-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூன் 26, 2012.
தைப்பூசம் அல்லது இந்து மதம் குறித்து தாம் எவ்விதக் குறைகூறல்களையும் வெளியிடவில்லை என்று பாஸ் துணைத் தலைவர் சலாஹுடின் அயுப் கூறியுள்ளார்.
கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தாமல் பேரணிகளை அமைதியான முறையில் நடத்த முடியும் என அவர் கூறியுள்ளார். பாலிங் ஆர்ப்பாட்டம், தைப்பூச திருவிழா, மௌலிதூர் ரசுல் கொண்டாட்டம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.
ஆனால், மஇகா இளைஞர்கள் பாஸ் துணைத் தலைவரின் இக்கருத்தைப் புரிந்து கொள்ளாமல் அவரிடமிருந்து மன்னிப்பு கோருகின்றனர்.
தைபூசத்தின்போது பக்தர்கள் தங்கள் சுயநிலை மறந்து செல்வார்கள் என தாம் குறிப்பிட்டதாக சலாஹுடின் அயுப் கூறினார். மெய்யன்பர்கள் அருளுடன் காவடி சுமந்து செல்லும் நிலையை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று, மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நாடாளுமன்றத்தில் சந்தித்து சலாஹுடின் விளக்கம் அளித்தார். நானும் அங்கிருந்தேன். அவர் கூறிய கருத்தை நான் புரிந்து கொண்டேன். ஆனால், மஇகா இளைஞர்கள் அதனை அரசியல் விவகாரமாக்கியுள்ளனர்.
ஆனால், இதில் ஒரு வினோதம் உண்டு. அம்னோ எத்தனையோ தடவைகளில் மனம் புண்படும்படியான கருத்துகளை வெளியிட்டுள்ளது. அப்போதெல்லாம் மஇகா வருத்தப்படவில்லை; வாய் திறக்கவில்லை.
இந்தியர்கள் “கீழ்ச்சாதி மக்கள்”, “வந்தேறிகள்”, “கூச்சல்காரர்கள்”, “பிச்சைக்காரர்கள்”, “குரங்குகள்”, “என் பிட்டத்திற்குள் உள்ளவர்கள்” என்று பல கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அம்னோ நம்மை பல தடவைகளில் சிறுமைப்படுத்தியுள்ளது.
அது மட்டுமா? சில ஆசிரியர்கள் இந்திய மாணவர்களை தாழ்ந்த சாதியினர் என்றும், நாய்கள் என்றும், இந்தியர்கள் இந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறியுள்ளனர். இவை யதார்த்த வார்த்தைகள் அல்ல! இந்தியர்களை வேதனைப்படுத்தவே அத்தகைய வார்த்தைகளும் வாக்கியங்களும் பயன்படுத்தப்பட்டன.
ஆனால், அப்போதெல்லாம் மஇகா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கூச்சலிடவில்லை. அம்னோவை தளபதியாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் சேவகர்கள் போல் ஏவலுக்கு ஓடிக்கொண்டிருந்தது.
கண்ணீர்ப்புகை, நீர்ப்பாய்ச்சல் ஆகியவை இன்றி ஊர்வலங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என பிற சமயத் திருவிழாக்களோடு தைப்பூசத்தையும் எடுத்துக்காட்டாக கூபாங் கிரியான் நாடாளுமன்ற உறுப்பினரான சலாஹுடின் அயுப் குறிப்பிட்டதை சர்ச்சையாக்கி வேடிக்கை பார்க்கிறது மஇகா!
இந்தியர்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்படவில்லை. எத்தனையோ இந்திய சகோதார சகோதரிகள் இங்கு நாடற்றவர்களாக இருக்கின்றனர். மஇகாவுக்கும் அதன் இளைஞர் பிரிவுக்கும் அது பற்றி அக்கறையில்லை!
இந்நாட்டில் இந்தோனேசியர்கள், வங்காளதேசிகள் ஆகியோருக்குப் பின்னால் மூன்றாம் தர குடிமக்களாகத்தான் இந்தியர்கள் எனும் அம்னோவின் கூற்றுக்கு மஇகா தலை வணங்குகிறது. அடையாள அட்டையின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் நிலை குறித்த மகஜரை பிரதமரிடம் வழங்க மக்கள் கூட்டணி தலைவர்கள் முனைந்தபோது, அடியாட்களை வைத்துக்கொண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியது இதே மஇகா இளைஞர் குழாம்தான்!
மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு மஇகாவும் அதன் இளைஞர் பிரிவும் கைகொடுக்கவில்லை. அதனால் இந்திய சமூகம் அவர்களைக் கைகழுவி விட்டது. தங்கள் தொகுதி மக்களுக்கு சேவை ஆற்றுவதற்கு அம்னோ மற்றும் மசீச பிரதிநிதிகள் தற்போது பிபிபி கிளைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மலேசிய இந்தியர்கள் மஇகா மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால், இந்தியரின் “நம்பிக்கை”யைப் பெற முயற்சிக்கும் பிரதமரை சுற்றி அவர்கள்தான் இருக்கின்றனர்.
இன அடிப்படையில் இயங்கும் அரசியல் கட்சிகள் தங்களை அடிமைப்படுத்த இந்தியர்கள் ஒருபோதும் வழிவிடக்கூடாது. 13 ஆவது பொதுத் தேர்தல் இந்திய சமூகத்துக்கு ஒரு திருப்பமாக இருக்க வேண்டும்! மாற்றம் இப்போதில்லை என்றால்,பின் எப்போது?