ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார விடியலுக்கான செயல் திட்ட அறிக்கையை பெருமளவில் திரண்ட மக்கள் முன்னிலையில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அறிவிப்பு செய்ததை அனைவரும் அறிவர்.
மலேசியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இத்தகைய உறுதியான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டு நம் உரிமைகள் நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது கடந்த 50 ஆண்டு கால பாரிசான் ஆட்சியில் இந்தியர்களுக்கான இந்த உரிமைகளை அமல்படுத்தும் வகையில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக சொல்லிக் கொண்ட தலைவர்கள் போராடி பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டுமே நடைபெறாததின் காரணத்தால் இன்று நம்முடைய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள் பெரும் கொடிய பூதமாக நின்று நம்மை பயமுறுத்திக் கொண்டிருகின்றன.
மலேசிய இந்தியர்களும் சரிநிகர் சமத்துவ உரிமை பெற்ற இந்நாட்டு குடிமக்கள்தான். அவர்களின் உரிமைகள் சுதந்திரம் வழங்கப்பட்ட நாளிலிருந்தே திட்டமிட்டு மறுக்கப்பட்டிருகின்றன. ஆட்சிமுறைக்கு உட்படுத்தப்பட்ட இன ரீதியான கொள்கை அமலாக்கங்களினால் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் மலேசிய இந்தியர்களே. எனவே, அவர்களின் உரிமைகள் நியாமான முறையில் நிலை நிறுத்தப்படவேண்டும் என்று ஹிண்ட்ராப் ஆரம்பம் முதலே உரக்கக் குரல் கொடுத்து தொடர்ந்து போராடி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு புத்ரா ஜெயாவை கைப்பற்றி இந்த நாட்டை ஆள்வதற்கு வரலாறு காணாத அளவில் வாக்கெடுப்பு சமருக்கு தயாரகிகொண்டிருக்கும் பாரிசான் மற்றும் பக்கத்தான் அரசியல் கூட்டணிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள செயல்திட்ட அறிக்கை அமைந்துள்ளது.
ஹிண்ட்ராபின் இந்தச் செயல்திட்ட பரிந்துரை யாராலும் குறை சொல்லப்பட முடியாத அளவுக்கு அமைந்திருகிறது. அந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்த வண்ணம் இருப்பதோடு ஆங்காங்கே இந்தப் பரிந்துரை தொடர்பான விளக்க கூட்டங்களுக்கு அவர்களாகவே முன்வந்து ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதே இதற்குச் சான்றாகும்.
வேலைகளை இழந்து ரப்பர் தோட்டங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சுமார் எட்டு இலட்சம் மலேசிய இந்தியர்களின் சமூக மற்றும் பொருளாதரத்தை உயர்த்தும் திட்டங்கள், மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திக்கும் மேற்பட்ட முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத 4 ஆம் 5 ஆம் பாட்டாளி வர்க்க வாரிசுகளின் சோகங்களை களைவதற்கான பரிந்துரை, அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் அரசாங்கப் பள்ளிகளாக பிரகடனப் படுத்தப்படுவதோடு இத்தனை ஆண்டுகளாக இன ரீதியான கொள்கைகளினால் தொடர்ந்து மறுக்கப்பட்ட இந்தியர்களுக்கான பாலர் பள்ளி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் திட்டங்கள், அரசாங்க மற்றும் அரசாங்க சார்பு நிறுவனங்களில் இந்தியர்களுக்கு அனைத்து நிலைகளிலும் 10 விழுக்காடு வேலை வாய்ப்பு ஒதுக்கீடு, சிறு தொழிலில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள், போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு நிகழும் மரணங்களை முடிவுக்கு கொண்டு வந்து போலீஸ்சாரின் நடவடிக்கைகளை கண்காணிக்க சுயேட்சையான குழுவை அமைப்பது மற்றும் இன ரீதியான பாகுபாட்டை அகற்றும் வகையில் ஐக்கிய நாட்டு பரிந்துறைகேற்ப அனைத்துலக சட்டங்களுக்கு நிகராக நம் மனித உரிமை சட்டங்களை மாற்ற வலியுறுத்துதல் ஆகியவையே ஹிண்ட்ராப் பரிந்துரைத்திருக்கும் செயல்திட்ட அறிக்கையின் சாரமாகும்.
இந்தச் செயல் திட்டங்கள் யாவும் ஹிண்ட்ராப் தலைமையிலான சிறுபான்மை நல அமைச்சின் கீழ் செயல் வடிவம் காணும் நோக்கில், ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திலிருந்து வெறும் இரண்டே இரண்டு விழுக்காட்டை மட்டுமே இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது . ஆண்டுக்கு 4 .5 பில்லியன் என்பது நம் சமுதாயம் இந்நாட்டிற்கு செய்த அர்ப்பணிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றும் பெரிய தொகை இல்லை. அதைப்போலவே ஹிண்ட்ராப் பரிந்துரை செய்திருக்கும் திட்டங்கள் பலனளிக்க துவங்கியதும் கிடைக்கப் போகும் தொகை இதைவிட பெரிய அளவில்தான் இருக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.
பலன் என்று கூறப்படுவது ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் தொழில் திறமை பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றவிருக்கும் சீரிய பொருளாதார பங்களிப்பையும், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்கப் போவதையும் இந்நாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கப்போகும் அசைக்க முடியாத தேசப்பற்றையும் சேர்த்துதான் சொல்கிறோம்.
55 ஆண்டுகளாக புறக்கணிப்பட்ட மலேசிய இந்தியர்களை இந்நாட்டின் வளர்ச்சியில் பங்குபெற செய்ய வேண்டும் என்று மனதார எண்ணம் கொண்டுள்ள அரசியல் கூட்டணிகள் நிச்சயம் இந்த பரிந்துரைகளுக்கு செவி சாய்க்கும். மலேசிய இந்தியர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளமாக விளங்கும் ஹிண்ட்ராபின் பரிந்துரைகள் வெற்றிபெற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.