மாட் சாபுவும் மரமண்டைகளும்

[கா. ஆறுமுகம்]

“மெர்டேக்கா!” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது.

“ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு மலாக்காவை தவிர மற்ற மாநிலங்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்படவில்லை என்கிறார் கூ கே கிம் என்ற வரலாற்று மேதை. இதோடு சேர்ந்து அம்னோ ஒரு புதிய வரலாற்றை படைக்க எதிர்கட்சியான பாஸ் குற்றசாட்டுகளுக்கு உள்ளாக்கியுள்ளது.

சுமார் 150 வருடங்களுக்கு மேலாக மலாயாவை காலனித்துவ ஆட்சியில் வைத்து, அதில் வேலை செய்ய இலட்சக்கணக்கான தொழிலாளர்களை இந்தியா மற்றும் இதர நாடுகளிலிருந்து கொண்டு வந்து, அவர்களது உழைப்பை உறிஞ்சி நாட்டின் வளத்தை கொள்ளையிட்டு இறுதியில் விரட்டி அடிக்கப்பட்ட வெள்ளையர்கள் மலாயாவை ஆண்டவர்களா? ஆலோசர்களா?

வெள்ளையர்களின் ஆதிக்க வெறியை எதிர்த்து போராடிய மலாயாவின் மக்கள் சார்புடைய ஒரு உண்மையான வரலாற்றை நமது வரலாற்றுப் பாடங்கள் சரியாக சொல்வதில்லை.

மலாயா மக்களின் எதிரி யார்? என்பதில் ஐயப்பாடில்லாமல் வரும் பதில் ‘வெள்ளையர்கள்’. ஆனால், இப்போது உருவாகி வரும் வரலாறு அப்படியில்லை, “மலாயாவின் உண்மையான எதிரி கம்யூனிஸ்ட்டு பயங்கரவாதிகள்தான்” என்கிறார்கள் நமது அம்னோ வாதிகளும் அதன் கூஜாவை தூக்குபவர்களும்.
 
பிரபுத்துவ வாழ்க்கையில் குடியும் கும்மாளமாக செயல்பட்ட வெள்ளையர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் மக்கள் வெறுத்தனர். ஈயம், ரப்பர் போன்றவற்றின் உற்பத்தியை பெருக்க மக்கள் வாட்டி வதைக்கப்பட்டனர். இதிலிருந்து விடுதலைபெற மக்கள் சார்புடைய தோற்றங்களாக உருவெடுத்தவைதான் தொழில்சங்கங்களும் பொதுவுடமை சிந்தாந்தத்தைக் கொண்ட கம்யூனிஸ்ட்டுவாதிகளும்.

இவர்களது ஒன்றினைந்த போராட்டம் வெள்ளையர்களை நிலை குழையச் செய்தது. அதில் ஒரு நிகழ்வுதான் ‘புக்கிட் கெப்போங்’ என்ற ஆங்கிலேயர்களின் ஆதிக்க வெறிக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். அதில் ஒரு காவல் நிலையம் முற்றாக தகர்க்கப்பட்டது. அதில் ஈடுபட்ட ஒரு நபரின் பெயர் மாட் இண்ர (முகமட் இண்ர).

ஜோகூர், மூவார் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருந்த புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தை பிப்ரவரி 23, 1950-இல் ஆயுதம் தாங்கிய சுமார் 200 போராட்டவாதிகள் தாக்கினர். இதற்கு தலைமையேற்றவர்தான் மாட் இண்ரா. இதில் சுமார் 40 போராட்டவாதிகளும் 22 காவல்துறையினரும் மாண்டனர். அப்போது ‘மாட் இண்ரா’ ஒரு கம்யூனிஸ்ட்டுவாதியல்ல ஆனால் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தவர்.

இந்த நிகழ்வுக்கு முன்னாலேயே ஆங்கிலேயர்களின் அவசரக்காலச் சட்டம் 1948-ஆம் ஆண்டு பிரகடணப்படுத்தப்பட்டது. அதன்படி கம்யூனிஸ்ட்டுவாதிகளே பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ஆங்கிலேர்களின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

விடுதலை நோக்கி நடக்கும் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுடன் இணைந்து, ஆங்கிலேயர்களை தற்காக்கும் நபர்கள் பலியாவது தவிர்க்க இயலாதது. ஆனால் இதில் தேச உணர்வுடன் விடுதலை நோக்கி செயல்பட்டவர் நாட்டின் வீரரா? அல்லது ஆங்கிலேயர்களுடன் இணைந்து தேச விடுதலைக்கு போராடுபவர்களை எதிர்பவர் வீரரா?
 
மாட் சாபுவின் கருத்து மாட் இண்ரா ஒரு வீரர் என்பதாகும். ஆனால் மாட் இண்ரா ஒரு கம்யூனிஸ்ட்டுவாதி, எனவே அவரை வீரர் என கூறும் மாட் சாபு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு தேசத்துரோகி என்ற வகையில் நிலைமை உள்ளது.

இன்று போர்க்குற்றம் புரிந்த இலங்கையுடன் உலாவும் நமது அரசு, உரிமை நாடுபவர்களை  இஓ –வில் அடைக்கும் அரசு, ஆங்கிலேயர்களை எதிர்த்த மாட் இண்ராவை துரோகி என்கிறது.

TAGS: