மலேசிய இந்து சங்கம் இதற்கு வழி காணுமா ?

இன்றைய நிலையில் பெரும்பாலும் நமது ஆலயங்கள் பல கட்சிகள், பல குழுக்கள், பல பிரிவினைகள் கொண்ட அரசியல் கட்சி போன்று பல ஊர்களில் / பட்டணங்களில் செயல்படும் நிலையால் அரசாங்க திவால் நிர்வாகமும் நம் ஆலயத்திற்குள் நுழையும் நிலை ஏற்ப்பட்டிருப்பது (கந்தன் மலை ஆலயம் பத்திரிக்கை செய்தி ) வேதனையானது ! இவை மிக மிக கேவலமான நிலை !

இந்நிலைக்கு ஆலயத்தை உட்படுத்திய நிர்வாகம் கடுமையான தண்டனைக்குரியவர்கள். இவர்களுக்கு அங்குள்ள மக்கள் தகுந்த தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இனி இதுபோல் நிர்வாகம் நடத்துனர்கள் ஆலயத்தில் அரசியல் விளையாட துணியமாட்டார்கள் !

1970-களில் நம் நாட்டு அரசாங்கம் ஆலயம் சம்மந்தமான, அர்ச்சகர் , நாதஸ்வரம் / தவில் வித்வான் போன்றவர்களை இந்தியாவிலிருந்து வரவழைக்க இந்து சங்க சான்றிதழ் பெறவேண்டும் என முன்மொழிந்த சமயம்.

இந்து ஆலய ஒருங்கிணைப்பு பேரவை என ஒரு அமைப்பு உருவானது. இந்த சான்றிதழ் பிரச்சனை வந்ததும் கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்தினர் நாட்டிலேயே நாங்கள் தான் பெரிய கோவில் நிர்வாகம் கொண்டுள்ளோம்; இந்த தகுதி எங்களுக்குத்தான் தரப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியது மட்டும் அல்ல அவர்களும் நாடளாவிய ஆலய ஒருங்கிணைப்பு சங்கம் உருவாக்கினர்.

காலப்போக்கில் இவையெல்லாம் செயல்பட்டும் செயல் படாமலும் போன கதை ஊர் அறியும் . இவற்றின் இன்றைய நிலை யான் அறியேன்!

இந்து சங்கத்தில் கூட அங்கிருந்த சிலர் கருத்து வேறுபாடு காரணமாக நின்று போராடாமல் (அரசியல் கட்சி போல் ) தன் நலன் /பெருமை பாட இன்னொரு அமைப்பை உருவாக்கி; அமைப்பை இரண்டாக்கி பின் அதிலிருந்தும் இன்னொன்று… இன்னொன்று… என பல்கிய பழங்கதைகள் இன்று வரை நம்மிடையே  ஓய்ந்ததாக வரலாறு இல்லை !

நாம் இப்படியே போனால் இரட்டைப்பூட்டு கோயில் கதவுகள் நமக்கு அவமானச் சின்னங்களாக தொடரும் நிலை தொடரும்!

அன்று போல் இன்று இல்லை !

ஏன் இந்து சங்கம் போன்ற அமைப்புக்கள் இதற்கு பொறுப்பேற்று நாடு முழுதும் முழுவீச்சில் நல்ல சட்டதிட்டங்களை உருவாக்கி, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் நிலையில், சங்கத்தில்
என்னதான் பிரச்னைகள் வந்தாலும் எல்லாமே அதற்குள் தான் என்னும் நிலையில் இனி யாரும் வேறு சங்கமோ /கிளையோ உருவாக்கி இரண்டு படாமல் இருக்கும் வண்ணம் நன்கு திட்டமிட்டு செயல் பட்டால் நாம் மேன்மை பெறலாமே !

கண்ட இடங்களில் கோவில் அமைப்பது, திறமையில்லா சமய அனுபவம் மற்றும் நல்ல திட்டமிடாமல் கோவில் அமைப்பது பிறகு மீண்டும் மீண்டும் திருத்துவது போன்ற வீண் செலவுகள் பண்ணி பொதுப்பணத்தை பாழ்பண்ணுவது போன்ற பல காரியங்களை தவிர்த்து உதவலாமே .

என் பார்வையில் சில ஆலய நிர்வாகங்கள் மக்கள் பணத்தை அவர்களுடைய திறமையின்மையால் ஒன்றுக்கு பத்தாக பாழ் பண்ணுவது காண வெறுப்பே அதிகமாகிறது.

சில ஊர்களில் ஆலய அமைப்பு விரலுக்கேத்த வீக்கம் என்பார்களே (அங்கே கூடும் மக்கள் கூட்டத்திற்க்கேற்ப / பராமரிக்கும் நிலைக்கேற்ப ) அமைந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ,
இவர்கள் திட்டமிடுவார்கள் சில நூறு பேர் கூடும் இடம் போல். ஆனால், வருவதோ ஒரு பத்து… இருபது பேர். வரும் வரவு ஆலய பராமரிப்பு செலவுக்கே போதாது.

இப்படி எண்ணற்ற பிரச்னைகளில் நம் ஆலயங்கள் செயல்பட முடியாமல் திணறுவது ஒரு பக்கம். அளவுக்கு அதிகமாக வரவு பெரும் ஆலயங்களில் ஒழுங்காக கணக்கு வைக்காத கேவலமான நிலை இன்னொரு பக்கம்!

இவை ஒரு குடையின் கீழ் சீர்பெற நமக்கு நாமே நேர்மையான கணக்காய்வு நடுநிலை மன்றம் உருவாக வேண்டும்.

இந்து சங்கம் இதற்கு வழி காணுமா ? இதில் இன்னும் எவ்வளவோ ஒருமைப்படுத்த /சேர்க்க வேண்டும். என் சிறு துளி கருத்துதான் . நாம் ஒன்று படவேண்டும்… வெற்றிபெற!

அன்புடன் ,
நாசா – 30 /10 /2012.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272