இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா?

இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா என்று ஒருவர் கேள்வி எழுப்பியவுடன் மானம் ரோசம் உள்ள இந்தியர்கள் வழக்கம் போல் கொடி பிடிக்கத் தொடங்கினர்.

ஆனால் இங்கு நாம் இன்னொரு விஷயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. ஏன் இவ்வாறு கூறுகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்ற சமூகம் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நாம் என்ன அரிசி, பருப்பு, புளிக்கென ஏங்கி நிற்பவர்களா அல்லது அவை இல்லாமல் அல்லோலப்படும் கூட்டமா?

இப்படி இருக்கையில் இம்மாதிரியான பொருள்களை வழங்கும் நிகழ்ச்சிகள் அங்காங்கே நடைபெறும் போது இந்தியர்களைப் பேருந்துகளில் அழைத்து வந்து மானம் இழக்கும் காட்சியையும் நாம் காண்கின்றோம். இதனை ஏற்பாடு செய்வதும் ஒரு இந்திய இயக்கமாகத்தான் இருக்கிறது. பந்தாங் பெர்ஜுந்தையில் நடைபெற்ற நிகழ்வில் நேர்ந்த அவலம் என்ன? பாகான் செராயில் கால் முறிவுக்கு ஆளானது யார்?

இதை தவிர்த்து அன்னதான நிகழ்ச்சிகள். அன்னதானம் ஆலயத்தில் அல்லது ஏதாவது ஆசிரமத்தில் வழங்குவதைக் கேள்விபட்டிருக்கின்றேன். ஆனால், மண்டபத்தில் ஊர் மக்களை அழைத்து வழங்கும் நிகழ்வை இப்பொழுதுதான் கேள்வி படுகிறேன்.

சில தினங்களுக்கு முன் நெகிரி செம்பிலானில் உள்ள பகாவ் நகரில் வசிக்கும் எனது உறவினர் வீட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கு நான் பார்த்த ஒரு அறிவிப்பு பதாகை தான் கீழ்க்காண்பது.

அஸ்திவாரம் ஆட்டம் கண்டு ஆஸ்திவாரமாகி அன்னதானத்தை ஆன்னதானமாக மாற்றியதை நீங்களே அறியலாம்.

தமிழனை மட்டும் இழிவுபடுத்தவில்லை, தமிழுக்கும் இழிவு. நமக்குத் தேவை என்ன? சோறா? நமது வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்ய வேண்டியதே நமது சமூக தலைவர்களின் கடமை. இப்படி சோற்றுக்காக வரிசைப் பிடிக்க செய்யும் மானங்கெட்ட நிகழ்ச்சிகள் தேவையா? ஏன் இந்த அவல நிலை.

நமது சமூகத்தைப் பிச்சைக்கார சமூகமாகப் படம் பிடித்துக் காட்டுவது யார்? நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? மானம் போனால் உயிர் நீக்கும் சமூகமாக கொடிகட்டி வாழ்ந்த நமது சமூகம் இப்பபொழுது கையேந்தி நிற்க செய்வது முறையா?

இதனை எப்படி முறியடிப்பது அல்லது தவிர்ப்பது என்பதைப் பார்ப்போம்.

* இம்மாதிரியான பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் சோறு போடும் நிகழ்ச்சிகளையும் சமூகத் தலைவர்கள் ஏற்பாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

* மானத் தமிழர்கள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது.

* மற்றவர்கள் ஏளனமாக பேசும்பொழுது துடித்தெழும் நாம் இப்படிப்பட்ட
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தலைவர்களையும் இயக்கங்களையும் புறக்கணிக்க வேண்டும்.

* எப்பொழுதும் நாம் சூடு சொரணை மிக்க மானமுள்ள இந்தியன் என்ற
உணர்வை மனதில் கொள்ள வேண்டும்.

என்ன செய்யவேண்டும் நமது தலைவர்கள்? சில குறிப்புகள்:

* வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.

* வியாபார விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

* சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

* நாட்டில் நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்ற உண்மை நிலையை மறைக்காமல் கூறுங்கள்.

* அரசாங்கத் துறையில் நமக்கு வழங்கவேண்டிய நியாயமான வேலை
வாய்ப்புகளையும், பதவிகளையும் பெற்றுத் தாருங்கள்.

ஆக சிந்தியுங்கள். பிச்சைக்கரர்கள் என்று சொன்னவுடன் கோபத்திற்கு ஆளாகாமல் ஏன்? எதனால்? யார் காரணம்? என்ற கேள்விகளைக் கேளுங்கள். உண்மை விளங்கும்.

நான் பிச்சைக்காரர் என்று சொன்னவரை ஆதரிக்கவில்லை. மல்லார்ந்து படுத்து உமிழ்வதற்குச் சமமே அது. ஆனால் இவ்வாறு கூறிட வழி வகுத்தவர்களை மானங்கெட்ட இந்தியன் என்று வருத்தத்துடன் கூறி விடைபெறுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

-மக்கள் நண்பன்.

TAGS: