லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், 103.9 புள்ளிகள் எடுத்து யி ஸ்லிங் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட போலந்தின் சில்வியா பொகாச்கா 103.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதே போட்டியில் சீனாவின் யூ டான் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
போட்டியின் தகுதிச் சுற்றில் போலத்தின் வீராங்கணை 400க்கு 399 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் இருந்தார்.
எனினும் இறுதிப் போட்டியில் மொத்தமாக 502.9 புள்ளிகளை பெற்ற யி ஸ்லிங்குக்கு தங்கப் பதக்கமும், 502.2 புள்ளிகளை பெற்ற சில்வியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.
நேற்று (28.7.12) அதிகாலை ஐந்து மணிக்கு தான் எழுந்ததாகவும், கூடுதல் அழுத்தத்துடன் தான் இருந்ததாகவும் யி ஸ்லிங் போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.
சீனா மற்றும் தனது பெற்றோருக்கு மிகவும் கடமைப்பட்டுளதாகவும் கூறியுள்ளார் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள யி ஸ்லிங்.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இதே 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றிருந்த செக் குடியரசின் கேத்ரீனா எம்மன்ஸ் நான்காவது இடத்தையே பெற முடிந்தது
இந்தப் பிரிவில் பங்குபெற்ற பிரிட்டனின் ஜெனிஃபர் மெக்கிண்டாஷ் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்