21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய காமெடி: ‘பாரிசான் அனைத்து இனத்தினரிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது!’

yaasen_najibநேற்று ஜனநாயக செயல் கட்சி (டிஎபி) பேராளர் மாநாட்டில் நடந்தது பாரிசான் நேசனலில் (பிஎன்) நடப்பதில்லை. ஏன்? பாரிசான் அனைத்து இனத்தினரிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது என்று இந்நாட்டு இந்தியர்களை வெற்றிகரகமாக ஓரங்கட்டிய அம்னோ/பாரிசான் அரசின் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார்.

டிஎபி சீனர் ஆதிக்கம் கொண்ட கட்சி. அது மட்டுமல்ல. அது ஒரு குடும்ப ஆதிக்கத்திற்குட்பட்ட கட்சி. லிம் கிட் சியாங் மிக அதிகமான வாக்குகளைப் பெற்றார். இரண்டாவது நிலையில், அவரது மகன் குவான் எங். இன்று சாண்டாக்கானில் மிதவாத ஜனநாயக் கட்சியின் (எல்டிபி) 23 ஆவது பொதுப் பேரவையைத் திறந்து வைத்து ஆற்றிய உரையில் நவம்பர் 25, 2007 ஆம் ஆண்டில் ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களின் எழுச்சியால் 2008 ஆம் ஆண்டில் பினாங்கு, பேராக் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களைப் பறிகொடுத்துவிட்டு இன்று இந்தியர்களுக்கு தோசையும் வடையும் போட்டுக் கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெற பேயாக அலைந்து கொண்டிருக்கும் அம்னோ தலைவர் நஜிப் இவ்வாறு கூறினார்.

டிஎபியில் அப்பனும் மகனும் ஒன்றாவது இரண்டாவது நிலையில். இது என்ன கொடுமை! அவர்களது சொந்தபந்தங்களும் அம்னோ தலைவர்களைப்போல் கட்சியில், அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தவில்லையே என்ற கவலையோ, நஜிப்புக்கு?

umnoஓன் பின் ஜாபார் யார்? ஹுசேன் ஓன் யார்? ஹிசாமுடின் யார்? அப்துல் ரசாக்கும் நஜிப் ரசாக்கும் யார்? ஹுசேன் ஓனும் அப்துல் ரசாக்கும் யார்? நஜிப் ரசாக்கும் ஹிசாமுடினும் யார்?

டிஎபி என்ற பல்லின மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கட்சியில் சீனர்களின் ஆதிக்கம். ஐயோ, அநியாயம்! இப்படி பாரிசானில் நடப்பது இல்லை. பாரிசானில் என்ன நடக்கிறது? பழனிவேலின் ஆதிக்கமா?

“மலாய்க்காரர்களின் மேளான்மை” என்று அம்னோ கொக்கரிக்கிறதே, அதுதான் பல்லினக் கட்சிகளைக் கொண்ட கூட்டணியான பாரிசான் அனைத்து இனங்களுக்கும் வழங்கும் நியாயம். இல்லையா?

மலாயா மலாய்க்காரர்களுக்கே என்று அம்னோ தலைவர் துங்கு அப்துல் ரஹ்மான் கூவினாரே, அதுதான் பாரிசானின் நியாயம். இல்லையா?

புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி) அனைத்து இன மக்களுக்கும் என்று கூறிவிட்டு, மலாய்க்காரர்களுக்கு மட்டும் என்று அமல்படுத்தப்பட்டு வந்துள்ளதே, அதுதான் பாரிசான் நியாயம். இல்லையா?

விருந்து முடிந்ததும் விருந்தாளிகள் (வந்தேறிகள்) திரும்பிப் போக வேண்டும் என்று கூப்பாடு போட்ட மகாதீர், புதிய பொருளாதரக் கொள்கை தொடர வேண்டும் இன்னும் ஒப்பாரி வைக்கிறாரே, அதுதான் பாரிசான் நியாயம். இல்லையா?

இந்நாட்டின் வளம் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும் என்று தத்துவம் பேசிவிட்டு, இந்தியர்களின் சொத்துரிமை உயர்த்துவது அச்சமூகத்தின் பொறுப்பு என்று கைகழுவினாரே அஹமட் படாவி. அதுதான் பாரிசான் நியாயம். இல்லையா?

அப்பனின் நெப்புக்கு (NEP) மாற்றாக நெம்மை (NEM) கொண்டு வந்த மகன் நஜிப், மலாய்க்காரர்களின் பொருளாதார காங்கிரஸ் கொடுத்த நெருக்குதலால் இப்போது பல்வேறு உருமாறுதல் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று, அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் சாமி மேடை கட்டுவது. ஆனால், இவர்தான், 2007 ஆம் ஆண்டு, தீபாவளிக்கு முன்னதாக பாடாங் ஜாவா, ரிம்பா ஜெயா மகாமாரியம்மன் கோயில் உடைக்கப்பட்டது குறித்து கருத்துரைக்கையில், ஏன் அவசரப்பட வேண்டும்; தீபாவளிக்கு பின்னர் உடைத்திருக்கலாமே என்று கூறியவர்.

krishamuddin1987 இல், சுல்தான் சுலைமான் கிளப்பில் அம்னோ இளைஞர் பிரிவினர் நடத்திய பேரணியில் “இதை (கிரிஸை) சீனர்களின் இரத்தத்தில் தோய்க்க வேண்டும்” என்ற பதாகை காணப்பட்டது. அப்போது இவர்தான் அந்த அமைப்பின் தலைவர்.

தாய்மொழிக்கல்வி விவகாரத்தைப் பொறுத்தவரையில் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்பதாகும். அப்துல் ரசாக் 1956 ஆம் ஆண்டில் உருவாக்கிய அக்கொள்கை இன்றும் அம்னோவின் நிலையான கொள்கையாக இருந்து வருகிறது.

தற்போதைய அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் இக்கொள்கையை, ஒரே மொழி, ஒரே மலேசியா, ஆதரித்து 29.10. 2009 இல் கோத்தா திங்கியில் பேசினார். அதுதான் பாரிசான் நியாயம். இல்லையா?

பாரிசான் அனைத்து இனங்களிடத்திலும் நியாயமாக நடந்துகொள்கிறது என்று கூறும் அம்னோ தலைவர் அம்னோவின் இறுதிக் கொள்கை பற்றிய முகைதின் யாசினின் கருத்தை எதிர்த்தாரா? அல்லது கண்டித்தாரா? அல்லது அவ்வாறான கொள்கை நியாயமற்றது என்று கூறினாரா?

இல்லை, இல்லவே இல்லை. மாறாக, “ஒரே கல்வி முறை மக்கள் அங்கீகாரத்துடனேயே அமல்படுத்தப்படும்”, என்று 1.11.2009 இல் அம்னோ தலைவர் நஜிப் உறுதிப்படுத்தினார்.

மலேசிய மக்களின் இதர மொழிப்பள்ளிகளை மூடி ஒரே கல்வி முறையை அமல்படுத்துவது அம்னோவின் இலட்சியம். அது பாரிசானின் நியாயம்!

மார்ச் 6, 2008 இல், சுனாமி தொடங்குவதற்கு இருநாள்களுக்கு முன்பு, மஇகாவினரிடம் பேசிய நஜிப், தேசிய மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் வேறுபாடு ஏதும் இருக்காது என்று வாக்குறுதி அளித்தார்.

பள்ளிகளுக்கான மேம்பாட்டிற்கு மலேசிய ஐந்தாண்டு திட்ட நிதி ஒதுக்கீடுகளில் பெருத்த வேறுபாடுகள் தொடர்கின்றன. எடுத்துக்காட்டு: ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் தேசியப்பள்ளிக்கு ரிம33.30, தமிழ்ப்பள்ளிக்கு ரிம10.95 மற்றும் சீனப்பள்ளிக்கு ரிம4.50 என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு தொடர்கிறது. ஏன் இந்த வேறுபாடு? அதுதான் பாரிசான் நியாயம். இல்லையா?

ஏப்ரல், 2011 இல் இந்திய சமூகம் பின்தள்ளப்படாது என்றார் நஜிப். ஆனால், கடந்த 55 ஆண்டுகளாக அம்னோ கூட்டணி/பாரிசான் ஆட்சியில் அம்னோவின் ஆதிக்கம் இந்தியர்களை எங்கே தள்ளியுள்ளது. பாரிசான் நியாயம் இந்தியர்களை ஓரங்கட்டி விட்டது. டிசம்பர் 23, 2010 இல் பாரிசானின் விசுவாச மிக்க உறுப்பினரான மஇகாவின் தலைவர் ஜி. பழனிவேல் “நாம் ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகம்..அதில் சந்தேகமே இல்லை” என்று அம்னோ ஆதிக்கத்திலான பாரிசான் ஆட்சி இந்தியர்களுக்கு வழங்கிய நியாயத்திற்கு சான்றிதழ் வழங்கினார்.

கீழ்க்காணும் பட்டியல் இந்தியர்கள் பாரிசான் பின்பற்றும் நியாயமான நடவடிக்கைகளால் கடந்த 55 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றத்தை (பின்னேற்றத்தை) காட்டுகிறது: (தமிழ்நேசன் – 30.08.2011)

இதில், ஒரு மாற்றம் உண்டு. இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியுள்ளது. எலும்புத் துண்டு வழங்குவதுதான் நஜிப் பேசும் பாரிசான் நியாயம்.

TAGS: