தூய்மையான ம.இ.கா தேவை! ஒரு கிளைத் தலைவரின் ஆதங்கம்!

-கணேசன் ஆறுமுகம்

mic_flagஅண்மைய காலமாக இந்தியர்களுக்கு ம.இ.கா. தேவை இல்லை என்ற செய்தி காட்டுத் தீ போல மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. எதற்கெடுத்தாலும் ம.இ.கா. 55 வருடங்களாக ஒன்றும் செய்ய வில்லை. ஒன்றுமே சாதிக்கவில்லை என்ற பல்லவி பலர் பாடிக் கொண்டும் வருகின்றனர். அவர்களுக்குப் பதில் தருவதற்கு நான் ஒன்றும் 55 வருடங்களாக ம.இ.கா-வில் இல்லை. ஆனால் நான் ம.இ.கா-வில் 1989-ல் இருந்து உறுப்பினராகி , செயலாளராகி பிறகு கிளைத் தலைவராக உயர்ந்துள்ளேன். இது எனக்குள் உள்ள வளர்ச்சி.

நான் மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கையில் ம.இ.கா. ஒரு சிறப்பான கட்சியே. அதன் நோக்கங்கள் மிகவும் உன்னத தன்மைக் கொண்டவை. சேவை அடிப்படையில் பிறந்தது இந்தக்கட்சி. சுதந்திரத்தின் மூலமாகவும் செயல்பட்டது. அப்போதைக்கு வேண்டிய உரிமைகள், தேவைகள் மற்றும் வேண்டுகோள்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் மூலம் பலனடைந்தோர் பலர். பதவி, பட்டம், பெற்றவர்கள் ஆயிரத்திற்கும் மேல். சுருங்கக் கூறின் சமுதாயமே பலன் அடந்தது என்று திட்டவட்டமாகக் கூறலாம்.

இவ்வளவு அருமையான கட்சிக்கு ஏன் இப்பொழுது இந்த எதிர்ப்பு? ஏன் மக்களிடையே ஒரு வெறுப்பு? ஏன் பலர் இக்கட்சியைப் பற்றி அவதூறு பேசுகின்றனர்? பல கேள்விகளுக்கு ஒரே பதில் இல்லை. வழங்கும் பதில்கள் நிச்சயமாக பலருக்கு  எரிச்சலை மூட்டுமே தவிர திருப்தி கட்டாயமாக கிடைக்காது.

Minister MIC-Palanivel & Samyஆம்… இக்கட்சியை பிரதிநிதிக்கும் தலைவர்கள், உறுப்பினர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கின்றார்கள்? சேவை செய்கின்றார்களா? தலைமைத்துவம் கொண்டவர்களாக இருக்கின்றார்களா? பக்குவபட்டவர்களா? சமுதாயத்தில் மீதும் அளவில்லா பற்று உள்ளவர்களா? கட்சியின் மூலம் என்ன சுரண்டலாம் என்று இருப்பவர்களா? வீணே பல அறிக்கைகள் விட்டு பெயர் எடுப்பவர்களா? மற்றவர்களுக்கு குழியைப் பறிப்பவர்களா?

ஒன்று நிச்சயம்… எது எப்படி இருப்பினும் ம.இ.கா. கட்சி ஒரு அருமையான கட்சி. அதில் இருக்கும் தலைவர்கள் நிச்சயமாக தம்மை மக்கள் விரும்பும் வகையில் தமது கொள்கைகளையும். பழக்க வழக்கங்களையும் கட்சியைச் சார்ந்து இருந்திட வேண்டும்.

கட்சியில் உள்ள சட்டதிட்டங்களுக்கும் வலிமைக் கொடுத்து தன்னகத்தே ஒரு அடையாளத்தை காட்டிட வேண்டும். ஏற்கனவே ஒரு நல்ல அடையாளம் பெயர் நமது ம.இ.கா-விற்கு உண்டு. சமீப காலத்தில் பலரின் பேச்சுக்கள், நடவடிக்கைகளால் ம.இ.கா. பலரால் புறக்கணிக்கப்பட்டது. இது தவிர்க்க முடியாத ஒன்று.

இனி ம.இ.கா. உறுப்பினர்கள் தலைவர்கள் ஒன்று சேர்ந்து அதன் தூய்மையான அடையாளத்தை காத்திட முனைந்திட வேண்டும். இது நடக்கும். பலரின் அதுவும் என் போன்ற கிளைத் தலைவர்களின் எதிர்ப்பார்ப்பு இதுவாகும்.

இந்தியர்களுக்கு மட்டும்தான் என்ற நியதியே என்னை இக்கட்சிக்குள் நுழைய காரணமாக அமைந்தது. இந்தியர்களின் நலம் காக்க நிச்சயமாக ஒரு பெரும் கட்சியாக ம.இ.கா செயல்படும் என்ற நம்பிக்கை எமக்கு ஆலமரமாக ஒங்கி வளர்ந்து விட்டது.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272