“பிரதமருக்கு நெருக்கமானவங்க யாராவது இருந்தா, இதை அவர்கிட்ட சொல்லிருங்கப்பா…”

pongal_eventஇந்தக் கட்டுரையை எழுத முழு முதற்காரணம் இரக்கம்தான். ஆமாம், நமது நாட்டு பிரதமர் மேல் கொண்ட இரக்கம்.  தேர்தல் முடிந்த பின்பு அவர் பிரதமராக இல்லாமல் போவதற்கான  சாத்தியங்கள் இருந்தாலும், இருக்கும் வரையாவது அவர் மனம் குழம்பாமல் இருப்பதை பாதுகாப்பது நமது கடமை அல்லவா?

“வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் ” என எம்.ஜி.ஆர் போல உற்சாகமாக ஓர் இடத்திலும் , “எங்களுக்கு  இன்னொரு வாய்ப்பு தாருங்கள் ” என கெஞ்சும் தொணியில் இன்னொரு இடத்திலும் சொல்லும் அளவுக்கு உங்கள் கட்சிக்காரர்களும் குழம்பி போயிருக்க உங்களுக்கு உதவ வேண்டிய கட்டத்தில் என்னைப் போன்ற சராசரி குடிமகன் களம் இறங்குவதில் தவறில்லை என நினைக்கிறேன்.

போதாததற்கு, எங்க ம.இ.கா சனங்களும் எல்லாமே பிரதமர்தான்னு சொல்லிக்கிட்டு சுத்துறாங்க. அப்படினா, அவங்ககிட்ட ஒன்னுமே இல்லன்னு புரிஞ்சி போச்சி. ஒன்னுமே இல்லாதவங்கள நீங்க ஏன் இன்னும் கட்சியில வச்சிருக்கீங்கன்னும் தெரியல. நீங்க செய்யுர தப்புக்கும் தாமதத்துக்கும் நாங்க அவங்கள திட்ட அப்பப்ப பயன்படுறாங்கன்னு வச்சிருக்கீங்களோ. எவ்ளோ அடிபட்டாலும் தாங்குறதுனால அவங்கள ரொம்ப நல்லவங்கன்னு நெனச்சிட்டிங்க போல…

கொஞ்ச காலமாகவே நீங்கள் போகும் இடமெல்லாம் பண மழை பொழிகிறது. எல்லோருக்கும் வாரி கொடுக்கிறீர்கள். ஒரு மாணவனுக்கு தலா 100 ரிங்கிட்டாம். அப்பாடா… எவ்வளவு பெரிய தொகை. ஒரு வருடம் இந்தத் தொகையை வைத்து கொண்டு அந்தக் குடும்பமே மகிழ்ச்சியாக வாழுமே. ஆனால், பலருக்கு அது புரிய மாட்டேன் என்கிறது. அதை லஞ்சம் என்கிறார்கள் பொறாமைக் காரர்கள்.

எனக்கும் ஒரு கேள்வி உண்டு பிரதமர் அவர்களே. இந்தப் பணத்தில் எல்லாம், மக்கள் என்றென்றைக்கும் பயனடையும் திட்டங்களைச் செய்யாமல் ஒரு கவன ஈர்ப்புக்கான வேலையைச் செய்கிறீர்களே… நம் மக்கள் அது குறித்தெல்லாம் சிந்திக்கவே மாட்டார்கள் என நினைக்கிறீர்களா? மற்ற இனத்தவர்களுக்கு எப்படியோ… இவ்வளவு மலிவான அரசியலை நாங்களெல்லாம் தமிழ் நாட்டு அரசியலைப் பார்த்து பழகிவிட்டதால் இதையெல்லாம் ஒரு காமடியாகவே எடுத்துக்கொண்டோம்.

“பிரதமர் அவர்களே நீங்களும் கூட்டம் சேர்க்க படாத பாடு படுறீங்க. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்கயாவது நம்ம மக்கள் குவிஞ்சி நின்னா நீங்களாகவே அதுக்குள்ள புகுந்துடுறீங்க. அப்புறம் அங்கனயே நின்னுக்கிட்டு ‘சத்து மலேசியான்னு’  சொல்றீங்க. நம்ம மக்களும் ஜாலியா திரும்ப சொல்றாங்க… அந்த கோஷத்தையா நீங்க நம்புறீங்க. அங்க உள்ள மக்கள் உங்களோட ஆதரவாளர்கள் மாதிரி காட்ட ரொம்ப கஷ்டப்படுறீங்க. அப்படித்தான் தைப்பூசத்திலும் புகுந்துவிட்டீர்கள். அவர்களில் பல பேர் முருகனையே நம்பாம ஷாப்பிங் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. உங்கள நம்பி உங்க பேச்சை கேட்பங்கன்னு எப்படி ஐயா நம்புனீர்கள்.

bus_near_dmகடைசியா ‘ஒற்றுமை பொங்கல்னு’ சொல்லி  02.02.2013 – ல் டத்தாரான் மெர்டேக்காவுக்கு வந்த பஸ்ஸுக்கெல்லாம் ஆயிரத்துக்கும் குறையாம பணத்த அள்ளிக் கொடுக்கறீங்க. ஆனா பாருங்க மக்கள் வர மாட்டுறாங்க.  நீங்க சொல்லிக் கொடுத்தது மாதிரி நம்ம பத்திரிகை ஆசிரியர்களும் ‘மக்கள் வெள்ளம்னு’  படத்த போடுறாங்க. வெள்ளத்துல பாதி தண்ணிய காணோம்.

இவங்களயெல்லாம் நம்புனா நீங்க எப்படி ஆட்சிய புடிக்கிறது?  வானொலி , தொலைக்காட்சியில் விளம்பரமெல்லாம் போட்டு… நம்ம உள்ளூர் கலைஞர்களை பாடச்சொல்லி … வாங்க வாங்கன்னு கூப்பிட்டு… தினசரிகளில் விளம்பரமெல்லாம் போட்டு… அழைத்து வர பஸ்ஸெல்லாம் ஏற்பாடு செஞ்சி… அதுக்கு பணமெல்லாம் கொடுத்து…. ம.இ.கா கட்சியோட பெரும் செல்வாக்கோட உறுப்பினர்களையெல்லாம் அழைத்தப்பின்பும் டத்தாரானுல பாதி காலியா கிடக்குதே…!

ஆனால், எல்லா பஸ்ஸையும் தடைப்பண்ணி… வந்தவங்கள ஜெயிலுக்கு அனுப்புவோம்னு சொல்லி…. இராசயணத் தண்ணி அடிச்சி… சோதனை நடத்தி தடுத்து வச்ச பின்பும் 2007 -ல் ஹிண்ட்ராப்புக்கு கூடுன கூட்டத்தை கொஞ்சம் நினைச்சுப் பாருங்களேன்… . நம்ம ‘பெர்சே’ அம்பிகா சீனிவாசன் மக்களுக்கு எந்த ‘அன்பளிப்பும்’  கொடுக்காமலயே கூப்பிட்ட குரலுக்கு கூடுறாங்க. நீங்களும் டிவியில தொடர்ச்சியா ‘பெர்சே’பேரணிக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பெல்லாம் போட்டீங்க. என்ன ஆச்சி கடைசியா… நம்ம பய புள்ளைங்க அதையெல்லாம் கேட்பாங்களா… கூடுனுச்சில கூட்டம்.

நமக்கு தேவையில்லாம வெட்டி செலவு. இவ்ளோ கஷ்டப்பனுமா நீங்க… அடுத்த முறை ‘பெர்சே’ அமைப்போடு இணைத்துக்கொண்டு அரசாங்கத்து எதிரா ஒரு கூட்டம் நடத்துங்களேன்… கூட்டம் உடனே கூடும். நமக்கும் செலவு குறைவு பாருங்க… நீங்களும் சொல்ல வேண்டியதை சொல்லிடலாம். அம்பிகா சீனிவாசன் போல ‘டூப்’ போட ஆளா கிடைக்க மாட்டாங்க? அப்போதான் மக்கள் குழப்பம் அடைவாங்கதான்… அதனால என்னா… நாங்க கல்யாணத்துக்கே ஆயிரம் பொய் சொல்லலாமுன்னு பழமொழி இருக்கு. நீங்க தேர்தலுக்காக இப்பதானே  500 பொய்யைத் தாண்டி இருக்கீங்க… இன்னும் எவ்வளவோ இருக்கு…”

ம.நவீன்

TAGS: