அந்நியப்பட்டுபோன மஇகா-விற்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

mic-indian-gangsterகடந்த 12வது பொதுத் தேர்தல் வரை மலேசிய இந்தியர்களின் காவலனாகவும் அவர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சியாகவும் மஇகா விளங்கியது. ஆனால், 12-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் இந்தியர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில் இந்தியர்களின் அரசியல் பார்வையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல் அடைந்துள்ளதை நாம் மறுக்க முடியாது. இனரீதியிலான கட்சி அடிப்படையில் இந்தியர்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது எனலாம். நடப்பில் மக்கள் கூட்டணியில் இந்தியர்கள் அதிகமாய் உறுப்பினர்களாக உள்ளனர். இனவாத கட்சி என முத்திரை குத்தப்பட்ட பாஸ் கட்சியில் கூட இந்தியர்களின் பிரதிநிதித்துவம் வியப்பிற்குரியதே.

நாட்டின் 12வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் அதன் கூட்டணிக்கும் இந்தியர்கள் மீது கவனம் திரும்பியதை மறுக்க முடியாது. தேர்தலில் வெற்றி பெற இந்தியர்களின் வாக்குகளும் மதிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மஇகா-வை விட பல்லின கட்சியினர் இந்தியர்கள் மீது கூடுதல் அக்கறை காட்டி வருவதாகவும் அவர்களின் தேவைகளுக்காக குரல் எழுப்பி வருவதாகவும் கருதப்படும் நிலையில் தொடர்ந்து மஇகா மீது இந்தியர்களின் ஆதரவு குறைந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

நடப்பில் 12-வது பொது தேர்தலில் மக்கள் கூட்டணியை ஆதரித்து இந்தியர்கள் ஏமாந்து விட்டதாகவும் அவர்களின் ஆதரவும் நம்பிக்கையும் மஇகா மற்றும் தேசிய முன்னணி பக்கம் திரும்பி விட்டதாகவும் மஇகா தலைவர்களின் அறிக்கைகளும் மேடை முழக்கங்களும் அவ்வவ்போது வந்த வண்ணம் உள்ளது. உண்மையாகவே திரும்பி விட்டதா? அல்லது இவர்களின் முழக்கங்கள் எல்லாம் வெறும் ஆறுதலுக்கான பத்திரிக்கை அறிக்கைகளா எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது.

Minister MIC-Palanivel & Samyகடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியைக் கூட படிப்பினையாக கொண்டு மஇகா இன்னமும் இந்திய சமுதாயத்திற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற புலம்பலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பிரதமராய் நஜிப் பொறுப்பேற்றதிலிருந்து புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும் எனும் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால், அது வெறும் அறிவிப்பாகவே உள்ளது. புதிய பள்ளிக் கூடம் கட்டுவதில் மஇகா தீவிர முனைப்புக் காட்டவில்லை.

அதுமட்டுமின்றி, நடப்பில் எத்தனையோ தமிழ்ப்பள்ளிகள் அதன் அடிப்படை தேவைகள் இன்றி இருப்பதாகவும் பள்ளிக்கு வருகை அளிக்கும் மஇகா தலைவர்கள் பத்திரிக்கைச் செய்திக்குப் ‘போஸ்’ கொடுக்க காட்டும் முனைப்பினை அப்பிரச்னையை தீர்ப்பதில் காட்டவில்லை எனும் குறைப்பாடும் நிலவுகிறது.

ஒரே மலேசியா என முழங்குவதில் காட்டும் விசுவாசத்தை மஇகா மலேசிய இந்தியர்களை ஒரே மலேசியா கோட்பாட்டின் கீழ் இயக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியர்களின் நலனை விட கட்சியின் அரசியல் நலனும் தலைவர்களின் சுயநல அரசியலும்தான் இருக்கிறது.

மக்களுக்கு முன்னுரிமை தகுதியானவர்களுக்கு வாய்ப்பு என்பது பிரதமரின் உன்னத இலக்காக இருந்தாலும் அதன் அடிப்படையில் இந்திய சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்வதிலும் அதை அரசிடமிருந்து கேட்டு வாங்குவதிலும் மஇகா தவறிவிட்டதாக கருதப்படுகிறது.

அரசு துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பாகவே இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் இடைநிலை பள்ளியில் தமிழ்மொழி கட்டாயப் பாடம் இல்லாமை உட்பட, இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியர்களின் பிரச்னைகளையும் தேவைகளையும் சாதாரண கிளை தலைவர் முதல், அமைச்சர் வரை அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுவதும் சில வேளைகளில் ஏற்புடையதாகவே உள்ளது என்றால் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

MIC-Electionமேலும், மஇகா போட்டியிடும் தொகுதிகளுக்கு அப்பால்பட்ட தொகுதிகளில் மஇகா-வின் செயல்பாடுகள் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இல்லை எனலாம்-கூட்டம் சேர்ப்பது, மானியம் பெறுவதுமே. மஇகா இயக்கங்களுக்கு அதிகமாய் மானியம் கொடுக்க மாநிலத் தலைவர்களும் மத்திய அரசும் முன் வந்ததிலிருந்து மஇகா தலைவர்கள் பதிவு செய்த என்ஜீஓ-வின் எண்ணிக்கைகளும் அதிகம் என்றால் மறுத்திடத்தான் முடியுமா? ஒரு சில தலைவர்கள் குறிப்பிடத்தக்கது. மஇகா வழி மக்கள் சேவை செய்ய முனைப்புக் காட்டாத இவர்கள் பொது இயக்கம் வழி என்ன செய்திடப் போகிறார்கள்?

மஇகா-வின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து  பழனிவேல் கட்சியை வலுப்படுத்தவும் இந்தியர்களின் நம்பிக்கையை பெறவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது யாவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் அவர் மேற்கொள்ளும் நடடிக்கைகள் அடிதட்டு இந்தியர்களிடையே சென்றடைவதில் பெரும் சுணக்கம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாகவும் தொகுதி வாரியாகவும் கிளை வாரியாகவும் இருக்கும் தலைவர்கள் தேசிய தலைவரின் நடவடிக்கைக்கு பக்க பலமாக இருக்கிறார்களா என்றால் அது சிந்திக்க கூடியதாகவே உள்ளது. பழனிவேல் செல்லும் இடமெல்லாம் சீட்டுக்காக அவர் பின் செல்லும் கூட்டம் தத்தம் தொகுதிகளில் இந்தியர்களின் நம்பிக்கை இழந்தவர்கள்தான் பெரும்பான்மையினர் என்றால் மறுத்திடமுடியாது.

najib-palanivel-mic-pwtc-n4கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற சில தொகுதிகளில் மஇகா மக்களுக்கான அடிப்படை மையங்கள் கூட செய்யவில்லை. அதன் சேவை மையங்கள்கூட மூடப்பட்டதும் நிகழ்ந்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் யார் என்றுக்கூட தெரியாமல் நாளுக்கொரு தலைவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிக்கு வருவதும் போவதுமாய் உள்ளது இந்தியர்களுக்கு மட்டுமின்றி மஇகா தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல் இறுதிநேரத்தில் மக்கள் முன் முகம் காட்டுவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துமா? தேர்தலில்தான் வெற்றி பெற முடியுமா என்பது பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களைப் போல் கண்மூடிக் கொண்டு ஆதரிக்கும் சமுதாயமாக இந்திய சமுதாயம் இல்லை. அரசியல் விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர். மாற்றத்தையும் விரும்புகின்றனர். அதைவிட மக்கள் சேவையில் அக்கறையில்லாதத் தலைவர்களை புறகணிக்கவும் தொடங்கி விட்டனர். இந்நிலையில் இந்தியர்களிடமிருந்து அந்நியப்பட்டுபோன மஇகா, வருகின்ற பொதுத் தேர்தலில் மீண்டும் இந்தியர்களின் ஆதரவையும் நம்பிக்கையும் பெறுமா என்பது எட்டாக் கனியாகும்.

மஇகா-வினர் இந்தியர்களின் ஆதரவும் நம்பிக்கையும் மீண்டும் தங்களுக்கு கிடைத்து விட்டதாக கூறும் வேளையில் அடுத்த தேர்தலில் மஇகா-விற்கு சாவுமணி அடிக்கப்படும், இந்தியர்கள் மஇகாவை புறக்கணித்துவிட்டனர் என மக்கள் கூட்டணியினர் கூறுவது அரசியல் வழக்கமாக கருதப்பட்டாலும் கூடிய விரைவில் வரவிருக்கும் 13-வது பொதுத் தேர்தலில் அதற்கான விடை நிச்சயம் கிடைக்கும்.

வாக்குப் பெட்டிகள் முடிவு செய்யும் இந்தியர்களின் நம்பிக்கையும் ஆதரவும் மஇகா-விற்கு திரும்பி விட்டதா இல்லையா என்பதை. நாட்டின் 13-பொதுத் தேர்தல் உறுதி செய்யும், இந்தியர்களின் நம்பிக்கை மஇகா-விற்காக? அல்லது மலேசிய அரசியல் இந்தியர்களின் தேவைகளும் தேடல்களும் மாற்று கட்சியா என்று.

-சிவா, ஈப்போ

TAGS: