-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 31, 2013.
கி.மு 300 முதல் 1279 வரை, தஞ்சையையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் தலைநகராக கொண்டு புலிக்கொடியை காற்றில் படபடக்க விட்டார்களாம் சோழ மன்னர்கள். கி.மு 500 துவங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை, கொற்கை, மதுரை,தென்காசி, திருநெல்வேலி போன்ற தலைநகர்களைக் கொண்டு கயல்கொடி நாட்டி சங்கத் தமிழ் மணக்க ஆண்டார்களாம் பாண்டிய மன்னர்கள். கி.மு 500 முதல் 1102 வரை, கரூரையும், வஞ்சியையும், தொண்டியையும் தலைநகராக விற்கொடி நாட்டி ஆண்டார்களாம் சேர மன்னர்கள். இன்று கைப்பிடி தமிழ் மண்ணில்லை நம் சரித்திரம் தொடர்வதற்கு! தமிழனுக்கு தனி நாடென்பதும், தனி கொடியென்பதும், பாலைவனத்தின் அடிவானத்தில் தோன்றுவது நீரோடையா, வெறும் கானல் நீரா என்று குழம்பி நிற்கும் நிலைதான். நாமாவது இந்நாட்டில் தமிழனாய் நம் தெலுங்கு, மலையாள சகோதரர்களையும் அரவணைத்து நம்முடைய மொழி, சமயம், கலை, காலாசாரம் போன்ற பண்பாட்டு கூறுகளை செம்மையாய் பேணி, நம் எதிர்கால சந்ததியினர் தங்கள் சுவடுகளை மறந்திடாமல் இருக்க இந்தப் பொது தேர்தலில் சாதித்து காட்ட வேண்டும்.
ஆட்சி மாற்றம் என்ற வேகத்தில் நம் எதிர்காலத்தை பணயம் வைப்பது விவேகமாகாது. ஆட்சியை மாற்றுவதின் மூலம் நம் சமுதாயம் எப்படி பலனடைப் போகிறது என்று ஆழமாய் யோசித்து, தீர்க்கமான, திடமான, தெளிவான முடிவெடுக்க வேண்டிய முக்கியமான திருப்பத்தில் நாம் நின்றுக் கொண்டிருக்கிறோம். 13 ஆவது பொதுத் தேர்தலில் நாம் எடுக்கும் முடிவுதான் 21ஆம் நூற்றாண்டில் நம் சமுதாயம் பயணிக்க இருக்கும் இலக்கை நிர்ணயிக்க போகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
நாம் இதுவரை நமக்கு நல்லதைச் செய்து விடுவார்கள் என்று நம்பி ஏமாந்தது போதும். கடந்தகால பிழைகளின் மூலம் ஏற்பட்ட ஏமாற்றங்களிலிருந்து நாம் எப்போதுதான் பாடம் கற்றுக் கொள்ளப்போகிறோம்? கண்மூடித்தனமாக மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்து நாசம் போகும் அவலம் இந்தப் பொதுத் தேர்தலோடு முடிவுக்கு வரட்டும்.
ஆங்கிலேயனை நம்பினோம், ஏமாற்றிவிட்டான். சுதந்திரத்தை நம்பினோம். பிறகு பார்த்துகொள்ளலாம் என்றார்கள். நட்டாற்றில் விடப்பட்டோம்.
புதிய பொருளாதாரக் கொள்கை இனமரியாது செயல்படும் என்று சொன்னதை நம்பினோம். உள்ளதையும் பறிகொடுத்தோம்.
12 ஆவது பொதுத் தேர்தல்களில் வாயெல்லாம் தேனான தேர்தல் வாக்குறுதிகளை நம்பினோம். வஞ்சகமாய் நசுக்கப்பட்டோம்.
இப்படி தொடர்ந்து ஏமாறுவதற்காகவே பிறப்பெடுத்த ஜடங்களா நாம்?
இப்போது ஒரே மலேசிய என்கிறார்கள். ஆரஞ்சு புத்தகம் ( BUKU JINGGA ) என்கிறார்கள். இவற்றின் மூலம் இவர்கள் சொல்ல வருவதெல்லாம் “இன்னும் ஒரே ஒரு முறை உங்களை ஏமாற்றிக் கொள்கிறோம்.. ப்ளீஸ் … எங்களுக்கு வாக்களியுங்கள்” என்பதுதான்.
போதும்…போதும்..போதும்… ஏமாந்து கெட்ட சமுதாயமாய் நாம் வாழ்ந்தது போதும்!
விழித்தெழுவோம்!
இப்போது நாம் விழித்துக் கொள்ளவிட்டால் உணர்ச்சியற்ற நம் உடலை பிணம் என்று கருதி சவப் பெட்டியில் கிடத்தி நிரந்தரமாய் ஆணி அடித்துவிடுவார்கள். புதைத்த பிறகோ, எரியும் போதோ நாம் எழுப்பும் அபயக்குரல் மண்ணோடு மண்ணாய் புதைந்து போகும் அல்லது புகையோடு புகையாய் காற்றில் கரைந்து போகும். நாம் உயிர் வாழும் காலத்திலா இந்த கொடுமை நடக்க வேண்டும் என்பதை ஒரு நிமிட மௌனத்தில் யோசித்துப் பாருங்கள். உண்மை புலப்படும்.
55 ஆண்டுகாளாக ஏமாற்றியவர்களை தோற்கடித்து ஆட்சியை மாற்றுவோம் என சிலர் சொல்கிறார்கள். ஹிண்ட்ராப் அமைப்புக்கு ஆட்சேபனை இல்லை. அதேவேளையில் புதிதாய் வருபவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது என்பதுதான் ஹிண்ட்ராப் அமைப்பின் தயக்கம்.
மலேசிய இந்தியர்கள் இவ்வளவு நாட்களாக பாரிசான் ஆட்சியில் புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் பக்காத்தான் அரசியல் தலைவர்கள், ஒருபோதும் நாங்கள் அப்படி ஏமாற்றமாட்டோம் என்று எழுத்துபூர்வமாக ஹிண்ட்ராப் இயக்கத்தின் கோரிக்கைகளை ஏற்க தயக்கம் காட்டுவது ஏன்?
ஹிண்ட்ராப் அமைப்பின் செயல் திட்ட பரிந்துரை பிரபஞ்சத்தை எங்கள் காலடியில் வைக்க வேண்டும் என்று கோரவில்லை. தங்கத் தட்டிலே அமிர்தமும், வைடூரியங்கள் பதித்த கிண்ணங்களில் பழ ரசத்தையும் நாங்கள் பக்கத்தான் தலைவர்களிடம் கேட்கவில்லை. தொடர்ந்து வஞ்சிக்கபட்ட இந்தியர்களின் மிக மிக அடிப்படையான கல்வி, சமூக, பொருளாதார நிலையை உயர்த்தும், வெகு சுலபத்தில் அமல்படுத்தக் கூடிய திட்டங்களுக்கு நாட்டின் வரவு செலவு திட்டத்தில் வெறும் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவான நிதியை ஒதுக்கி, முதலீடு செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
இந்த எளிமையான கோரிக்கைகளுக்கு அவர்கள் தயங்கினால், இவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என எப்படி ஹிண்ட்ராப் அமைப்பால் மக்களுக்கு உறுதி வழங்க முடியும்? மலேசிய இந்தியர்களின் நலனை மட்டுமே இலக்காக கொண்டு செயல் படும் ஹிண்ட்ராப், வெறுமனே எவ்வித உத்திரவாதமும் இல்லாத ஒரு மாற்றத்திற்கு மக்களை துணை போகச் சொல்வதற்கு தயாராக இல்லை. சுதந்திரத்திற்கு முன்னர் துன் சம்பந்தன் நம் உரிமைகளை எழுத்துப் பூர்வமாக பெற தவறிவிட்டார் என்று இப்போது வருத்தப் படுகிறோம். ஆட்சியில் இருந்த இந்திய தலைவர்கள் நமது உரிமைகளை பாதுகாக்க தவறி விட்டதாய் ஆதங்கப் படுகிறோம். இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றத்தின் போது நம் உரிமைகளை நிலை நிறுத்த தவறிவிட்டோம் என்று நம் சந்ததியினர் நம் மீது வசை பாட வேண்டுமா?
இதற்கு பக்கத்தான் தலைவர்கள் கற்பிக்கும் சமாதானம் இன ரீதியான கொள்கைகளுக்கு நாங்கள் அப்பாற்பட்டவர்கள் என்பதாகும். பல்லின கோட்பாடுகளை வேரூன்றப் போகிறார்களாம். இந்த பசப்பு வார்த்தைகளுக்கு ஹிண்ட்ராப் மயங்காது.
இன்றையச் சூழலில் பல்லின கோட்பாடு என்பது, “உங்களுக்கு ஏன் தமிழ் பள்ளிக்கூடம்? எல்லோரும் சேர்ந்து பயில்வோம் மலாய் பள்ளியில்” என்று கூறுவதற்கு சமானம். நம் மொழி மீதும் இனம் மீதும் பற்றுள்ளவர்கள் இதற்கு ஒத்துக் கொள்வார்களா? அதைப்போன்றதுதான் ஹிண்ட்ராப் நிலையும்.
நன்றாக கவனித்தால் பக்காத்தான் கூட்டணியில் மலாய் முஸ்லிம்களின் உரிமைக்கும், ஆதிக்கத்திற்கும் எதனையும் இழக்க தயாராக இருக்கின்றன பாஸ் மற்றும் கெஅடிலான் கட்சிகள். பல்லினக் கட்சி என்று சொல்லிகொண்டாலும் சீனர்களின் உரிமைக்கும் மேன்மைக்கும் முன்னுரிமை அளிக்க எந்நேரத்திலும் பின்வாங்காத ஜனநாயக செயல் கட்சியும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியர்களின் அவலத்தை போக்கவும், இந்தியர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாக போராடவும் குரல் கொடுக்கவும் யாரும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நம் இந்திய சகோதரர்கள் இந்த கட்சிகளில் இடம் பெற்றிருக்கலாம். அவர்களுக்கும் நம் சமுதாயத்திற்கு நடக்கும் துயரங்களை களைய வேண்டும் என்ற தாகம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அவர்களால், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் மேல்மட்ட வட்டத்திற்கு வெளியே வந்து சுயமாக செயல் படமுடியாது என்பதை இந்திய வாக்காளர்கள் தெளிவாக உணர வேண்டும். இதற்கு எத்தனையோ சான்றுகளை முன்வைக்க முடியும். ஆனால் அதுவல்ல எங்களின் நோக்கம்.
பக்காத்தானின் இந்திய மக்கள் பிரதிநிதிகளோ, அல்லது புதிதாய் அறிமுகம் காணவிருக்கும் இந்திய வேட்பாளர்களோ ஹிண்ட்ராப் அமைப்புக்கு எதிரிகள் கிடையாது. அவர்களும் எங்களை அந்த கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. ஆம், உண்மைதான். அவர்களை நாங்கள் சில சமயங்களில் வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறோம்.அதற்கு தனிப்பட்ட விரோதம் காரணம் அல்ல. சமூதாயத்தின் அவலத்திற்கு இவர்கள் இன்னும் அதிகமாக செய்திருக்கலாமே என்ற ஆதங்கம்தான். பக்கதான் இந்திய சகோதரர்களிடம் இந்தியர்களின் அவலத்தை களைய ஹிண்ட்ராப் திட்டத்தை ஆதரித்து எழுத்துப் பூர்வமாக உத்திரவாதம் அளிக்கும்படி உங்கள் கட்சித் தலைவர்களை வலியுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து நம் சமுதாயம் மேன்மைபெற வகை செய்வோம்.
எதிர்கால இந்திய சந்ததியினரின் தன்மானத்தையும் அவர்களின் உரிமையை நிலைநிறுத்தவும் ஒட்டுமொத்த இந்திய சமூகமும் ஹிண்ட்ராப் செயல் திட்ட பரிந்துரைக்கு பக்க பலமாக ஒற்றுமையுடன் ஒரு மனதுடன் நிற்போம். மாற்றம் என்ற தென்றல் இந்திய சமூகத்திற்கும் வசந்தத்தை கொண்டு வரவேண்டுமே தவிர நம்மை வேரோடு பிடுங்கி வானில் வீசியெறியும் புயலாக இருக்கக் கூடாது.