-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012.
பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர் ஜி. பழனிவேல்.
அதே வாரத்தில், அரசாங்க முகப்பு சேவைகளில் உள்ள இந்திய ஊழியர்களின் எண்ணிக்கையை 1000-லிருந்து 3000 ஆக உயர்த்துவதாக பொதுச் சேவை துறை விடுத்திருந்த அறிவிப்புக்கு பழனிவேல் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இப்படி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடுவதைவிட ம.இ.கா. தலைவர் இந்தியர் உரிமையை நிலைநாட்டுவதே விவேகம். முகப்பு சேவை எதற்கு?
“குறிப்பிட்ட இந்த அலுவலகத்திலும் ஓர் இந்தியர் (பெண்) இருக்கின்றார்” என வாசலில் வருவோர் போவோருக்கு நாடகம் காட்டவா? தரமான பதவியில் அமர படித்த இந்திய இளைகர்களுக்கு தகுதி இல்லையா?
நிரந்த அரசாங்க ஊழியர்களாக இந்தியர்கள் வேலைகளில் அமர்த்தப்படுவது இல்லை. மாறாக பெரும்பாலோர் ஒப்பந்த அடிப்படையிலேயே (Contract Workers) சேர்க்கப்படுகின்றனர்.
இந்நாட்டில் ஒரு காலத்தில் இந்தியர்கள் மருத்துவ, கல்வித்துறைகளில் மேலோங்கி இருந்த போது, அவை உலகத் தரம் பெற்றிருந்தன. ஆனால் இப்போது அதெல்லாம் எழுதப்படாத வரலாறாகிவிட்டது. மலேசிய இந்தியர்கள் இவற்றையெல்லாம சீர்தூக்கி பார்த்து சமூகத்திற்கு சீர்மை கொண்டுவரவேண்டும்.
அரசு சேவைகளில் இந்திய ஊழுயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வரும்போதெல்லாம் ம.இ.கா. ஆனந்த ராகம் பாடும். ஆனால் அறிவிப்பு செயல் வடிவம் பெறாத போது அது மௌன ராகமாகிவிடும். இந்திய சமூகத்துக்கு எத்தனையோ முறை வெற்று வாக்குகுறுதிகள் அளிக்கப்பட்டிருந்தும் ம.இ.கா, ம.மு.க. மற்றும் இதர சில்லறை கட்சிகள் இன்னமும் தே.மு.வை வழிநடத்தும் அம்னோவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன.
1971-ல் அரசு சேவையில் இந்தியர்கள் 17.4 விழுக்காட்டினர் இருந்தனர். ஆனால் 2005-ல் அது 5.12%-டாக சரிந்து தற்போது 4.1% ஆக உள்ளது! இந்த எண்ணிக்கை கூட தமிழ்ப் பள்ளிகள் இன்னமும் உயிரோடு இருப்பதால்தான். (எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்டிருப்பதால்). போலீஸ் துறையில் நம்மவர்களின் விழுக்காடு 3!
தொடக்கக் காலம் முதல் இந்தியர்களின் முழு ஆதரவு இருந்தும், அம்னோவும், ம.இ.கா-வும் அவர்களை ஏமாற்றிக்கொண்டுதான் வந்துள்ளன. 2008-ம் ஆண்டில் பாடம் கற்பிக்கப்பட்டும் மாற்றமில்லை. அம்னோ தனது இனவாத போக்கையும் இறுமாப்பையும் இன்னும் கைவிடவில்லை.
அரசாங்க வேலைகளுக்கு இந்தியர்கள் விண்ணப்பம் செய்வதில்லை என அரசாங்கம் சாக்கு போக்கு சொல்லலாம். ஆனால் அரசுத் துறையில் உள்ள மலாய் அல்லாதாருக்கு நன்கு தெரியும் – எவ்வளவு எளிதாக இந்தியர்களின் விண்ணப்பங்கள் குப்பைக் கூடைகளில் போய் விழுகின்றன என்று. உலக நாடுகளில் மலேசியாவில் மட்டுமே அரசாங்க வேலைகளுக்கு ‘இனம்’ முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. விண்ணப்பித்தவரின் கல்வித் தகுதியோ, செயல் திறனோ கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மலேசியா திறமைசாளிகளையும், வல்லுனர்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களை இறக்குமதி செய்கின்றது.
மலேசியவில் தேசிய பொருளாதாரக் கொள்கை (NEP) அமலில் இல்லை என்றால் 5 மடங்கிற்கும் மேலான அந்நிய முதலீட்டை அது ஈர்க்க முடியும் என உலகப் பொருளக அறிக்கை ஒன்று கூறுகிறது. 15 லட்சம் மலேசிய நிபுணர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் சிங்கப்பூரில் சொகுசாய் பணிபுரிகின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்க, உலகத் தர பொதுச் சேவையை ஏற்படுத்த அரசாங்கம் கனவு காண்கிறது. அம்னோவின் ஆளுமை இருக்கும் வரையில் அது சாத்தியம் ஆகாது. ம.இ.கா. இதுவரை நாடற்றவர்கள், குற்றவாளிகள், ஏழைகள், திறனற்ற இந்தியர்களை உருவாக்குவதில்தான் வெற்றி கண்டுள்ளது. இந்திய சமூகத்துக்கு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் முறை இந்தியர்களை ஓரங்கட்டி புறக்கணிக்கின்றது. அரசியலில் இந்தியவர்கள் பலமற்றவர்களாக இருக்க வகை செய்கின்றது.
அம்னோவுக்கு இந்தியர்களின் வாக்குகள்தான் முக்கியம். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் அதற்கு அக்கறை இல்லை. நாட்டின் வலிமையை இந்தியர்களோடு பங்கிட்டுக்கொள்வதிலும் அதற்கு உடன்பாடு இல்லை. இந்தியர்கள் யாசகர்கள்! அரிசி மூட்டையும், பழக்கூடையும் கொடுத்தால் போதும். அவர்களுக்கு நல்ல தொழிலும் வாணிக வாய்ப்பும் தேவையில்லை என அம்னோ கருதுகிறது.
கடந்த 55 ஆண்டுகால அம்னோ-ம.இ.கா. கூட்டு நட்பில் இந்தியர்களுக்குக் கிடைத்த ‘நற்கதி’ இதுவே!
இந்நிலை மாற வேண்டும். அரிசியல் ரீதியில் இந்தியர்கள் தங்கள் உன்னதப் பங்கை நிலைநாட்டி நாட்டின் வளர்ச்சிக்கு மீண்டும் நாடியாய் இருக்க வேண்டும். அதே வேளை தங்கள் உயிருக்கும் மேலான கௌரவத்தையும் தன்மானத்தையும் இந்தியர்கள் மீட்க வேண்டும்.
அது இப்போது இல்லையெனில் பின் எப்போது?