அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்ல மகாதீருக்கு என்ன உரிமை உண்டு?

mahathirமலேசியாவின் முன்னால் நான்காவது பிரதமர். அவருக்கு அடுத்து அப்துல்லா படாவி ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் அதிகபட்சமாக அவருக்கு இடையூறாக இருந்தார். அப்துல்லாவைக் கிண்டல் செய்தும் கேலி செய்தும் நடப்பு அரசுக்குத் தொந்தரவாக இருந்தார்.

வயதாகி பதவி விலகிய நிலைக்கொள்ளாமை அவரை ஆட்டிப் படைத்தது. மண்டை சூடாகியும் அதிகாரப் பற்று அவரைத் துரத்தியது. ஆகையால்தான், இன்றுவரை அதிகாரத் தொனியில் ஆணையிடுகிறார். பழைய கற்பனாவாத தோரணையும் தன்னுடைய காலாவதியான அதிகாரக் குரலையும் இன்னமும் தக்க வைத்துக்கொண்டு கவனம் பெறத் துடிக்கிறார்.

பெர்சே அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்ல மகாதீருக்கு என்ன உரிமை உண்டு? நடப்பு அரசு எப்பொழுது இவர் ஆலோசனையையெல்லாம் கேட்பதாக முடிவு செய்தது? அப்படியொன்றும் நடந்ததே இல்லை. இவர்தான் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறார். அவர் ஆட்சி காலத்தில் 30000 கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை மலாய்க்காரர்கள் எனக் கணக்குக் காட்டிய மகாதீருக்கு என்ன தகுதி உண்டு?

மலேசியக் குடியுரிமை சட்டத்தில் ஏற்கனவே ஒரு நாட்டின் குடியுரிமையை வைத்துள்ள யாவரும் மலேசியாவின் இரண்டாம் தர குடியுரிமையைப் பெறுவதில் சில சிக்கல் உண்டு மற்றும் வரையறை உண்டு. ஆனால், அதையெல்லாம் மீறி குறைந்த நாட்களில் மலேசியாவில் வசித்தப் பலருக்குக் குடியுரிமை வழங்கி தன்னுடைய இன மேலாண்மை அரசியலை வக்கிரமாக வெளிப்படுத்திய ஒரு துரோகி அவர்.

அக்காலக்கட்டத்தில் மலேசியக் குடியுரிமையைப் பெறுவதற்காக நடையாய் அலைந்த எத்தனையோ மலேசியத் தமிழர்களுக்கு என்ன நடந்தது? இன்னமும் சிவப்பு பாஸ்போர்ட்டுடன் சுற்றும் எத்தனை பேர் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால், தன் இனத்திற்குச் சிறப்பு சலுகைகளை வலுப்படுத்துவதற்காக அக்காலக்கட்டத்தில் மலேசியாவில் இருந்த இந்தோனேசியா, பங்களாடேஷ் போன்ற நாட்டின் தொழிலாளிகளுக்கு குடியுரிமை வாரி வாரி வழங்கப்பட்டுள்ளது. ஒரு அரசு தன் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை மக்களுக்குச் செய்த துரோகம் அல்லவா இது? இதைச் செய்தற்காக இப்பொழுதுள்ள நடப்பு அரசு மகாதீரைத் தண்டிக்க வேண்டாமா?

அம்பிகாவும் மகாதீரும் குடியுரிமை தகுதியில் சமமானவர்களே என்பதை முதலில் நாம் அறிய வேண்டும். மகாதீரும் மலேசியாவிற்கு வந்து குடியேறிய தலைமுறையைச் சேர்ந்தவர்தான். எப்படி அம்பிகாவின் தாத்தா அல்லது பாட்டி மலேசியாவிற்கு வந்து குடியேறினார்களோ அதேபோன்ற பின்னணித்தான் மகாதீருடையதும். அவர் ஒன்றும் அசலாக மலேசிய மண்ணைச் சேர்ந்தவர் அல்ல.

ஆகவே, நாட்டின் தேர்தல் முறையாக நடக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்த அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்ல இன்னொரு குடியேறிக்கு எப்படி தகுதி வந்தது? சிந்திக்க வேண்டிய விசயம் அல்லவா?

இப்பொழுது தெரிகிறதா ஏன் மகாதீருக்கு அவர் ஆட்சிக் காலத்தில் மலேசியாவிற்குக் குடியேறிய இஸ்லாமியக் கள்ளக் குடியேறிகளின் மீது இத்தனை அக்கறை வந்ததென்று?

– கே.பாலமுருகன்

TAGS: