சிறுபான்மையினர் என்ற ஒப்பாரி ஏன்?

indian‑malaysiansஇந்நாட்டு இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் எழுப்பப்படும்போது அவர்கள் சிறுபான்மையினர் என்று முத்தாப்புடன் தொடங்கிறது.

இந்நாட்டு இந்தியர்கள் இந்நாட்டின் குடிமக்கள், இந்திய மலேசியர்கள். குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் இந்நாட்டு இதர குடிமக்களுடன் (சீன மலேசியர், மலாய்/இந்தோனேசிய மலேசியர், சாபா, சரவாக் மலேசியர்) சேர்ந்த பெரும்பான்மையினராவர்.

அப்பெரும்பான்மையினருக்குள் சிறுபான்மையினர் இருக்க முடியாது, கூடாது.

குடிமக்களான அனைவருக்கும் உரிமைகள் சமமானதாக இருக்க வேண்டும். அதில் பாகுபாடுகள் இருக்குமானால், குடிமக்களுக்கிடையில் ஏன் வேறுபாடு என்ற கேள்வி எழ வேண்டும். குடிமக்களில் ஓர் அங்கமான இந்திய மலேசியர்கள் ஏன் சமமாக நடத்தப்பட வில்லை என்ற கேள்வி எழ வேண்டும். சிறுபான்மையான இந்தியர்களின் உரிமை என்ற கெஞ்சுதல் இருக்கக்கூடாது.

இப்போது, அந்த சிறுபான்மையான இந்தியர்கள் நலன்களைப் பாதுகாக்க சிறுபான்மையினர் விவகார அமைச்சு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது இந்தியர்களை நிரந்தரமான சிறுபான்மை இனத்தவராக அடையாளப்படுத்தி கெஞ்சுதலுக்கு வலிமை சேர்க்க எத்தனிக்கும் முயற்சியாகும். இவ்வாறான கோரிக்கை முன்வைக்கும் சிலரின் உள்நோக்கம் வேறு விசயமாகும்.

indian-malaysiansகடமையின் கரு உரிமை

கடமை குடிமக்கள் அனைவருக்கும் சமமானது. அதிலிருந்து குடிமக்கள் எவருக்கும் விதிவிலக்கு கிடையாது, இருக்கக்கூடாது. இந்நாட்டிற்கு ஆபத்து என்றால், போர்க்களம் சென்று உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய கடப்பாடு, சட்டப்பூர்வமான கடப்பாடு ஒரு குடிமகனுக்கு உண்டு. இந்திய மலேசியர்களுக்கும் அக்கடப்பாடு உண்டு. இங்கு சிறுபான்மை இந்தியர் என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கு சட்டப்படி ஒவ்வொரு இந்திய மலேசிய குடிமகனும் பெரும்பான்மையினராகிறான்! நான் சிறுபான்மை இந்திய மலேசியன். என்னை விட்டு விடு என்று கெஞ்சுவதற்கு இடமே இல்லை.

நாட்டிற்காக இந்திய மலேசியன் 100 விழுக்காடு பெரும்பான்மையினராகிறான். நாட்டில் வாழ்வதற்கான அவனது உரிமை என்ற கட்டத்தில் அவன் சிறுபான்மையினராகிறான். அவனுக்காக கெஞ்சுதல். ஏன்?

எடுத்துக்காட்டு: அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரப்படி 9 ஆவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்தில் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30; தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95; சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50!

இம்மூன்று பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இந்நாட்டு குடிமக்கள். நாட்டிற்காக இம்மூன்று பள்ளிகளின் மாணவர்களும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு, கடமைக்கு உட்பட்டவர்கள். மறுக்க முடியாத, மறுக்கக்கூடாத சமகடமை உடைய மலேசியர்கள்.

kg medan_book launch04ஆனால், அவர்களின் பள்ளி வாழ்க்கையில் சமஉரிமை அற்றவர்கள். இவர்களுக்கு சமஉரிமை கோருவதற்கு இவர்களை ஏன் சிறுபான்மை இந்தியர், சிறுபான்மை சீனர் என்று முன்னிலைப்படுத்த வேண்டும்?

இக்கருத்திற்கு பதில் அளித்த இண்ட்ராப் ஆலோசகர் எம். கணேசன், மலேசியா ஒர் இனவாத வகையில் செயல்படும் நாடு அதனால் சமவுரிமை என்பதில்லாம் நடைமுறையில் கிடையாது. அதில் 51% பெரும்பான்மை இருந்தால் போதும் அவர்கள்  மீதமுள்ளவர்கள் மீது ஆதிக்கம் செழுத்த இயலும். இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள். ஆகவே, அவர்களை இன அடிப்படையில் முன்வைத்து அவர்களுடையப் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பின்னர் அவர்களுக்கான அமைச்சு தேவைப்படாது என்று கணேசன் சற்று விரிவான விளக்கத்தை அளித்தார்.

இனவாரியான பிரச்னைகள் இருக்கின்றன. அவை அந்த அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு அவற்றை தீர்ப்பதற்காக கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், அதற்காக சிறுபான்மையினர் விவகாரத்திற்கான அமைச்சு வேண்டும் என்பது சரியான வழியாகத் தோன்றவில்லை என்கிறார் சுவராம் ஆலோசகர் குவா கியா சூங்.