விஸ்வரூப நாயகனுக்குப் பாலபிசேகம்!

lotus_PJஅண்மையில் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் பெற்றது. மலேசியாவில் முதன் முதலில் திரையிடப்பட்டு ஒரே நாளில் மலேசிய உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்ட இந்தத் திரைப்படம் சென்ற வாரம் சில மாற்றங்களுடன் மீண்டும் வெளிவந்தது. அதைக் கொண்டாட விரும்பிய அவரின் ரசிகர்களில் சிலர் பலரும் அறிய ஒரு முட்டாள்தனத்தை அரங்கேற்றினர்.

உருவப் படத்துக்குப் பாலபிசேகம், இவரும் கடவுளா?

இவரோ தான் ‘கடவுள் மறுப்பாளன்’ என்று தனது படங்களில் கூறி வருகிறார். ஆனால், இவரையே கடவுளாக்கி விட்டார்கள், அவரின் முட்டாள்தனமான சில ரசிகர்கள். காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகனுக்குப் பாலபிசேகம், ஆரத்தி காட்டுவது, ஆளுயர இராட்சத மாலை அணிவிப்பது, இவையெல்லாம் நேற்று வரை தமிழ்நாட்டுக் கலாச்சாரமாகத்தான் இருந்தது. ஆனால், இன்று முதல் அது மலேசியக் கலாச்சாரமாக உருவெடுக்கப்போகிறது. முன்பு, ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படத்துக்கு இதே போன்ற கூத்து பினாங்கில் நடைபெற்றது. இப்போது, இந்த நடிகரின் படத்துக்கும் ஆரம்பித்து வைத்து விட்டார்கள்.

பெட்டாலிங் ஜெயாவில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற லோட்டஸ் திரையரங்கில்தான் இந்தக் கொடுமை. இந்த மாதிரி முட்டாள்தனமான செயல்களுக்கு ஏன் திரையரங்க உரிமையாளர்கள் இடம் கொடுக்கிறார்கள்?  ஏன் தடுக்கவில்லை? சுய லாபத்துக்கா? விளம்பரத்துக்கா? அல்லது தடுத்தால் வெறி கொண்ட ரசிகர்கள் வன்முறையில் இறங்கி விடுவார்கள் என்ற அச்சத்தாலா? காரணம் எதுவாக இருந்தாலும், பாதிக்கப்படுவது நம் இனத்தின் பெயர்தான். அதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நாளை எந்த நடிகனின் படம் வெளியானாலும் இதுவே நடக்கும். இதற்கு மேலும் நடக்கும். ஆரத்தி காட்டுவார்கள்; பாலால் அபிசேகம் செய்வார்கள்;  விரதம் இருப்பார்கள்; அலகு குத்துவார்கள்; காவடி கூட எடுப்பார்கள். என்ன இது, கடவுளுக்குச் செய்வதையெல்லாம் நடிகனுக்கும் செய்வார்களா என்று கேட்காதீர்கள். கடவுளுக்கு செய்யும் அத்தனையையும் செய்வார்கள், தமிழ் ரசிகர்கள். நடிகைக்கே கோயில் கட்டியவர்கள், இவர்கள். என்னே, இவர்களின் பக்தி!

முன்பு, இவையெல்லாம் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து வந்தன. அப்போதெல்லாம், இங்குள்ளவர்கள், இது அவர்களின் கலாச்சாரம், இதனால் நமக்கொன்றும் ஆபத்தில்லை என்றார்கள். இப்போது இதைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்? தமிழ்நாட்டுக்கு இணையாக மலேசியாவும் சீரழிந்து கொண்டு வருகிறது. நமது ஊடகங்களின் வற்றாத ஆதரவுடன்.

தமிழ்நாட்டின் சூழல் வேறு. ஆனால், இது பல்லின மக்கள் வாழும் மலேசியா. இங்கு தமிழன் மட்டும் வாழவில்லை. இந்தத் திரையரங்கம் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த முட்டாள்தனத்தைப் பார்த்த மலாய், சீன மக்கள் காறித் துப்பமாட்டார்களா?

கடவுளின் சிலைக்கும் பால் ஊற்றுகிறீர்கள்! நடிகனின் உருவப் படத்துக்கும் பால் ஊற்றுகிறீர்கள்! உங்களுடைய பக்தியைப் புரிந்து கொள்ள முடியவில்லையே. கோயிலை இடித்தால் போராட்டம் நடத்துகிறீர்கள். பிறகு, நடிகனின் படத்துக்குப் பாலூற்றி ஆராதனை காட்டுகிறீர்களே. இதுதான் உங்கள் கலாச்சாரமா என்று எவனாவது கேட்டால் பதில் இருக்கிறதா? படத்தைப் பார்த்து ரசித்தால் போதாதா? கலையை, கலைஞனை ரசிப்பதில் தவறில்லை. இப்படிப்பட்ட ஒன்று தேவையா?

நாங்கள் அரிசி மூட்டைக்கும் கூடுவோம். காசு கொடுத்து அழைத்தால் எங்கு வேண்டுமானாலும் போய் நிற்போம். எங்கு கூட்டம் நடத்தினாலும் அடித்துக் கொள்வோம். தன்மானத்தை அடகு வைப்பதில் எங்களுக்கு நிகர் எவருமில்லை. இப்பொழுது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கடவுளுக்குக் காட்டும் அதே பக்தியை நடிகனுக்கும் காட்டுவோம்.

படம் தடை செய்யப்பட்டவுடன் கொந்தளித்து எழுந்தார்கள். படத்தை மீண்டும் திரையிடாவிட்டால், இந்தியர்களின் ஓட்டு உங்களுக்குக் கிடைக்காது என்று நடப்பு அரசாங்கத்தை எச்சரித்தார்கள். இப்போது வசதி எப்படி? படம் மீண்டும் திரையிடப்பட்டு விட்டது. ஒட்டு மொத்த வாக்குகளையும் அவர்களுக்கே கொடுத்து வெற்றி பெற வைத்துவிடுவீர்களா? ஒரு திரைப்படத்துக்காக நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடிய வாக்கை அட‌மானம் வைத்துவிட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை, மாற்றம் நிச்சயம்!

தர்மராஜன் குணசேகரன், கோலாலம்பூர்

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272