மனோகரனும் மலேசியக் கொடியும்

“பக்காத்தான் ஆட்சியைப் பிடித்தால் மலேசியக் கொடியை மாற்றுவோம்” என்றும், அது அமெரிக்கக் கொடியைப் போலும், தேசிய முன்னணியின் சின்னத்தை போலவும் ஆகி விட்டதால் அதைத்தான் மக்களிடம் விநியோகிக்கவில்லை என்ற வகையிலான அறிக்கையைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டதற்காக கோத்தா அலாம் சா சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் மலையாளம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

இண்ட்ராஃப் பேரணியில் ஈடுபட்ட பிறகு 13.12.2007-ல் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தில் மற்ற இண்ட்ராஃப் நால்வருடன் கைதான இவர், 512 நாள்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு 9.5.2009-ல் விடுதலையானார். தடுப்பு காவலில் இருந்த நிலையிலேயே மார்ச் 8, 2008-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 7,184 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தா அலாம் சா தொகுதியை வென்றார்.
 
திறமையான வழக்கறிஞரான மனோகரன், எவரெஸ்ட் ‘மூர்த்தியின் பிரேத அபகரிப்பு’ வழக்கில் திருமதி காளியம்மாவின் வழக்கறிஞராக வாதாடிய  இவரது பணி பாராட்டுக்குறியதாகும்.
 
சனநாயக செயல்கட்சியின் அங்கத்தினரான இவர், தனது தொகுதியில் சேவையாற்றும் நிலையும் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் திறனும் இவருக்குச் சவாலாகவே இருந்து வருகின்றன.

ஒருமுறை இலஞ்ச ஒழிப்பு இலாகாவின் வலையிலிருந்து தப்பித்து விட்டதாக இவரைச் சம்பந்தப்படுத்தி ‘சீனார்’ என்ற மலாய்ப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதை தொடர்ந்து இவர் தொடர்ந்து பக்காத்தான் ராயாட் அரசாங்கத்தில் நீடிப்பாரா? என்ற வினாவும் உண்டானது.

மாநில அரசாங்க அளவிலும், சனநாயகக் கட்சி அளவிலும் இவரது பங்கும் சேவையும் மாறுபட்டுத் தன்னிச்சையாகன போக்கையே கொண்டுள்ளது. ஒருங்கிணைந்து சேவையாற்றும் அரசியல் பக்குவம் அற்ற தோற்றத்தையே உருவாக்கும் இவருக்கு அடுத்த தேர்தலில் வாய்ப்பு கிடைப்பது அரிது என்ற நிலை உருவாகியுள்ளது. இவருக்குப் பதிலாக இண்ட்ராஃப் பேரணியின் மற்றோர் இசா கைதியாக இருந்த கணபதிராவ் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

மனோகரனின் நடவடிக்கையால் அவரது சமூகத் தொடர்புகள் கேள்விக்குறியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் சார்புடைய மாநில அரசாங்கத்தின் போக்கை இவர் வன்மையாகக் கண்டனம் செய்தார். கீழ்மட்ட வேலைகள் எதிலும் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ளத் தவறிய இவரது கண்டனங்கள், பெரும்பாலும் இவரது குறிகிய மற்றும்  காழ்ப்புணர்ச்சி காரணங்களையே அடிப்படையாக கொண்டிருந்தன. உதாரணமாக சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி மாணியமான ரிமா 40 இலட்சம் சாதாரணாமான வேர்கடலைக்கு சமம் என்று கேளி செய்தவர் பின்பு அதை வினியோகிக்க தன்னையும் இணத்துக்கொள்ள மாநில முதல் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும்,  மலேசியக் கொடி விவகாரத்தில் இவரைக் யரும் கடுமையாக விமர்சிக்கத் தேவையில்லை. தன்னை எப்போதுமே ஒரு விசுவாசமான பிரஜையாகவும் மனித உரிமை அடிப்படையிலும் செயலாற்றும் வழக்கறிஞராகவே காட்டிக்கொள்ளும் இவருக்கு விமர்சனம் செய்யப் போதிய உரிமையும் உள்ளது. மலேசியாவை ஒவ்வொருவரும் தனது நாடு என்று கூறினாலும் அந்த எந்த அளவிற்கு உண்மையானது என்பதை அறிவோம். அவரது கருத்தை ஏற்க இயலவில்லை என்றால் விட்டுவிடுவதுதான் நாகரிகம், அதைவிடுத்து தொடர்ந்து அவரது நாட்டுப்பற்றைச் சாடுவது அரசியல் சிறுபிள்ளைத்தனமாகும்.

K. முருகன்

TAGS: