கையேந்தும் நிலையில் இந்திய சமுதாயம்! ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு கோவில்?

temple_putrajayaபுத்ரா ஜெயாவில் 1 கோடி 20 இலட்சம் வெள்ளி செலவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்கப்படவுள்ளதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் இந்திய தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான ச. சாமிவேலு அறிவித்துள்ளார்.

புத்ரா ஜெயாவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்க மத்திய அரசாங்கம் 1 ஏக்கர் நிலத்தை வழங்கியிருப்பதாக கூறிய ச. சாமிவேலு, நாட்டின் அரசாங்க பணிமனைகளின் மையமாகத் திகழும் குட்டி தலைநகரான புத்ராஜெயாவிற்கு இக்கோவில் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமையும் என்றார்.

புத்ரா ஜெயாவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்கப்படவுள்ளதானது இந்தியர்களுக்கு உண்மையிலே இனிப்பான செய்தியாகும். இந்த கோவில் எழுப்ப 12 மில்லியன் வரை செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமரிடம் பேசி நிதியை வாங்கித் தருவேன். நீங்களும் உங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி ஆதரிக்க வேண்டும் என்றார் சாமிவேலு.

ஆனால், வறுமையின் பிடியில் மலேசிய இந்திய சமுதாயம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கையில், 1 கோடியே 20 இலட்சத்திற்கு புத்ரா ஜெயாவில் கோவில் தேவையா? அதனை இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தலாமே? என்ற கேள்விகளும் பரவலாக நம்மிடையே எழுகிறது.

தேசிய முன்னணி தொடக்கம் பக்காத்தான் அரசியல்வாதிகள் வரை அவர்கள் அனைவரும் வழங்கும் இலவச அரிசிக்காக இந்திய சமுதாயம் முந்தியடித்துகொண்டு கையேந்துகிற நிலை இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், 1 கோடியே 20 இலட்சத்திற்கு கோவில் கட்டுவது இந்திய சமுதாயத்திற்கு என்ன நன்மையை கொண்டுவரப்போகிறது?

இந்நாட்டில் தமிழர்களின் அடையாளங்களாகத் திகழ்வது தமிழ்ப்பள்ளிகள்; அவற்கை முன்னேற்றிக் காட்ட இந்த சோதனைத் தலைவர்களுக்கு துணிவில்லை. ஆனால், இந்தியர்களுக்கு பெருமை சேர்க்க  1 கோடியே 20 இலட்சத்திற்கு கோவில் கட்டுகிறார்களாம்.

வேலைவாய்ப்பின்றி வறுமையின் காரணமாக சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் இன்று குண்டர் கும்பலாக வலம் வருகிறார்கள்.  அவர்களை நன்னெறிப்படுத்தி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வை வளப்படுத்த இந்த அரசியல் மேதைகளுக்கு வக்கில்லை. ஆனால், புத்ரா ஜெயாவிற்கு பெருமை சேர்க்க  1 கோடியே 20 இலட்சத்திற்கு கோவில் கட்டுகிறார்கள்.

கோவில்கள் வெறும் வருமானத்தை ஈட்டும் தொழில் நிறுவனங்களாக இல்லாமல், நமது சமுதாயத்திற்கு நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் ஒரு புனித இடமாகவும் சமுதாயத்தின் ஓர் அங்கமாகவும் திகழவேண்டும்.

ஆனால், கோடி கோடியாக வருமானம் பெறும் பத்துமலை கோவில் தொடக்கம் குட்டி வருமானம் பெறும் தெருக் கோவில்கள் வரை ஏதாவது ஒன்று நமது சமுதாய வளர்ச்சிக்காக முனைப்பாக பங்கெடுக்கிறதா? குரல் கொடுத்த பின்னர்தானே அவர்களுக்கு ஞானமே பிறக்கிறது.

கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை; இருக்கின்ற கோவில்கள் போதும் சோதனை தலைவா!

TAGS: