சலுகைக்காக இந்திய சமூகம் இன்னும் கையேந்த வேண்டுமா?

[சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்]

இந்நாட்டை அந்நியர்களின் சொர்க்கமாக்கி நமக்கு நரகமாக்கி விட்ட பாரிசானின் வஞ்சகத்திற்கு மக்கள் முடிவுக் கட்ட வேண்டிய தருணம் இது.

இன்று இதனைத் தவறவிட்டால் எதிர்காலச் சமூகம் கண்டிப்பாக நம்மை நிந்திக்கும் என்பதனை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள வேண்டும்.

மலேசியர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் பல்வேறு கொடுமைகளுக்கும், இனப் பாகுபாடுகளுக்கும், இன்னல்களுக்கும், முடிவு கட்டி நம் எதிர்கால சந்ததியினரை சமஉரிமை கொண்ட குடிமக்களாக இந்நாட்டில் வாழ வைக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.

அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவுள்ள இன்றையச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள  நமது சமூகம் தவறினால் நமது நாட்டின் வரலாற்றில் நாம் புரிந்த மிகப் பெரிய தவறாக இது இருக்கும். அதுவே எதிர்கால சமூகத்திற்கும், நமது பிள்ளைகளுக்கும் நாம் இழைத்த மாபெரும் துரோகமாகவும் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கு முன் என்றுமே இல்லாத அளவுக்கு பாரிசான் அரசாங்கம்  இந்தியர்களுக்கு சில சலுகைகள்(சலுகைகள், ஞாபகத்தில் கொள்ளுங்கள்) கொடுக்கலாம், ஒதுக்கீடுகளில் சற்று தாராளம் காட்டலாம், பரிவு காட்டுவது போல் நடிக்கலாம். இந்த நடிப்பை  நாமும் ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மை என்று  எண்ணி ஏமாறக்கூடாது. ஒரு கௌரவமான குடிமகன் எங்கும், எதற்கும் சலுகையை  எதிர்பார்க்க மாட்டான். நமக்கு வேண்டியது உரிமை. அந்த உரிமையை வழங்க உத்தரவாதம் அளிக்கும் எவருடனும் நாம் ஒத்துழைக்கலாம்.

இன்று சிறிது பரிவு காட்டுவதைப்போல் நடிப்பவர்களின் ஆட்சிதான் 53 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. அந்த 53 ஆண்டுகளில், வாழ்ந்த சமூகத்தை, கையேந்தும் சமூகமாக்கிய ஓர் அரசை கண்டிக்க வேண்டிய நாமே, அரியணையில் அமர்த்தலாமா?

“பாதகம் செய்வோரைக் கண்டால் மோதி மிதித்துவிடடி பாப்பா….’’ என்றார் பாரதி!

இச்சமூகத்தின் வாழ்வு மேம்பட வேண்டுமென்றால், நமது வாழ்க்கையின் மேம்பாட்டுக்காகவே உழைத்து, உயிர் துறந்த பெரியவர்களின் அறிவுரைகளை, கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று, பாரிசான் அரசு இந்தியர்கள் மீது காட்டும் பரிவு, கொக்கு சிறிய மீனுக்கு காட்டும் பரிவைப்போன்றது. அதன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள போடும் வெளிவேசம் என்பதை நம் சமூகத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நாட்டின் மேம்பாட்டிற்கும், தொழிலாளர்களின் உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் உயிர்துறந்த ஆயிரமாயிரம் இந்தியர்கள் இருக்கையில், எவரையாவது நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளதா இந்நாட்டு அரசு?

அவர்களின் வழித்தோன்றல்களுக்கு இந்நாட்டில் குடியுரிமை இல்லை, பிறப்பு பத்திரமில்லை, இலட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேற சூழ்ச்சி செய்தவர்கள் அம்னோக்கார்கள். ஆனால் இன்று அந்நியர்களுக்கு குடியுரிமை உண்டு, வாக்காளர் தகுதியும் உண்டு.

37 வங்காளதேசிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஒப்புக்கொள்ளப்படாதது இன்னும் எத்தனை? ஓர் இந்தோனேசியரின் மகன் இந்நாட்டின் சகல வசதிகளையும் அனுபவித்து மந்திரி புசாராககூட ஆகலாம், இன்னும் எத்தனையோ இலட்சம் இந்தோனேசியர்களும், பிலிப்பினோக்களும் இந்நாட்டின்  குடிமக்களாகி சிறப்பு சலுகைகளை அனுபவிக்க முடியும்!

ஆனால் இந்தியர்களை நான்காம்தர குடிமக்களாக  நடத்தும் ஓர் அரசாங்கத்திற்கு வெண்சாமரம் வீச எவருக்கும் வெட்கப்படுவதில்லை. ஒருவருக்கு அடையாள அட்டை கொடுத்துவிட்டால், பிறப்பு பத்திரம் கிடைத்து விட்டால், தமிழ் பத்திரிக்கைகளில் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியா? 

இந்நாட்டில் படித்து, இந்த அரசாங்கச் செலவில் கல்வி கற்க வேண்டிய நமது பிள்ளைகள் அன்னிய நாடுகளில் எச்சில் தட்டுக்கழுவியா  கல்வி கற்க வேண்டும்?

இறுதி ஆண்டில் தனது கல்வி தடைபட்டாலும், பணத்திற்கு காவடி தூக்க வேண்டிய நிலையா? படித்து மருத்துவப் பட்டதாரியானலும்  அவர் பட்டத்தை அங்கீகரிக்க இன்னொரு போராட்டமா?

இதுதான்  நாம் வாங்கிய சுதந்திரமா? இல்லை. இது இந்நாட்டு அரசின் அக்கிரமம்,  அநியாயம்: இதற்கு முடிவுகட்டத்தான் நம் சமூகம் புறப்படவேண்டும்.

எவரிடமும் சலுகைக்காக கையேந்த அல்ல!

TAGS: