-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், நவம்பர் 8, 2012.
மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில், கடந்த வார, ஜொகூர், ச்சாஆவில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. குடியுரிமை அங்கீகாரம், நீள அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் போன்றவை இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பாமர மக்களுக்கு அவற்றைப் பெற உதவி செய்வதும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கவும் அந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் மூலம் அறியப்பட்ட அதிர்ச்சி தகவல் என்னவெனில், அன்று அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த நம்மவர்களில் குறைந்தது 25 பேர் இன்னமும் சிவப்பு அடையாள அட்டையுடன் வாழ்ந்து கொண்டு இருப்பதுதான்! (வராதவர்களில் இன்னும் எத்தனை பேரோ?)
அவர்கள் அனைவரும் மலேசிய மண்ணில் பிறந்தவர்கள். 50 வயதுக்கு மேற் பட்டவர்கள். இதில் இன்னொரு வினோதம் என்னவென்றால், அவர்களில் இருவர் சகல வகை ஆதாரப் பத்திரங்களுடன் முறையாக பல முறை விண்ணப்பித்தும் நீள அடையாள அட்டை கொடுக்கப்படவில்லை!
பாதிப்புற்ற மற்ற அனைவரும் ஏழை தோட்டப் பாட்டாளிகள். ஆதாரப் பத்திரம் போதாமையாலும், பதிவகத்தின் முகப்பில் உள்ள அதிகாரிகளால் மரியாதையற்ற முறையில் விரட்டியடிக்கப் பட்டதாலும் 50 ஆண்டுகளாக சிவப்பு அட்டையுடன் அவர்கள் அவதியுறுகின்றனர். 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முந்திய சாட்சி பத்திரங்களுக்கு அவர்கள் எங்கே செல்வார்கள்?
இம்மண்ணில் பிறந்து உழைத்து வாழ்ந்த அப்பாவி இந்திய மக்களுக்கு இந்த நிர்க்கதியா?
ஆனால் பெங்கிராங் உள்ளிட்ட ஜொகூரின் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத முறையில் வந்திறங்கும் இந்தோனீசியர்கள் உடனே மற்ற மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் குடிவைக்கப்படுகின்றனர். இது இன்றளவும் அதுவும் அனுதினமும் நடந்துகொண்டு இருக்கும் இரகசிய விவகாரம். இது எந்த வகையில் நியாயம்? சொந்தப் பிள்ளையைப் பசியில் வாடவிட்டு கள்ளப்பிள்ளையை அள்ளி பாலூட்டுவதா?
இது எதனைக் குறிக்கின்றது? போலீஸ், பதிவு இலாக்கா, மாவட்ட அதிகாரிகள கூட்டாக செய்யும் நாட்டுத் துரோகம்! எப்படியும் ஆட்சியில் இருந்தாக வேண்டும் என்பதற்காக அம்னோ புரிந்துவரும் வெட்டவெளி சூட்சமம்!
இந்நாட்டு இந்தியர், சீனர்களில் சிலர் முறையான பத்திரம் கொண்டிராத ஒரே காரணத்துக்காக அந்நியர்களாக ஓரங்கட்டப்படுவதா? சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படுவதா? தாங்கள் மலேசியர்கள் என்று நிரூபிப்பதற்கு உடன் பிறப்புகளின் அடையாள அட்டை, கம்பத்து பெங்ஹ¤லுவின் உத்தரவாதம், பிரசவம் பார்த்த மருத்துவச்சியின் சாட்சியம், பெற்றோரின் மரண சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க காட்ட வேண்டுமாம்.
ஏழ்மையிலும் அறியாமையிலும் வாழும் சில தோட்டப் பாட்டாளிகள் இத்த கைய பத்திரங்களைக் கொண்டிருக்காததால், காலம் முழுதும் அவர்கள் சிவப்பு நதியில் நீந்த வேண்டியுள்ளது. சமூகநல உதவி, மருத்துவ ஆதரவு, வாக்களிக்கும் உரிமை எதுவுமே கிடையாது!
ச்சாஆ போன்ற சிற்றூரிலே வாழும் இந்தியர்களில் 25 பேருக்கு மேல் சிவப்பு அடையாள அட்டையோடு தவிக்கின்றனர் என்றால் நாடு முழுதும் 300,000 பேர் இருப்பரா?
வந்தவர்களில் இருவரின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை கிடைக்கவில்லை. காரணம் தாய் அந்நிய நாட்டவர். தந்தை மலேசியாராக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு பெற்றோர் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யாததால் அக்குழந்தை ‘முறை தவறிப் பிறந்த’ குழந்தையாகப் பதிவு பெற்றது. தாயின் சொந்த ஊரில் திருமணப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது இங்கு செல்லுப்படியாகவில்லை! இதனால் அக்குழந்தையின் பள்ளிப் பதிவும் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளது. திருமணம் ‘ஆகாமல்’ பிறக்கும் குழந்தைக்கு 13/15A சட்டவிதியின் கீழ் குடியுரிமை கிடையாது. ஆனால் முஸ்லிமாக இருந்தால் அகுழந்தையின் தந்தையின் பெயர் ‘அப்துல்லா’ என பத்திரத்தில் பதிவாகி, அக்குழந்தையும் ‘முறையாகப் பிறந்த’தாக ஏற்றுக்கொள்ளப்படும்!! இதில் கூடவா பாராபட்சம்?
மற்றொரு விவகாரத்தில் போலீஸ் தடுப்பு காவலில் இருந்த ஒரு தாய்க்குப் பிறந்த குழந்தையின் பிறப்புப் பத்திரத்தில், பிறந்த இடம் எனும் வரியில் “சிறைச்சாலை” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர் பெயர் இல்லை. ஆக, அக்குழந்தை வாழ்நாள் முழுதும் “சிறைக் கைதியின்” பிள்ளை எனும் களங்கத்தை சுமக்க வேண்டியுள்ளது. பதிவு இலாக்காவின் இத்தகைய கருணையாற்ற பதிவு முறை ஒரு குழந்தையின் வாழ்வை ‘ஆயுள் துன்பம்’ ஆக்கிவிடுகிறது.
மற்றொரு விவகாரத்தில் மாது ஒருவருக்கு மலாய் மொழியில் படிக்க இயலாததால், குடியுரிமை குறித்த கடிதம் வந்தும் அவர் பதிவு அலுவகம் சென்று அப்பத்திரத்தைப் பெறவில்லை. கடிதத்தில் உள்ள தேதி ஒரு வருடம் பின்னோக்கி ள்ளது. அவருக்கு உதவி செய்வதற்காக செகாமாட்டில் உள்ள பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றோம்.
அங்கே கிடைத்த பதில்? “ஒரு வருடம் ஆகிவிட்டது, இனி அது செல்லுபடியாகாது.குடியுரிமைக்கு மறுபடியும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்!” என்பதுதான். ஆக அந்த இந்தியப் பெண்மணிக்கு தகுதி இருந்தும் குடியுரிமை தக்க நேரத்தில் கைக்கு எட்டவில்லை! ஆனால் அவரே நாட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்த இந்தோனேசியப் பெண்ணாக இருந்திருந்தால் ஒரே நாளில் ‘மலேசிய குடிமகள்’ ஆகியிருப்பார்!
தாய் நாட்டு மண்ணிலே வாழ்ந்தும், இத்தகைய சகுதியில்தான் மலேசிய இந்தியர்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். அவர்களுக்கு சரியான உரிமையும் வழங்கப்பட வில்லை, முறையான தகவலும் கொடுக்கப்படுவதில்லை. குறிப்பாக தோட்டப் பாட்டாளிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். பெல்டா மாதிரி திட்டங்களாவது அவர்களுக்கு இருக்கக் கூடாதா?