“நாங்கள் முற்றும் முழுதாக காவல்துறையினரை குறைகூறிவிட வில்லை. குற்றச்செயல்கள் குறைந்துவிட்டன என தொடர்ந்து மக்களை ஏமாற்றி வண்ணம்பூசி வரும் அம்னோ அரசியல்வாதிகளைத்தான் நாங்கள் குறைக் கூறுகிறோம்” என்கிறார் குற்றச்செயல்களைத் தொடர்ந்து அவதானித்துவரும் ஒருவர்.
அரசியல்வாதிகள் நேரடியாக தலையிடுகிறபொழுது, காவல்துறையினர் அடக்கப்பட்டு உண்மைகள் வெளிவராமல் போகலாம். சாதாரண மக்களுக்கு இந்நிலை விபரீதங்களைக் கொண்டு வரலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க உருமாற்றுத் திட்டங்கள் மற்றும் தேசிய அடைவுநிலைக்கான முக்கிய துறைகளின் கீழ் குற்றச்செயல்களைக் குறைப்பது முக்கிய கூறாக இருப்பது தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டாலும் பொதுவாக மலேசிய மக்கள் சாலைகளில், பொது இடங்களில் ஏன் தங்களின் சொந்த வீடுகளில் கூட பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவே உணர்கின்றனர்.
தரைவீடுகள் இருக்கிற குடியிருப்புப் பகுதிகளில் கூட பாதுகாப்பு கதவுகளும் பாதுகாவலர்களும் தொடரும் விசாரிப்புகளும் என மக்களுக்குக் குற்றச்செயல்கள் குறித்த பயம் கூடிக் கொண்டே போகிறது. இன்றைய நிலையில் எந்தவொரு சமரசமுமின்றி அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பயமளிக்கின்றன. ஆயுதம் ஏந்தி கொள்ளையடிப்பது இப்போது மிகச் சாதாரணமான நம்மில் பலரால் நேரடியாக பார்க்கப்படும் சம்பவமாகிவிட்டது.
அடிப்படையாகவே குற்றச் செயல்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட நிலையிலும் அரசாங்கம் அதனை மறுக்கின்ற நிலையிலேயே செயல்படுகின்றது. மக்களைக் குழப்புவதற்காக நம்பமுடியாத சாத்தியமற்ற புள்ளிவிபரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
“மக்கள் அச்சத்தில் வாழ்கிறபொழுது குற்றச்செயல் புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்” என்கிறார் ஷா ஆலாமிலுள்ள ஒரு பல்கலைக்கழக மாணவர். “எங்களின் அடுக்குமாடி வாடகை குடியிருப்பில் தங்கி இருப்பதற்கே எங்களுக்குப் பயமாக இருக்கிறது. சாலையில் வாகனங்களைச் செலுத்தும் போதும் நடந்து செல்லும் போதும் பாதுகப்பற்ற சூழலையே உணர்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றச்செயல்களைக் கவனத்திற்குக் கொண்டு வருவது ஊடகங்களின் பொறுப்பாகும். இந்த ஒரு வழியினால் மட்டுமே மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படமுடியும்” என்கிறார் மற்றுமொரு மாணவர்.
அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் நேர்காணல் செய்யப்பட்ட 25 பேரில் 20 பேர் குற்றச்செயல்களில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களாக அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்களாக இருக்கின்றனர். பலர் எப்போதும் பயந்த நிலையிலேயே வேலைக்கு போவதாகும் அதே பயத்துடனே பின் வீடு திரும்புவதாகவும் கருத்து தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்துபவர்கள் – விற்பவர்கள்
வெளிப்படையாகவே பார்த்தோமானால் குண்டர்கள், வழிப்பறி திருடர்கள், வீடு புகுந்து திருடுதல், ஆயுதமேந்திய கொள்ளையர்கள், கற்பழிப்பவர்கள், கொலைக்கார்கள் ஆகியோரிடமிருந்து தப்பிக்க முடியாத ஒரு நிலையில் மக்கள் இருக்கின்றனர். அதிகாரத்துவ தரப்பினரால் துரத்தப்படுவதிலிருந்து தப்பிக்க மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்ட தொடர்புகளைக் கொண்டு முறையாக ஒருங்கிணைப்பட்ட கும்பல்களால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.
பெரும்பாலான போதைப்பித்தர்கள் சம்பந்தப்படும் “மாட் ரெம்பிட்” பாணியிலான திருட்டுகள் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில், தோட்டப்புற குடியிருப்புகளில், அலுவலகத்திற்கு வெளியே அல்லது அலுவலகங்களில் வாகனமோட்டிகளையும் நடந்து செல்பவர்களையும் இலக்கு வைத்து நடத்தப்படுகின்றன. இவ்வாண்டு மே மற்றும் ஜூன் மாத இடைவெளியில் பெட்டாலிங்ஜெயா ஓசிபிடி, இவ்வட்டாத்தில் 319 இடித்துவிட்டு திடிரென்று பறித்து கொண்டு ஓடும் பாணியிலான திருட்டுகள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். மலேசியாவில் பேரளவிலான குற்றச்செயல்கள் இடம்பெறும் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு நாளுக்கு ஏறத்தாழ குறைந்தபட்சம் 5 குற்றச்செயல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
Reuters வழங்கியுள்ள ஓர் அறிக்கையின் படி 2012-ஆம் ஆண்டு நாட்டில் 350, 000 போதைப் பொருயைப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். நாட்டின் சுணக்க நிலை காரணமாக, 2015-ஆம் ஆண்டு வாக்கில் 500, 000 அந்த எண்ணிக்கை உயரலாம். சற்று பின்னோக்கிப் பார்த்தோமானால் 2006ஆம் ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி நாட்டில் 19, 369 போதைப்பித்தர்கள் இருக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபடும் 30-திலிருந்து 40 விழுக்காட்டினர் போதைப்பித்தர்கள் என காவல்துறை புள்ளிவிபரம் கூறுகிறது.
வன்முறையைக் களைவதில் நாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருளை அடியோடு ஒழிப்பது அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும். போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் தொடர்புடைய 80 விழுக்காட்டினர் 15 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்களாக இருப்பதால் இது ஒரு முக்கிய குற்றச்செயலாக கருதப்படுவதற்கு வாய்ப்பாகிறது. ஆனால், இப்போது இருக்கின்ற அரசாங்கம் இந்த அச்சுறுத்தலைக் வேரறுப்பதற்கு எப்படியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது?
வாகனம் தொடர்பான குற்றச்செயல்கள்
ஒரு சிறிய நாடான மலேசியாவில் வாகனத் திருட்டுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் பெருகிவிட்டது வியப்பளிக்கிறது. வாகனங்கள் திருடப்பட்டு சில நிமிடங்களில் பட்டறைகளில் வைத்து பிரித்தெடுக்கப்பட்டுவிடுகின்றன. மிக வேகமாக அண்டை நாடுகளுக்குக் கடத்தப்பட்டும் விடுகின்றன. ஒரு நாளுக்கு ஏறத்தாழ 150 வாகனங்கள் திருடப்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன. முழு வாகனங்களை திருடுவதைத் தாண்டி வாகனங்களில் பொருதப்பட்டிருக்கும் பிற பாகங்களை திருடுகிற வேலையும் மிக வேகமாகவே நடந்து வருவதும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. மிக குறுகிய நேரத்தில் ஒரு கணிசமாக தொகை கிடைப்பதற்கு சொகுசுக்கார்களைத் திருடுதல் லாவகமான தொழிலாகவே இன்றைய நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க தவறி விடுகின்றோம்.
மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களோடு வரும் திருடர்கள் மிக வேகமாக வாகனத்தின் கண்ணாடியை உடைத்து வைத்திருக்கும் பொருள்களைக் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு போய்விடுகின்றனர். இத்திருடர்கள் பேரங்காடிகள், தெருக்கள், ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் எப்போதும் சுற்றித் திரிகின்றனர். தனியே வருபவர்களிடம் வழி கேட்பவர்கள் போலவும் அல்லது அவர்களை மோத வருபவர்கள் போலவும் சிலவேளை தவறுதலாக அவர்களை மோதிவிட்டு அவர்கள் காப்பாற்றுவது போன்ற பல நடைமுறைகளில் திருடுகின்றனர்.
இக்குற்றச்செயல்களில் பெருமளவில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே ஆவர். ஆயுதங்களை வைத்து குழந்தைகளும் பெண்களும் மிரட்டலுக்குள்ளாக்கப்படும்போது அவர் உளரீதியில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இன்றைய நிலையில் பெண்கள் தனித்து வாகனமோட்டுவது கேள்விக்குறியாகிவிட்டது. இப்படியான ஆபத்து நேரத்தில் உதவி கிடைக்காத பல பெண்கள் காயப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, கற்பழிக்கப்படுவது வளர்ந்து வரும் ஒரு நாட்டின் பெரும் அவலமாக கருதப்படுகிறது. நிறைய சம்பங்களில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்துடனே வாழ்கின்றனர்.
புகார் செய்தால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தினால் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பலர் அது குறித்து புகார் செய்வதில்லை. சிலவேளைகளில் திருடப்படும் முயற்சிகளில் தப்பிப்பவர்களும் அது குறித்து புகார் செய்வதில்லை. எனவே, அரசாங்கம் வழங்கும் புள்ளிவிபரங்கள் புகார் செய்யப்படாத இப்படியான சம்பவங்கள் பிரதிபலிக்கவில்லை என்கின்ற போது அது எப்படி 100 விழுக்காடு உண்மையாகும்?
கடந்து ஆகஸ்டு 16லிருந்து 21 வரை கோலாலம்பூரில் மட்டும் 46 வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் முழுமையான நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து வீடு திரும்பியிராத நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
குற்றச்செயல்கள் குறைப்பதில் முறையானவற்றைச் செய்ய தவறிவிட்டனர்?
ஏன் அரசாங்கம் எண்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்? என்கிறார் வழிப்பறிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வங்சாமாஜுவைச் சேர்ந்த ஒருவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது காரினுள் ஏறுவதற்கு முன் 2 வழிப்பறி கொள்ளையர்களிடம் இவர் தனது கைப்பையைப் பறிகொடுத்தார்.
“புள்ளிவிபரங்களை விட நடக்கின்ற சம்பவங்கள் மிக அதிகமாகவே இருக்கின்றது. இது நமது நம்பிக்கையையும் அனுமானத்தையும் காட்டிலும் மேலானது. மக்களுக்கு தங்களின் நற்தோற்றத்தையும் விவேகத்தையும் காட்ட வேண்டும் என்பதற்காக எண்ணிக்கையோடு விளையாடுவது நடப்பு அரசாங்கத்தின் மீது மக்கள் தமது நம்பிக்கையை இழப்பதற்குக் காரமாகிவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நடக்கின்ற அனைத்து வகையான குற்றச்செயல்களையும் மக்கள் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும், தாங்களாக அனுபவித்துக் கொண்டும் அல்லது படித்துக் கொண்டும் இருக்கின்றனர். “ஒரு மனிதனைப் பாதிக்கின்ற குற்றச்செயல்கள், அரசாங்கம் குற்றச்செயல்களைக் களைய உரிய முயற்சிகள் எடுக்கவில்லை என்பதான தோற்றத்தை உருவாக்கிவிடும்” என்கிறார் பாதிக்கப்பட்ட ஒருவர். அதிகாரத்துவ தரப்புகளின் மீது மக்கள் நம்பிக்கை குறைந்துவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் நாடகம்
அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கின்றனர். புள்ளிவிபரங்களை வைத்து தங்களின் அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்ற முயல்கின்றனர்.
புள்ளிவிபரங்களை முன்வைத்தால் நடப்பு அரசாங்கம் எல்லாவற்றையும் மிகச் சரியாக செய்கிறது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடலாம் என நினைக்கின்றனர். எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நம்பிக்கையூட்டுவதும் காவல்துறை தன் கடமையை மிகச் சரியாக செய்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது எனக் கூறப்படும் கூட ஒருவகையான அரசியல் நாடகமே.
புள்ளிவிபரங்கள் பொய்யாகலாம்; ஆனால் மக்களின் உணர்வுகள் பொய்த்துப் போவதில்லை. எண்ணிக்கையைக் குறைத்து கூறி மக்களைத் திருப்தியடையச் செய்வது ஒருபோதும் பயதிலிருந்து அவர்களை விடுபடச் செய்துவிடப் போவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் முன்பிருந்ததைவிட கூடுதலான பயத்துடனே அவர்கள் வாழ்கின்றனர். அரசாங்கம் குற்றச்செயல் விகிதம் 26 விழுக்காடு குறைந்திருப்பதாக கூறிக் கொள்ளலாம். ஆனால், மக்களின் அச்ச உணர்வு அதிகரித்துக் கொண்டே போகிறது.
“ஒவ்வொரு நாளும் நடக்கின்ற குற்றச்செயல்களின் உண்மையான எண்ணிக்கையை நேர்மையான முறையில் அரசாங்கம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதன்வழி நடப்பு சிக்கலை, உண்மை நிலையை மக்கள் விளங்கிக் கொள்ள முடியும். இவ்வெண்ணிக்கைகள் ஊடகங்களில் வெளியிடப் பட வேண்டும். மக்களுக்கு அந்த எண்ணிக்கை போய்ச் சேர வேண்டும்” என்கிறார் ஓர் அரசாங்க அதிகாரி.
குற்றச்செயல்கள் குறித்த பயமும் – குற்றச்செயல்கள் குறித்த எண்ணிக்கையும் ஒன்றோடு என்று தொடர்புடையவை அல்ல. எண்ணிக்கை எப்போதும் மாறலாம்; ஆனால் உணர்வும் பயமும் எப்போதும் எஞ்சி இருக்கும் என்பது மட்டும் நிதர்சனம். நடப்பு அரசாங்கம் குற்றசெயல்களையும் குற்றச்செயல்களை ஊக்குவிக்கின்ற ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் துடைத்தொழிகத் தவறிவிட்டது.
குறைந்த வருமானம் பெரும் மலேசியர்களைத் தொடர்ந்து பாதித்து வரும் நாட்டின் பொருளாதார நிலையே குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகிறது. வருமானம் உயராமல் வாழ்க்கை செலவினங்கள் தொடர்ந்து அதிகரிப்பதும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. மலேசிய பொருளாதாரம் இவ்வாறான மக்களுக்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை ; தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதே இவர்களுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. மில்லியன் கணக்கிலான அந்நிய நாட்டு தொழிலாளர்களை நாட்டிற்குள் நுழைய விடுவதும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகிறது.
அம்னோ தலைமையிலான அரசாங்கம் சமூக சமன்பாட்டைக் கொண்டு வருவதில் தோல்வியடைந்துவிட்டது. தீர்க்கப்படாத சமூக நோய்கள், குடும்ப முறிவுகள், இணக்கமற்ற சட்ட அமலாக்க நடவடிக்கைகள் குற்றச் செயல்கள் தொடர்ந்து பெருகி வருவதற்குக் காரணமாகிவிட்டன.
இன்றைய நிலையில், குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கான நேரடி காரணங்களையும் பிற மறைமுக காரணங்களையும் ஆராய்ந்து அவற்றை முற்றாக துடைத்தொழிக்க முயலும் ஒரு நல்ல அரசாங்கமே நமக்குத் தேவை. பெருகி வரும் குற்றச்செயல்கள் மிக விரைவில் நமது அரசியல் நிலைத்தன்மையை ஆட்டம் காணச் செய்யும் ஆபத்து நேரலாம்.
-தமிழினி, கோலாலம்பூர்.