பெண்டாத்தாங்: கிறுக்கர்களின் தலைவர் நஜிப்

-ஜீவி காத்தையா, ஜூன் 25, 2012.

இந்நாட்டு குடிமக்களான சீன சமூகத்தினரை “வந்தேறிகள்” (பெண்டாத்தாங்) எனக் கூறுபவர்கள் “கிறுக்கர்கள்”. அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஜூன் 24, 2012 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் 2,000 சீன இளைஞர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் நஜிப் கூறினார்.

இந்திய இளைஞர்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அவர் அவ்வாறு கூற தயங்கமாட்டார் என்று நாம் நிச்சயமாக கூறலாம். ஏனென்றால், நஜிப் அம்னோவின் தலைவர். அம்னோ தலைவர்களின் சொல்லும் செயலும் வேறுபட்டவை.

“சீன சமூகத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே சிலர் அந்தக் கருத்துக்களை சொல்லியிருக்கின்றனர். ஆனால் தமது நிர்வாகம் அந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை”, என்று நஜிப் சிறிதும் நெஞ்சுறுத்தலின்றி கூறுகிறார்.

இந்நாட்டு சீன சமூகத்தினரை மட்டுமல்ல, மலாய்க்காரர் அல்லாத இதர இனத்தினர்களுக்கு  இந்நாட்டில் இடமைல்லை. எல்லாம் மலாய்க்காரர்களுக்கு என்ற ஆதிக்க உணர்வை வலியுறுத்தும் பயிற்சிகளை நடத்தும் குடியியல் பயிற்சி கழகம் (Biro Tata Negara) பிரதமர்துறை அமைச்சிலிருந்து இயங்கிறது. இங்கிருந்துதான் இந்தக் “கிறுக்கர்கள்” உருவாக்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தலைவராக இருப்பவர் அம்னோவின் தலைவரும் நாட்டின் பிரதமருமான நஜிப்!

சீனர்களும் இந்தியர்களும் வந்தேறிகள். அவர்கள் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் திரும்பிப் போக வேண்டும் என்று கூறும் அந்தக் கிறுக்கர்களின் கருத்தை தமது நிர்வாகம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று நஜிப் கூறினார்.

அந்தக் கிறுக்கர்களின் கருத்தை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது சரிதான். ஏனென்றால், அவர் “பகிர்ந்து கொண்டார்” என்றால், அதில் அவரின் பங்கைக் குறைத்து மதிப்பிடுவதாகும். வந்தேறிகள் என்ற கொள்கையை உருவாக்கி, வளர்த்து, பிடிஎன் மூலம் பரப்பி வருபவர்கள் அம்னோ தலைவர்கள்தான், நஜிப் உட்பட.

அம்னோவின் முதல் தலைவர் ஓன் பின் ஜாபார், சீனர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இந்தோனேசியர்களை கொண்டு வருவோம் என்றார்.

“தந்தை” அப்துல் ரஹ்மான், மலாயா மலாய்க்காரர்களுக்கே என்றார்.

தமது பாட்டன், முப்பாட்டான் யார் என்று கூற கூச்சப்படும் மகாதீர் முகமட் “விருந்தாளிகள் (வந்தேறிகள்) விருந்து முடிந்ததும் வீடு திரும்ப வேண்டும்” என்றார். ஆனால், அவரது மகள் மரீனா, இந்நாட்டில் உண்மையான மலாய்க்காரர்கள் யார் என்று கேட்டு விட்டு, தாம் இல்லை என்று பதிலும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட மலாய்க்காரர்களின் மூளையைச் சலவை செய்வதும் பிடிஎன்னின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

சீன மற்றும் இந்திய மாணவர்களை பல்வேறு வழிகளில் அவமானப்படுத்தும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பிடிஎன் பயிற்சி பெற்றவர்கள். அரசாங்க ஊழியர்கள், அரசாங்க உபகாரச் சம்பளம் பெறும் மாணவர்கள் அனைவரும் பிடிஎன் பயிற்சியில் பங்கேற்பது கட்டாயமாகும். அதற்காக, பிரதமர்துறையிலிருந்து இயங்கும் பிடிஎன் ஆண்டுதோறும் பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிடுகிறது.

பிடிஎன் பயிற்சிகளை நடத்துபவர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள். அங்கு நடத்தப்படும் பயிற்சிகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மனப்பாதிப்புகளையும்  பின்விளைவுகளையும் எதிர்க்கும் பலர், மலாய்க்காரர்கள் உட்பட, பிடிஎன் பயிற்சி நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி அவ்வாறான கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இனவாதத்தின் தந்தை முன்னாள் பிரதமர் மகாதீர், இஸ்லாம் ஹதாரியின் தந்தை, இன்னொரு முன்னாள் பிரதமர், அப்துல்லா படாவி போன்றோர் பிடிஎன் நாட்டின் இளைஞர்களுக்கு நாட்டுப் பற்றை போதிக்கும் கடப்பாடு கொண்டுள்ளதால் அப்பயிற்சிகள் தொடர வேண்டும் என்று கூறுகின்றனர்.

அம்னோவில் உதவித் தலைவராக இருந்த காலத்தில் பிடிஎன் பயிற்சிகளில் பங்கேற்று அம்னோவின் கொள்கைகளுக்கு ஏற்ப போதனைகள் செய்ததை அன்வார் இப்ராகிம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் அவ்வாறு செய்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், சிலாங்கூர் மாநில அரசு அதன் ஊழியர்கள் மற்றும் மாநில அரசுக்குச் சொந்தமான உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பிடிஎன் பயிற்சிகளில் கலந்துகொள்வதற்குத் தடை விதித்துள்ளது.

ஆனால், தமது அமைச்சிலிருந்து தமது முழு ஆதரவுடன் இயங்கும் பிடிஎன் குறித்து நஜிப் கூறுவதெல்லாம் பிடிஎன் பற்றிய வாதங்களை நிறுத்துங்கள் என்பதுதான். இப்போது அது கிறுக்கர்களின் வேலை என்கிறார்.

அந்தக் கிறுக்கர்களை உருவாக்கி, நாட்டில் இனவாதத்தை வளர்க்க அவர்களை பயன்படுத்துவது யார்? நஜிப்தானே!

TAGS: