அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு குண்டு சட்டியில் குதிரையோட்டும் மஇகா!

mic_flagகா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர்

மஇகாவின் சாதனைகள் என்ற செய்திகள் அண்மைக் காலமாக  தமிழ் ஊடகங்களில் வெளிவருவது, வேதனைகள் படிந்த மஇகா  சுவருக்கு வெள்ளையடிக்கும் வெற்றுச் செய்திகளாகவே தோன்றுகிறது. ஆனால் மஇகா என்ற சுவர் வரலாற்றின் கடப்பாடு என்பதால் மட்டும் அது அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை.

உதரணமாக, மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்குக்  கிடைத்த நிலம் ஐ-சிட்டி நிறுவனத்திற்கு விற்கப்பட்டது என்றும் புக்கிட் இராஜா தோட்ட மக்கள் வீடமைப்பில் ஊழல் என்றும் பாக்காத்தான் ஆட்சியில் கோயில் உடைப்பு, உடம்பு பிடி நிலையமும் மது கடைகளும் அதிகரிப்பு என்றும்  குற்றச்சாட்டுகளைச் சாட்டுகின்றனர். இவை ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்தால் அதில் உள்ள உண்மைகள் வெளிவரும். இதற்கான பதில்களை மக்கள் எவ்வகையில் மதிக்கிறார்கள் என்பதும்  புரியும்.

இவற்றையெல்லாம் விட தேசிய முன்னணியால்தான் இன்று நம்மால் இந்த நாட்டில் இந்த அளவில் வாழ முடிகிறது என்கின்றனர் அம்னோவின் தலைவர் நஜிப்பிற்கு வால் பிடிக்கும் இந்த மஇகா-வினர். இதற்கு முன்பும்  இதே வசனத்தைதான்  சாமிவேலு அவர்கள் மகாதீரின் காலத்தில் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.

aru_indiansஇவையெல்லாம் அரைத்த மாவையே அரைத்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் உள்ளது. சிறுபான்மை கொண்ட நமது அரசியல் பலம் எவ்வகையில் அமையக்கூடாது என்பதற்கு இந்த மஇகா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நல்ல திறமையானவர்களை கொண்டிருந்தும் அது ஏழை தமிழ் மக்களுக்காக சீரிய நோக்கமும், போரட்டமும், சிந்தனையும் இல்லாமல் பதவி அதிகாரம் பட்டம் பணம் என்று காலத்தை ஓட்டி பாவத்தை சேர்த்தது.

இந்தியர்களும் இந்நாட்டு மக்கள். தங்கள் இரத்தத்தை வியர்வையாக்கி நாட்டுக்கு உழைத்தவர்கள். இந்நாடு அவர்களுக்கும் சொந்தமானது. இந்நாட்டில் உள்ள வளங்கள், உற்பத்தி, வரி வசூல் என கிடைக்கும் வருமானம் நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கு இட்டுச்செல்லும் வழியில் கொள்கை செயல்திட்டம் அமைத்து அதன்வழி செயல்படுவதுதான் அரசாங்கம்; அதை அமைப்பது அரசியல். அவ்வகையில் நமது வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியோடு ஒத்திருக்க வேண்டும்.

இந்நாட்டில் சுமார் 200 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட நாம், ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டு உழைக்கும் வர்க்கமாக உருவாக்கப்பட்டோம். விடுதலைக்கு முன்பு தொழிற்ச் சங்கங்கள் வழியும் மொழி இன உணர்வு வழியும் போராடியவர்களின் உந்துதலும் ஆவேசமும்தான் மித வாத அரசியல் அமைப்புகள் விடுதலை கோரும் சூழ்நிலையை உண்டாக்கின.

அம்னோவின் ஆதிக்கம் துங்குவின் காலத்தில் மிதமாகயிருந்தது. ஆனால், 1970-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அதன் தாக்கம் வலுவானது. குறிப்பாக மகாதீரின் காலத்தின் போது இந்தியர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். அதன் பிறகு மலேசியா என்பது மலாய்காரர்களுக்குச்  சொந்தமானது என்ற வகையில் ஒரு மேலாண்மை கருத்து உருவாக்கப்பட்டது.

Thayaparan-MIC's bitter harvestஊழல், இலஞ்சம், விசுவாசம் என்ற வகையில் நம்மை பிரதிநிதிக்கும் தலைவர்கள் சோரம் போக ஒட்டு மொத்தமாக நாம் அனைவருமே பணயம் வைக்கப்பட்டோம். உரிமை குரல்களை எழுப்பிய நாளிதழ்கள் முடக்கப்பட்டன. எதிர்ப்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆதிக்கத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட வானொலியும் தொலைக்காட்சியும் அதிகாரத்தின் ஆதிக்கத்தையே தனது  பரப்புரையாக்கியது.

கோயில்கள் உடைபட்டன. நாம் சிலை வடிவில் வழிப்படும் மாரியம்மனும், துர்காதேவியும், காளியாத்தாவும், முருகனும், விநாயகரும் ஆதிக்க வெறியர்களால் உடைபட்ட போதும், நாய்களைப்போல் நம் இளைஞர்கள் சுடப்பட்ட போதும்  நம்மால் கதறி  அழ மட்டுமே முடிந்தது.

விடுதலை அடைந்த போது 888 ஆக இருந்த தமிழ்ப்பள்ளிகள் ஆண்டுக்கு ஏழு என்ற வகையில் அம்னோ தேசிய முன்னணி ஆட்சியில் 365 பள்ளிகள் மூடப்பட்டன. அது மட்டுமல்லாமல் மஇகா தனது கட்சி அரசியலை தமிழ்ப்பள்ளிகளில் நுழைத்து அதன் வளர்ச்சியைக் கெடுத்தது. தமிழ் கல்வி என்பது ஒரு பலவீனமானது என்ற தோற்றத்தை உண்டாக்கியது. சீனர்கள் தங்களுக்கு கிடைத்த வய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்த நாம் இலவு காத்த கிளியானோம்.

aru_indians_pix3தோட்ட மக்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் இருப்பதைக் காரணம் காட்டி அவர்கள் ஒதுக்கப்பட்டனர். கசக்கி பிழியப்பட்ட அவர்களை  அம்னோ தேசிய முன்னணி சட்டங்கள் பாதுகாக்கவில்லை. மேம்பாடு என்ற வகையில் அவர்கள் துரத்தியடிக்கப்பட்ட போது மஇகா பிரதிநிதிகள் அதை தங்களுக்குச்  சாதமாகப் பயன்படுத்திக்கொண்டனர். உருப்படியான மாற்று வீட்டுடைமைத் திட்டமோ அல்லது மறு தொழில்திறன் கல்வியோ அற்ற நிலையில் குறைந்த சம்பள அயல் நாட்டு தொழிலாளர்களுக்கு இணையாக  முண்டியடித்து கொண்டு கூலி வேலைகளுக்குப்  பலியானார்கள்.

மலிவு அடுக்குமாடி வீடுகளும் புறம்போக்கு குடிசைகளும் இவர்களது வசிக்கும் கூடுகளாகின. தோட்ட மக்களைப்  பணயம் வைத்தும் அரசியல் நடத்தி  இன்று உரிமையற்ற மூன்றாம் தர மக்களாகவே நாம் உள்ளோம்  என்பது இன்னமும் தெரியாதா?

ஒட்டு மொத்தத்தில் மஇகா என்பது இந்தியர்களின் பிரதிநிதி, அதன்வழி அவர்களின் ஓட்டுகளை அம்னோ களவாட முடியும். அதற்கு ஈடாக ஊழலும் இலஞ்சமும் பதவியும் பட்டமும் குத்தகைகளும் மஇகா-வினருக்கு கொடுக்கப்பட்டன.

2008 தேர்தலில் பலத்த அடி வாங்கிய மஇகா மீண்டும் மீண்டும் தங்களது சாதனைகள் என்று பேசுவது விழித்துக்கொண்ட மக்களை முட்டாளாக்காது. மாறாக, மஇகா தான் இன்னமும் முட்டாள்தனமான கட்சி அரசியலில் சிக்குண்டுக் கிடப்பதையே  காட்டும்.

TAGS: