கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 03.04.2013
ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தியின் 21 நாள் உண்ணாவிரதம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். காந்தி, பகத்சிங் போல் உண்ணாவிரதம் வழி அறவழி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்ட வேதமூர்த்தியின் செயல் நம்மில் பலரது கவனத்தை ஈர்த்தது. அவரின் குறிக்கோள் அதை ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகும்.
அகிம்சை வழியாக அரசியலில் தாக்கம் ஏற்படுத்த ஒரு வலுவான ஆயுதம் உண்ணாவிரதமாகும். அடுத்தவரை காயப்படுத்துவதைவிட உண்ணாவிரதம் வழி சுயமாக தண்டித்து போராடுவதுதான் மனிதகுல போராட்டத்தின் உச்ச வரம்பாகும். உணவுக்காகவே வாழும் உயிரினங்களில் மனிதனால் மட்டுமே இதைச் செய்ய இயலும். மருத்துவ ரீதியில் உடலுக்குச் சக்தி கொடுக்க உடல் சேகரித்து வைத்திருந்த எல்லா சத்துகளும் உண்ணாவிரதம் தொடங்கிய மூன்றே வாரங்களுக்குள் முடிந்து விடும். அதன்பிறகு உடல் தன்னையே உட்கொண்டு உயிர்வாழ முற்படும். இவ்வகையில் உயிர் நீத்து வரலாறு படைத்துள்ளனர் பலர்.
ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியின் உண்ணாவிரதத்தின் வலிமை மகத்தானது என்பதை மறுக்க இயலாது. அதன் நோக்கம் ஹிண்ட்ராப் முன்வைத்த இந்தியர்களுக்கான செயல்திட்டம் மலாய்க்கார அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். அப்படி ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில்தான் இந்தியர்கள் தங்களின் வாக்குரிமைக்கான முடிவை செய்ய வேண்டும்.
தேசிய முன்னணி அல்லது மக்கள் கூட்டணி என இதில் ஆதரிக்கும் கட்சிக்கு ஹிண்ட்ராப் தனது ஆதரவைத் தரும். இருவருமே ஆதரித்தால் ஹிண்ட்ராப் தனது முடிவை எப்படி செய்வார்கள் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
மக்கள் கூட்டணி தனது கட்சியின் கொள்கை அறிக்கை இனவாத தன்மையற்றது என்றும் அதன் ஆரஞ்சு புத்தகத்தில் (கொள்கை அறிக்கை) அனைத்து சமூகங்களின் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் மறுசீரமைப்பு செய்யும் கொள்கைகளை கொண்டுள்ளதால் இனவாத அடிப்படையில் சிறப்பு பிரகடனத்தைச் செய்ய இயலாது என்றனர்.
தேசிய முன்னணி ஹிண்ட்ராபின் செயல் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்பது ஒரு வியூக அடிப்படையிலான எதிர்ப்பார்ப்பாகும். உண்ணாவிரதத்தின் 15-வது நாளில் பிரதமர் நஜிப்பை காணச்சென்ற வேதமூர்த்தி திரும்பிவந்து தனது உண்ணாவிரத்தைத் தொடர்ந்தார். தாங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுதான் மிக முக்கியமான விஷயம் என்றும், ஒரு மணி நேரச் சந்திப்பில் தீர்க்க முடியாத அளவுக்கு பிரச்னைகள் ‘மிகவும் சிக்கலாக’ இருப்பதால் மேலும் விவாதங்கள் தொடரும் என ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன் கூறினார்.
இதற்கிடையில் உண்ணவிரதத்தை ஒரு முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிய ஆதரவாளர்களுக்கு ஹிண்ட்ராப் தலைவர் சில நிபந்தனைகளை விதித்தார். அவற்றுள் ஒன்று, ஹிண்ட்ராப்பின் செயல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட ஒப்புக்கொள்ளும் தரப்பினருக்கு மட்டுமே ஹிண்ட்ராப் ஆதரவு அளிக்கும். மற்றொன்று, செயல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்து போடாத வரையில் பாரிசான் மற்றும் பக்காத்தான் ஆகிய இரு கூட்டணியினரும் நடத்தும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்பதாகும்.
அவரின் ஆதரவாளர்கள் நிபந்தனைகளை ஏகமனதாக ஏற்றுக் கொண்டதால் வேதமூர்த்தி தனது 21 நாள் உண்ணாவிரதத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த உன்னத உண்ணாவிரதத்தின் பலனாக எதை சமூகம் அடைய வேண்டும் என்பதில் இப்போது கவனம் தேவைப்படுகிறது. அதை எப்படி மக்களின் உணர்வுகளுக்குக் கவனமாக அளிப்பது என்பதும் சிக்கல் கலந்ததாகவே உள்ளது.
இந்தியர்களின் அரசியல் தீர்வு என்பது ஒரு நீண்ட பயணமாகத்தான் இருக்க முடியும். பலவகையில் கூறு போடப்பட்ட நிலையில் இந்தியர்கள் இருப்பதால், அரசியல் தீர்வாக இந்த உண்ணாவிரதம் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்க வேண்டுமானால் அது நமது நாடு தற்போது எதிர்ப்பார்க்கும் தேர்தல் வழி நடக்காது. கட்சி அரசியல் நடத்துபவர்கள் தேர்தலில் வெற்றி பெற பலவகையான வேசங்களை போடுகிறார்கள், பலவகையான வேடங்களில் பவனி வருகிறார்கள். என்றும் இல்லாத அளவிற்கு பண புழக்கமும் அதிகரித்துள்ளது. இவை அனைத்துமே அரசியல் அதிகாரத்தை தற்காக்கவும் கைப்பற்றவும் மேற்கொள்ளப்படும் முதலீடாகும். அரசியல் உரிமையான ஓட்டுரிமை வணிக அடிப்படையில் பல நிலைகளில் பேரம் பேசப்படுகிறது.
2008-இல் கடுமையான வரலாற்றுத் தோல்வியைத் தழுவிய தேசிய முன்னணி அரசாங்கம் இதுவரையில் மஇகா கேட்டுக்கொண்ட கொள்கை அடிப்படையிலான எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. உதாரணமாக ஒன்பதாவது, பத்தாவது மலேசியத் திட்டங்களுக்காவும், தேசிய பொருளாதார ஆலோசனை மன்றங்களுக்காவும் மஇகா பலவகையான சிறப்பு சமூக பொருளாதார திட்டங்களை பரிந்துரை செய்து அவற்றை அமுலாக்க வழிமுறைக்கு உட்படுத்தக் கோரியது. அரசாங்கம் அவற்றை அறிக்கை அளவில் ஏற்றுக்கொண்டது. ஆனால், அந்த இனவாத அரசு அவற்றை கொள்கைகளாக இதுவரையில் உருவாக்கவில்லை.
தற்போது நஜிப் ஹிண்ட்ராப் செயல் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், வேதமூர்த்தியின் நிபந்தனைப்படி அவரின் ஆதரவாளர்கள் தேசிய முன்னணியை ஆதரித்து செயல்பட வேண்டும். தற்போது உள்ள சூழலில் அம்னோவின் நஜிப் தனது ஆட்சியை தற்காக்க எதையும் செய்ய முற்படுவார் என்பது கணிப்பாகும். அவ்வகையில் செயல்படும் அம்னோதான் இனவாதத்தின் ஆணிவேர் என்பது ஹிண்ட்ராப் உட்பட பல முற்போக்குவாதிகளின் கருத்தாகும்.
தேசிய முன்னணி ஆட்சியில் சனநாயகம் என்பது அம்னோவின் தயவில்தான் அரங்கேரும் என்பதை அறிவோம். லஞ்சம், ஊழல், இனவாதம், அதிகார முறைகேடு வழி நாட்டைக் கட்டுப்படுத்தி சிறுபான்மையினரை ஒடுக்கி அரசாங்கம் நடத்தும் அம்னோவை நம்மால் எந்த அளவு நம்ப முடியும் என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.
அப்படியே நம்பினாலும், ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றை செயலாக்கம் செய்வது எளிதானதல்ல. உதாரணமாக, இலங்கையில் ராஜபக்சே ஆட்சிக்கு தனது முழு ஆதரவை அளித்த தேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முதுகில் குத்தியது ராஜபக்சே அரசாங்கம். இந்தியாவிலும் இதேநிலைப்பாடுதான், மத்திய அரசு அமைய உதவும் மாநில உறுப்பு கட்சிகள் மாற்றம் கோரும் வகையில் செயல்படுவது அரிதாகவே உள்ளது. சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்குத் தன்னாட்சியும் வளங்களும் இருந்தும் அவை எப்படி அம்னோவால் கட்டுப்படுத்தப்பட்டன என்பதையும் அறிவோம்.
மலேசியாவைப் பொறுத்தமட்டில் தேசிய முன்னணியால் இந்தியர்களின் உரிமை பிரச்சனைகளுக்கு அரசியல் வழியாக தீர்வு ஏற்படாது. அம்னோவால் தனது இனவாத சட்டையை உரிக்க முடியாது. அதன் கவச குண்டலமே மலாய் இன மேன்மைவாதம்தான். அதைக் கொண்டுதான் அம்னோ மலாய் இனத்தைத் தற்காத்து பெரும்பான்மையில் உள்ள அவர்களை ஒன்றிணைக்கிறது.
அம்னோவுக்கு துணைப்போவதின் வழி எந்த சிறுபான்மை இனமும் உரிமை அடிப்படையில் அரசியல் பயனை அடைய இயலாது. அம்னோவின் இனவாத்திற்குச் சவாலாக இப்போது உருவாக்கப்பட்டுள்ள மாற்று அமைப்பான மக்கள் கூட்டணி வெளிப்படையாகவே அம்னோவின் இனவாதத்தைச் சாடுகிறது. அதன்வழி உருவாகி வரும் அரசியல் அம்னோவை வெகுவாக பலவீனப் படுத்தியுள்ளது.
ஆட்சி செய்ய இரண்டு வகையான கட்சி அரசியல் வழிமுறைகளை மலேசியர்கள் உருவாக்க இதுதான் தக்க தருணமாகத் தோன்றுகிறது. இந்தியர்கள் தங்களின் ஆதரவை முழுமையாக மாற்று அரசியலுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே அவர்களால் தங்களின் பலத்தை உணர முடியும். காரணம் அவ்வகையான சூழல்தான் பிளவுபட்ட பெரும்பான்மை இனம் ஆட்சி செய்ய, சிறுபான்மையினரின் கூட்டணித் தேவையை அத்தியவசியமாகும்.
இப்படி சிக்கலான சூழலில் உண்ணாவிரதம் வழி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக வைத்து போராடும் வேதமூர்த்தி, பிரதமர் நஜிப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண இயல்வது ஹிண்ட்ராப் போராட்டத்திற்குப் பலவீனமாகவே அமையும்.
இந்த இக்கட்டான நேரத்தில் ஹிண்ட்ராப் தலைவர் எடுக்கும் அது போன்ற முடிவுகளுக்குத் தேசிய முன்னணி உறுப்பு கட்சிகள் வேண்டுமானால் ஆதரவு தரட்டும், அது அவர்கள் குளிர்காய உதவும். ஆனால் வெகுசன மக்களும் ஹிண்ட்ராப் ஆதரவாளர்களும் வேதமூர்த்தி மீது பரிவும் பாசமும் வைத்திருப்பினும் அரசியல் தீர்வுக்கு வழிமுறை அம்னோ அற்ற அரசியல் என்பதை உணர வேண்டும்.
வேதமூர்த்தியின் உண்ணாவிரதம் நஜிப்பின் வெற்றிக்காக எடுக்கப்பட்டது போன்ற ஒரு வரலாறு தேவையற்றது, அல்லது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு பிடித்த கதையும் நமக்கு வேண்டாம். ஹிண்ட்ராப் அமைப்பின் பலம் மக்களின் கைகளில்தான் உள்ளது. அதை உணர்த்தும் தன்மை கொண்ட வேதமூர்த்தி நஜிப்பை புறக்கணிக்க வேண்டும். முடிவை மக்களிடம் விட்டு விட வேண்டும்.