நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்!

சுவாராம் மனித உரிமைக் கழகத் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுத்துடன் நேர்காணல்…

செம்பருத்தி: நமது பிரதமர் நஜிப் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறேதே? இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.

கா. ஆறுமுகம்:  இந்தியர்களுக்கு அதிகமான ஒதுக்கீடும், பல வகையான திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமர் நஜிப் துன் ரசாக் மக்களின் பலத்த வரவேற்பை பெற்றதில் வியப்பில்லை.

நஜிப்பின் இந்த 3 ஆண்டுகளில் செய்ததை இதுவரை எவரும் செய்யவில்லை. 2009-ஆம் ஆண்டு முதல் அவரது தலைமைத்துவத்தில் இந்தியர்கள் பெற்றதாக கூறப்படுபவை: அடையாள அட்டை மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் 6,000; பொதுச் சேவை இலாகா உபகாரச் சம்பளம் 10% இந்தியர்கள்; மற்றும் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்கு ரிம 340 மில்லியன்; புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்ட 7 உரிமங்கள் போன்றவையும் அடங்கும்.

இவற்றை அறிவித்த அல்லது செயலாக்க முனைந்த பிரதமருக்கு நன்றி. இவையெல்லாம் காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததா? அல்லது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற வினாக்களையும் எழுப்புகின்றன.

செம்பருத்தி: ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

கா. ஆறுமுகம்:  நஜிப் தனது 25-ஆவது வயதில் துணையமைச்சராக அமைச்சரைவில் நுழைந்து இன்று தனது 59 ஆவது (அடுத்த 23-ஆம் தேதியோடு) பூர்த்தியாகும் நிலையில் பிரதமராக உள்ள நஜிப் இந்தியர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் கரைத்துக் குடித்தவராகத்தான் இருக்க வேண்டும். கல்வி அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், தற்காப்பு அமைச்சராகவும், பண்பாடு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தவர் இவர்.

15 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன!

நஜிப் கல்வியமைச்சராக (1995-2000) இருந்தபோது ஏழாவது மலேசியத் திட்டம் அமுலாக்கத்தில் இருந்தது அப்போது ஆரம்ப கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரிம. 2,631 மில்லியன். அதில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டது 10.9 மில்லியன் மட்டுமே. இது 0.41 சதவிகிதமேயாகும். அப்போது இருந்த மொத்த தமிழ்ப்பள்ளிகள் 541-லிருந்து 526-ஆக குறைந்தன. அதாவது நஜிப் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் 15 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன.

ஸ்கோர்பின் ஊழல்

அதையடுத்து நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்த காலத்தில் (2000-2008) மலேசியா இரண்டு ஸ்கோர்பின் நீர்மூழ்கி கப்பல்களை ரிம 7.3 பில்லியன்களுக்கு வாங்கியது. இது தொடர்பாக லஞ்ச ஊழல் வழக்கு ஒன்று பிரான்ஸ் நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த ஊழலில் தனது பங்கை வசூல் செய்ய வந்த 28 வயதுடைய மங்கோலிய நாட்டு அழகி அல்தான்தூயா அக்டோபர் 18, 2006-ல் சா அலாமில் உள்ள காட்டில் சி-4 என்ற வெடிகுண்டால் அழிக்கப்பட்டார். இது சார்பாக இரண்டு காவல்துறையினருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

இவற்றைக் கொண்டு சிந்தனை செய்தால், 34 வருடங்களுக்கு மேலாக நாட்டை ஆள்வதில் ஈடுபட்டிருந்த இவர் இந்தியர்களை புறக்கணிக்க காரணம் அம்னோவின் இனவாதம்தான்.

செம்பருத்தி: ஒரே மலேசியா பிரதமரிடம் இனவாதம் உள்ளதா?

கா. ஆறுமுகம்:  நஜிப்பின் அம்னோ வரலாறு எத்தகைய இனவாதமுடையது என்பதை அவர் அம்னோ இளைஞர் பிரிவு தற்காலிக தலைவராக பதவியேற்றபோது வெளியானது. 1987-இல் கோலாலம்பூர் கம்போங் பாருவில் நடந்த அம்னோ இளைஞர் பிரிவு ஆர்ப்பாட்டத்தின்போது நஜிப்பின் உரை மோசமான இனவாத உரையாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து அரசாங்கம் நடத்திய ஓப்ராசி லாலாங் என்ற நடவடிக்கையில் 106 நபர்கள் இசா என்ற உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். அம்னோ தன்னை வலுப்படுத்த மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. 1988-இல் நஜிப் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவராக மகாதீரால் நியமிக்கப்பட்டார்.

பிரித்தாளும் ஒரே மலேசியா

1993 முதல் அம்னோவில் உதவித் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட நஜிப், 2009-இல் அம்னோ தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதன் வழி நாட்டின் பிரதமராக ஏப்ரல் 3, 2009-இல் பதவியேற்றார். பிரதமராக உள்ள நஜிப் தனது அம்னோவின் ஆதரவை பெற்றால் மட்டுமே தனது செயலாக்கத்தை தொடர இயலும். அம்னோவின் இனவாத கொள்கையால் இன்று தேசிய முன்னணி தவிடு பொடியாகி வருகிறது. இதை சீரமைக்க தொடர்ச்சியான இனவாத கொள்கைகளே அமுலாகப்படுகின்றன.

நஜிப் பிரதமராக வந்த பிறகு அவர் தனது செயலாக்கத்தில் காட்டுவதெல்லாம் எப்படி இந்தியர், சீனர்களை பிளவு படுத்தி சாந்தப்படுத்துவது என்ற வகையில்தான் உள்ளது. இந்தியர்களிடையே உள்ள மொழி-இனப் பிரிவுகள் (மலையாளி, தெலுங்கு, சீக்கியர், ஐயர், இலங்கைத் தமிழர்) அடையளாம் காணப்பட்டு நிதிகள் வழங்கப்படுகின்றன. சமூக அமைப்புகளுக்கு (இந்து சங்கம், ஸ்ரீமுருகன் நிலையம், சைல்டு, ஈடபல்யுஆர்எப், இந்து இளைஞர், மணிமன்றம், எழுத்தாளர் சங்கம், வாணிப அமைப்பு, இப்படியாக..) நிதிகள் வழங்கி அவர்களது வாயை அடைக்க முயல்கின்றனர். வெகுசன மக்களுக்கு இலவச பணம் கொடுத்து ஓட்டு வாங்க முற்படுகின்றனர். இவற்றையெல்லாம் அம்னோவின் தலைவர் எதற்காக செய்கிறார்? புன்னகையுடன் பவணிவரும் பிரதமர் நஜிப், இது வரையில் மக்களின் பிரதமர் என்ற நம்பிக்கையை இந்தியர்களிடையே ஊடுருவச்செய்ய அனைத்து ஊடகங்களையும் வெகுவாக பயன்படுத்துகிறார்.

செம்பருத்தி: பிரதமரின் உண்மையான முகம் என்ன?

கா. ஆறுமுகம்:  ஒரு பொறுப்பான அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை பிரதமர் செயல்படுத்த வேண்டும். ஆனால், அதைச் செய்ய அம்னோ விடாது. அரசாங்கம் என்பது அம்னோவின் கட்டுபாட்டில்தான் இயங்க வேண்டும் என்பதை ஏற்க தவறும் யாரும் அம்னோவின் தலைவராக நீடிக்க இயலாது, எனவே பிரதமராகவும் நீடிக்க இயலாது. நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்.

செம்பருத்தி: தேர்தலில் தேசிய முன்னணி வென்றால் நிலமை என்னவாகும்?

கா. ஆறுமுகம்:  தேசிய முன்னணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்றால், அடுத்து வரும் ஆண்டுகளில் மலேசியா கடுமையான கட்டுப்பாட்டுக்குள் தள்ளப்பட்டு அம்னோ தனது இழந்த பலத்தை உறுதி செய்ய இனவாதத்தை மேலும் ஆழமாக்கும்.

அம்னோ நஜிப்பை பசுத்தோல் போர்த்திய புலியாக உலாவ விட்டுள்ளது. அவ்வளவுதான் கதை!

 

————————

குறிப்பு: இந்தியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துகள், நேர்காணல்கள் என்பவை எதிர்வரும் நாட்களில் செம்பருத்தி இணையத்தில் தொடர்ந்து இடம்பெறும் என்பதை வாசர்களுக்கு அறியத்தருகின்றோம். செம்பருத்தியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!

TAGS: