அக்கறை உள்ளவர்களை ஆட்சிக்கு அனுப்புங்கள்; ஆட்டிறைச்சி கொடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்

இந்நாட்டில் நடப்பவை, உலகில் நடப்பவை, அரசியல் மாற்றங்கள், பொது அறிவு போன்ற பல விடயங்களில் இந்நாட்டில் வாழும் மற்ற இனங்கள் காட்டும் அக்கறையிலும் ஆர்வத்திலும் சிறிதும்கூட நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே இன்றைய உண்மை.

உரிமை உரிமை என கத்திவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் இந்நாட்டில் அழிந்து கொண்டிருப்பது தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்ல தமிழ்மொழியும்தான் என்று.

இன்று மலாயா பல்கலைகழகம் மலேசியாவின் மூத்த உயர் கல்விக் கழகமாகும். முன்பு இதன் இணையப் பக்கத்தில் ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் பயன்படுத்தப்பட்டது. இப்பொழுதோ ஆங்கிலம், மலாய், சீனம், அராபியம், பெர்சியன் மொழிகள்தான் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் எங்கே போனது?

அதாவது மலேசியாவில் பேசப்படாத அரேபியம், பெர்சியன் மொழிகள் பயன்படுத்தபடுகிறது. ஆனால் மலேசியாவில் முக்கிய மொழியாகிய தமிழ் மொழி காணாமல் போய் விட்டது. இங்கு உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களின் வீரமெல்லாம் மேடையில்தான். இந்த தமிழ் காணமல் போனதை பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தேவை பணம், பதவி, பட்டம் ஒன்றுதான்.

நன்கு கல்வி கற்றவர்கள் பலர், மேடைகளில் தமிழ் மொழி பற்றியும், தமிழர்களின் பால் தங்களின் அக்கறையையும், தமிழுக்கு தாங்கள்தான் முதலில் குரல் கொடுப்பதாகவும், உதவி செய்வதாகவும் பெரிதாக பேசுவர். ஆனால், உண்மையில் இவர்கள்தான் தாங்கள் சொல்வதை தாங்களே கடை பிடிக்க மாட்டார்கள்.

தமிழ் அழிக்கபடும்போதும் தமிழர்கள் அழிக்கப்படும்போதும் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற மகான்கள் வாய்ச் சொல் வீரர்களாகவே இருக்கின்றனர். காரணம் அவர்களுக்கும் தமிழும் தெரியாது அவர்களது பிள்ளைகள் தமிழில் படிக்கப்போவதும் கிடையாது. தமிழ் மொழி மீதான அக்கறை அவர்களின் அரசியல் இலாபத்திற்காக மட்டுமே. இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடு கிடையாது. ஏனென்றால் அனைவரும் தமிழர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள்.

இந்நாட்டில் பிறந்து இந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த நாம், இன்று  இந்நாட்டில் தமிழர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றமா? அதற்குரிய அங்கிகாரத்தை ஆட்சியில் உள்ள அரசாங்கம் நமக்கு வழங்கியுள்ளதா? என்ற கேள்வியும் எழத் தோன்றுகிறது. ஏனெனில் இந்நாட்டில் பிறந்து இந்நாட்டு குடியுரிமையுடன் வாழும் சுமார் 1.6 மில்லியன் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது ஒரு இனத்தின் அடையாளத்தை புறக்கணித்த இந்த அரசாங்காத்தால் எப்படி அனைத்தின மக்களையும் அரவனைத்து ஆட்சி செய்ய முடியும்? இதை வருகின்ற தேர்தலுக்கு முன்பாக நாம்  அனைவரும் சிந்தித்தேயாகவேண்டும்?

இன்று பல்கலைக்கழக அகப்பக்கத்தில் மட்டும் தமிழ் புக்கணிக்கப்படவில்லை பெர்னாமா செய்தி அகப்பக்கம் தொடக்கம் நாட்டிலுள்ள முக்கிய அரச துறை அகப்பக்கங்களிலும், அரசாங்க பணிமனைகளிலும் வங்கிகளிலும் மற்றும் பெரும்பான்மையான மக்கள் தகவல் தொடர்பு இடங்களிலும் தமிழ் சுத்தமாகவே காணாமல் போய் விட்டதோடு அந்த காலி இடத்தை அரேபியம், பெர்சியன் மொழிகள் கைப்பற்றிக் கொண்டுள்ளன. இதற்கு யார் காரணம்?

நன்கு கல்வி பயின்ற மாபெரும் மேதாவிகள் சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் தமிழ் அறிவிப்பு என்றவுடன் தமிழுக்கு “மாபெரும் வெற்றி” என்று வெற்றி களிப்பால் உலகமுழுவதும் இந்த “நல்ல” செய்தியை பரப்பினர். அதேபோல் நாட்டிலுள்ள தமிழ் தினசரிகளும் 21 தமிழர்கள் இந்த அறிவிப்பு பணிக்கு புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டனர் என்று அவர்களின் ஒரு பெரிய புகைபடத்தையையே முதல் பக்கத்தில் பிரசுரித்தார்கள்.

ஆனால், இந்த தமிழ் அறிவிப்புக்கு ஒரு தமிழரும் புதிதாக பணிக்கு சேர்ந்துக்கொள்ளப்படவில்லை. மாறாக மலேசிய விமான நிலையங்களை நிர்வாகிக்கும் அரசு சார்பு நிறுவனம் அதன் கிளை நிறுவனங்களில் இருந்து எட்டு தமிழர்களை இந்த பணிக்கு பயன்படுத்தி கொண்டுள்ளது. அதுவும் சென்னை பயணத்திக்கு மட்டுமே. ஆனால் ஆங்கிலம், மலாய், சீனம், அரேபியம், பெர்சியன், ஐரோப்பா, மற்றும் பல மொழிகள் முழு நேரம் பயன்படுத்தப்படுகின்றன.

நாம் இந்த உலகத்தை விட்டு போகும் முன் மலேசியத் தமிழர்களுக்கு, நாட்டில், உலகில் நடக்கும் அரசியல் மாற்றங்களை பற்றி அறியவும், போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு உண்மையான, நம் சமுதாயத்திற்காக துணிச்சலாக போராடும் அரசியல்வாதிகளை அடையாளம் காட்டுவதே ஆகும். அதற்கான மக்கள் களமே வருகின்ற 13-வது பொதுத்தேர்தல்.

சில அரசியல்வாதிகள் என்ற காலம் போய் பல அரசியல்வாதிகள் தற்போது போலிகளாகவும், சுயநலவாதிகளாகவும், பேராசைக்காரர்களாகவும், பதவிக்காக தங்கள் சமுதாயத்தின் உரிமைகளை கூட விற்பவர்களாகவும், பொய்காரர்களாகவும், போலி வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசுகிறவர்களாகவும், நம் சமுதாயத்திக்கு நடக்கும் அநியாயங்களை துணிச்சலோடு எதிர்த்து அரசாங்கத்தை கேக்காதவர்களாகவும் உள்ளனர்.

வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பின் வாக்களித்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமல் ஆட்சியில் இருந்து கொண்டு “நீங்கள் எனக்கு உதவுங்கள்; நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்று வசப்பு வார்த்தைப் பேசுபவர்களுக்கு வருகின்ற தேர்தலில் பாடம் புகட்ட தமிழ் மக்கள் மிக ஜாக்கிரதையாக தங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தவேண்டும்.

தேர்தலின்போது தமிழர்களுக்கு அரிசிப் பொட்டலங்களையும் ஆட்டிறைச்சியையும் கொடுத்து அவர்களின் வாக்குகளை திருடமுடியும் என்ற காலம் மலையேறவேண்டும். உங்கள் மீதும் இந்நாட்டின் வளர்ச்சி மீதும் அக்கறை உள்ளவர்களை ஆட்சிக்கு அனுப்புங்கள்; ஆட்டிறைச்சி கொடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்…

நன்றி வணக்கம்….

-கரன்ராஜ் சத்தியநாதன்  – 05/11/2012