatened Islam. And below her is Mat Sabu.”) என்று முத்திரை குத்தியதாக அம்பிகா கூறியுள்ளார்.

 

அம்பிகா “இஸ்லாத்தை மிரட்டியவர்” என்ற நம்பத்தகாத “நம்பிக்கை” நஜிப் சுமத்திய குற்றச்சாட்டும் பெர்சே 3.0 பேரணி அவரது அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொண்ட முயற்சி என்ற அவரது அடுத்தக் குற்றச்சாட்டும் ஒரே மாதிரியான பொய்க் குற்றச்சாட்டுகள் என்பதை நம்பலாம்.

TAGS: