தேசிய முன்னணி மீண்டும் வென்றால், தோல்வியடைவது நாட்டு மக்களே!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர், 15.04.2013

najib_bnஅடுத்த மாதம் 5-ஆம் தேதி உலக சிரிப்பு தினம். அன்னையர் தினம், காதலர் தினம் போல் மே 5-ஆம் தேதி சிரிப்பு தினமாகும். உலக மக்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்கவும் சிரிப்பின் ஆற்றலை உணர்த்தவும் அந்நாள் கொண்டாடப்படுகிறது. மனிதனால் மட்டுமே மகிழ்வைக் குறிக்க சிரிக்க இயலும்.

அந்நாளின் இறுதியில் மலேசியாவில் உள்ள பாதி மக்கள் மகிழ்ச்சியால் சிரிப்பர், மற்றவர்களுக்குச் சிரிப்பு வராது. அப்படியே வந்தாலும் அது விரக்தியானதாகவே இருக்கும். அன்று மாலைதான் நமது நாட்டின் சரித்திரபூர்வமான 13-வது பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அதில் 56 ஆண்டுகள் மலேசியாவை ஆட்சி செய்யும் தேசிய முன்னணிக்கு எதிராக  எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான மக்கள் கூட்டணி தேர்தல் களத்தில் இறங்குகிறது.

aru_suaram_rally_2013எனது அரசியல் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தேர்தல் முடிவால் அனைத்து மக்களுமே மகிழ்வுடன் சிரிக்க வேண்டும் அல்லது வருத்தப்பட வேண்டும். காரணம் 56 ஆண்டுகள் ஆண்ட ஒரே கட்சியான தேசிய முன்னணி மீண்டும் வென்றால், தோல்வியைத் தழுவுவது எல்லா கட்சிகளையும் சார்ந்த நாட்டு மக்களாவர். அதற்கான காரணங்களை இக்கட்டுரை கண்ணோட்டமிடுகிறது.

ஒரே ஆட்சி முறையில் மலேசியாதான் முதன்மை

ஒரு நாட்டை பல வழிமுறைகளில் ஆளலாம். அதை அராஜக ஆட்சி, ஏகாதிபத்திய ஆட்சி, இராணுவ ஆட்சி, ஒரே கட்சியின் ஆட்சி அல்லது ஜனநாயக ஆட்சி என ஐந்து வகையாக பிரிக்கலாம்.

அராஜக ஆட்சி என்பது ஓர் உருப்படியான அரசாங்கம் இல்லாத நிலையை காட்டும். உதாரணமாக சோமாலியா, ஏமன் போன்ற நாடுகளில் கட்டொழுங்கை அரசாங்கத்தால் கொண்டுவர இயலாது. ஏகாதிபத்திய ஆட்சி என்பது ஆட்சி செய்பவரது அதிகாரத்தை எந்தச் சட்டத்தாலும் கட்டுப்படுத்த இயலாது, உதாரணமாக புருணை, காத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளாகும். இராணுவ ஆட்சியில் உள்ள நாடுகளில் வட கொரியா மற்றும் பிஜி தீவும் அடங்கும். ஒரே கட்சியின் கீழ் இயங்கும் நாடுகள் சீனா, வியட்நாம், கியூபா போன்றவையாகும். ஜனநாயக வழிமுறையில் மலேசியா இருப்பினும் அது ஒரே கட்சியின் கீழ் இயங்கும் நாடாகவே கருதப்படுகிறது.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இரண்டாம் நிலையில் உள்ள கலிபோர்னியாவின் ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறை ஆய்வின்படி(*) மலேசியா போன்ற நாடுகள் ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றி கட்சி அரசியல் அமைப்புகளைத் தேர்தலுக்கு அனுமதித்தாலும் அது அரசியல் அதிகாரத்தை இழப்பதில்லை என்ற வகையில் அதன் ஆட்சியை ஒரே கட்சி ஆட்சி முறை என வகைப்படுத்தியுள்ளது.

dataஉலக வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது மலேசியாதான் ஒரே கட்சியின்வழி 56 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்பு சிங்கப்பூரை அடுத்து அதிக பட்சம் ஒரே கட்சி ஜப்பானை 38 ஆண்டுகள் மட்டுமே ஆண்டது. மற்ற நாடுகளின் நிலவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

ஒரே கட்சி ஆட்சி செய்வதால் நன்மைகளும் உள்ளன என்கிறது ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு. ஒரே கட்சி ஆட்சி முறை  தனது சர்வதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறையைக் கையாள்வதால் அதிகமான போராட்டங்கள் நிகழ்வதில்லை. அதன் அதிகார அடக்குமுறைக்குத் துணையாக காவல் துறையும் இராணுவமும் வலுவாக இருக்கும். அதனால் அந்த அரசு நிலைத்தன்மையுடன் இருக்கும். அதன் அதிகாரத்திற்கு எளிதாக எந்த  வன்முறை வழியும் மிரட்டல்கள் வராது. அதன் பொருளாதார வளர்ச்சி துரிதமாக இருக்கும். அதன் அதிகார பலம், ஓர் உயரிய அந்தஸ்தை உருவாக்குவதன்வழி அதனால் மேல்தட்டு மக்களுடன் பேரம் பேச முடியும். அதன்வழி மாற்று சிந்தனை உருவாகும் வழியற்று போவதால் அதனால் வெகுசன மக்களை ஒன்று திரட்டவும் இயலும்.

மலேசியாவின் இனவாதக் கொள்கை

மலேசியாவைப் பொறுத்தமட்டும் மே 13, 1969-ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்குப் பிறகுதான் இனவாத வழிமுறையைக் கொண்டு அரசியல் சித்தாந்தம் உருவாக்கப்பட்டது. விடுதலை தந்தை  துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால்  உருவாக்கப்பட்ட மிதவாத அரசு 1970-ஆம் ஆண்டு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு புதிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பொருளாதார சீரமைப்பைக் குறிக்கோளாக கொண்ட அதை உருவாக்கியவர் தற்போதைய பிரதமர் நஜிப் அவர்களின் தந்தை துன் அப்துல் ரசாக் ஆவார். பெரிக்காத்தான் என்ற அம்னோ கூட்டணியைப் பாரிசான் நேசனல் என மாற்றியவரும் இவர்தான். அம்னோவில் இருந்து வெளியாக்கப்பட்ட துன் மகாதீரை மீண்டும் அரசியலில் இணைத்தவரும் இவரே.

ரசாக் அடிதளமிட்ட இனவாத அரசியலை அவருக்கு பின் வந்த துன் ஹுசேன் ஓனால் சமாளிக்க இயலாமல் போகவே அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின்வந்த துன் மகாதீர் 1981 முதல் 2003 வரையில் மலேசியாவை அம்னோவின் அதிகார ஆட்சியில் வைத்திருந்தார். இவரது அந்த 22 ஆண்டு கால சர்வதிகார ஆட்சியில்தான் மலேசியா ஒரு நவீன மலேசியாவாகவும் மாறியது.

துன் மகாதீர் ஒரு மலேசிய ஹிட்லர்

image 3மகாதீரை ஒரு மலேசிய ஹிட்லர் எனலாம். இருவருமே அரசியல் பலத்தைச் சர்வதிகாரமாக மாற்றி, எதிரிகளை ஒழித்துவிட்டு, மக்களைக் கட்டுப்படுத்தி நாட்டை ஆண்டவர்கள்.

மலாய் தேசிய இனவாதமும் தூர நோக்கு சிந்தனையும் கொண்டவர் மகாதீர். சீனர்களையும் இந்தியர்களையும் இவர் நாட்டு மக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நாடு மலாய் இனத்தினுடையது; அதைத் தற்காக்க அரசியல் அதிகாரமும் பொருளாதார பலமும் தேவை என்பதை வலியுறுத்தினார். இயற்கையாகவே விருந்தோம்பலுக்கு இலக்கணமாகவும் அன்பும் பண்பும் நிறைந்த மலாய்க்காரர்களை அடிமைத்தனம் கொண்டவர்கள் என்று சாடினார். சீனர்களையும் இந்தியர்களையும் சுட்டிக்காட்டி மலாய்க்காரர்கள் இனவாதத்தின்வழி ஒன்றுபடாவிட்டால் சொந்த நாட்டிலேயே அடிமையாக வாழ நேரிடும் என பயமுறுத்தினார்.

ஆட்சிக்காலம் முழுவதும் 2/3 பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டிருந்ததால், அரசமைப்பு விதிகளில் மாற்றங்கள் செய்தார். அதன்வழி நாட்டின் மாமன்னர் மற்றும் சுல்தான்களின் அதிகாரத்தைக் குறைத்தார். மகாதீர் காலத்தில்தான் 1997-இல் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 106 அரசியல்வாதிகளும்  கல்விமான்களும் தடுத்து வைக்கப்பட்டனர். சூப்ரிம் கோர்ட் நீதிமன்றத் தலைவர் துன் சாலே அபாஸ் மற்றும் ஐந்து நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அன்வார் இப்ராஹிம்மை 1982-இல் அம்னோவுக்குள்ளும்  கொண்டு வந்த மகாதீர், அன்வார் அவருக்கு எதிராக திரும்பக்கூடும் என்பதை உணர்ந்ததும், அவரை 1998-இல் வெளியேற்றினார்.

அரசாங்கத்தின் மூன்று தூண்களாக இருக்கும் நாடாளுமன்றமும், நீதித்துறையும் அரசாங்க நிர்வாகமும் தன்னிச்சையாக இயங்குவது ஒரு நாட்டின் ஜனநாயக தனித்தன்மை  ஆகும். சட்டங்களை உருவாக்குவது நாடாளுமன்றம், அதைக்கட்டி காப்பது நீதிமன்றங்கள், மக்களுக்காக நாட்டை நடத்துவது அரசாங்க நிர்வாகமாகும். அரசாங்க நிர்வாகத்திற்கு மட்டும்தான் பிரதமர் தலைவராக இருக்க வேண்டும்.

மகாதீரே சட்டங்களை இயற்றுவார்; அவரே நீதிபதிகளையும் நியமிப்பார்; அவரே நிர்வாகத்தையும் செய்வார். மூன்று தூண்களையும் ஆட்டிப்படைத்தவர் அவர். அதனால்தான் என்னவோ திறமையான  மஇகா-வின் முன்னாள் தலைவர் சாமிவேலுவால் கொள்கையளவில் எதுவும் செய்ய இயலாத நிலையிலும் எல்லாம் செய்கிறோம் என்று மகாதீருடன் இணைந்து இந்தியர்களின் சர்வதிகாரியாக மாறினார்.

2001–இல் நடந்த கம்போங் மேடான் வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொடூரமாக மலாய்க்காரர்களால் தாக்கப்பட்டதும் அதில் அறுவர் உயிர் இழந்ததும் மகாதீரின் காலத்தில்தான். அது சார்பாக இதுவரையிலும் அரசாங்கம் எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அது பற்றி நான் தமிழில் எழுதிய ஆய்வு நூலை அரசாங்கம் தடை செய்தது.

மக்கள் போராட்டம்

hindraf2003-இல் பதவியேற்ற துன் அப்துல்லா படாவிதான் மக்களுக்கான ஜனநாயக கட்டுப்பாட்டில் ஒரு சிறிய இடைவெளியைத் தந்தார். கொடுக்கப்பட்ட அந்த வெற்றிடம் உடனே நிரப்பப்பட்டது. பெர்சே பேரணி, பிபிஎஸ்எம்ஐ என்ற ஆங்கிலத்தில் அறிவியல் கணிதம் போதிப்பதற்கு எதிரான பேரணி, நாடாளுமன்றத்தின் முன் தமிழ்ப்பள்ளிகள் மேற்கொண்ட பேரணி, இண்ட்ராப் பேரணி போன்றவை வழி மக்கள் தங்களின் ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்தினர்.

கட்டுபடுத்தப்பட்ட ஊடகங்களுக்குப் போட்டியாக மின்னியல் ஊடகங்கள்  ஈடுபட்டன. அவை சார்ந்த இணையத்தள சமூக தொடர்பு சாதனங்களும், கைபேசி, முகநூல், குறுஞ்செய்தி போன்றவை மக்களிடையே உடனுக்குடனான தொடர்பை ஏற்படுத்தின.

அவற்றை அரசாங்கத்திற்கு முறையாக கையாளத் தெரியவில்லை. அதற்குத் தெரிந்தெல்லாம் போலிஸ், இராணுவம், சட்டம் போன்றவற்றையும் அனைத்து அரசாங்க தொடர்பு சாதனங்களையும் பயன் படுத்துவதுதான். மக்களிடம் பயத்தை உண்டாக்க வேண்டும் அல்லது பயத்தை உற்பத்தி செய்ய வேண்டும். அவ்வகையில் மக்கள் அரசாங்கத்திற்குப் பயப்பட வேண்டும் என்பதாகும். அவசர கால சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம், போலிஸ் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் போன்றவை போதுமான அளவு அரசாங்கத்தால் பயன் படுத்தப்பட்டன.

2008-இல் நடந்த பொதுத்தேர்தலில் அம்னோவின் தேசிய முன்னணி கட்டிக்காத்த நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையை இழந்ததோடு ஐந்து மாநிலங்களையும் எதிர்க்கட்சிகளிடம் இழந்தது. அதில் பேராக் மாநிலத்தைக் கட்சி தாவலால் மீண்டும் தேசிய முன்னணி கைப்பற்றியது.

அரசியல் அதிகாரமும் ஒரே மலேசியா யுக்தியும்

image 2அம்னோவின் நெருக்குதலால் ஏப்ரல் 2009-இல் அப்துல்லா படாவி பதவி விலக நஜிப் அவர்கள் பிரதமரானார். நஜிப் கடந்த 4 ஆண்டுகளாக, ஒரே மலேசியா என்ற சுலோகத்தை மையமாக்கி தேசிய முன்னணியின் வழி பல புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக பெரும் முயற்சியில் இறங்கினார்.

எப்படியாவது மத்திய ஆட்சியைத் தற்காக்க வேண்டும் என்பதோடு கடந்த தேர்தலில் இழந்த பினாங்கு, சிலாங்கூர், கெடா மற்றும் கிளந்தானைக் கைப்பற்ற கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டது அம்னோ. முன்பு குறிப்பிட்ட ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆய்வின் படி, ஒரே கட்சியின் ஆட்சி என்பது பல நன்மைகளைக் கொண்டுவந்தாலும் அதனை மக்கள் நீண்ட கால நடைமுறையாக ஏற்பதில்லை. அது போன்ற ஒரே ஆட்சி முறையில் அரசியல் பலம் ஒட்டு மொத்த மனித மேம்பாட்டை விட்டு தனிப்பட்ட மேம்பாட்டை நோக்கிச்செல்லும் தன்மை கொண்டதாக அமைவதே இதற்குக்  காரணமாகும்.

அது தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி எதிர்பவர்களைத் தன்பக்கம் சேர்த்துக்கொள்ளும். மேல்தட்டு மக்கள் எப்போதுமே தனக்குச் சாதகமாக செயல்படும் வகையில் அவர்களுடன் ஒத்துப்போகும். தனது அரசியல் அதிகாரத்திற்குச் சவாலாக விளங்குபவர்களை நடுநிலமையாக்குவதும் இணைத்துக்கொள்வதும் அதன் யுக்திகளாகும்.

ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம்

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு 1950 முதல் 2006 வரையில் உலக நாடுகளிடையே  உண்டான மாற்றத்தை மூன்று காலமாக வகுத்துள்ளது.  1950 முதல் 1964 வரையில் காலனித்துவ விடுதலைக் காலம் என்றும், 1965 முதல் 1988 வரையில் மூளாப்போர் (Cold War) காலம் என்றும், 1989 முதல் 2006 வரையில் மூளாப்போருக்கு பிந்திய காலம் என்றும் பிரித்துள்ளனர். மூளாப்போர் என்பது அமெரிக்கா தலைமையில் ஒன்றுபட்ட நாடுகளும் சோவியத் யூனியன் தலைமையில் ஒன்று பட்ட நாடுகளும், ஒன்றை மற்றொன்று விஞ்சி இருக்க மேற்கொண்ட சூழ்ச்சிப் போர் ஆகும்.

மூளாப்போருக்குப் பிந்திய காலமான 1989 முதல் 2006 வரையில் மட்டும் உலக அளவில் 85 நாடுகள் ஒரே ஆட்சிமுறையைத் தூக்கியெரிந்து விட்டு ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளனர். மக்களாட்சி என்றும் ஜனநாயகம் என்றும் கூறி அரசியல் அதிகாரத்தைப் பெற்று பிறகு சர்வதிகார முறையில் ஆட்சி செய்யும் ஒரே கட்சி முறைகளை மக்கள் அகற்றினர்.

இதற்குக் காரணம், ஜனநாயகம் என்பதில் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதாகும். அந்த அதிகாரம் ஆளுபவர்களிடம் அதிக காலம் இருப்பதால் அவர்கள் அதைக்கொண்டு தங்களை அதிகாரமிக்கவர்களாக உருவாக்கிக் கொள்கிறார்கள். அதன் வழி சட்டம் இயற்றுவது,  கொள்கை உருவாக்கம், நாட்டின் வளத்தைப் பயன்படுத்துவது, தேர்தல் ஆணையம், நீதி மன்றம், போலிஸ், இராணுவம், லஞ்ச ஒழிப்பு இலாகா, தொடர்புத்துறை சாதனங்கள் என அனைத்தையும் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து தங்களின் அதிகாரத்தைத் தற்காத்துக்கொள்கின்றனர்.

மலேசியாவைக் காப்பாற்ற வேறு வழியில்லை

image 4இன்று மலேசியாவில் இந்த நிலைதான் உள்ளது. உதாரணமாக, பெர்சே 2.0 தூய்மையான தேர்தல் வேண்டும் எனக்கோரி ஒரு பேரணியை ஜூலை 9-ஆம் தேதி நடத்தியது. அதற்கு அரசாங்கம் அனுமதி தர மறுத்தது. ஸ்டேடியம் மெர்டேக்காவைக்கூட தரவில்லை. பேரணியின் போது கண்ணீர் புகைக்குண்டுகளும், இரசாயன நீரும் பீச்சப்பட்டு பேரணியில கலந்து கொண்டவர்களைத் துரத்தியடித்தனர்.  அன்று சுமார் 1,700 பேர் கைது செய்யப்பட்டனர். பாகாருடின் அகமட் என்பவர் கண்ணீர் புகைக்குண்டின் காரணமாக காலமானார். பலர் காயமடைந்தனர்.

தூய்மையான தேர்தலுக்கு அரசாங்கம் ஏன் பயப் படவேண்டும்? இதற்குப் பதில் பயம். தோற்று விடுவோம் என்ற பயம். எனவே எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் கொண்ட அரசாங்கம் எப்படி ஜனநாயகத்தை வளரவிடும்? தற்போது அயல் நாட்டுகாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களும் வாக்காளர்களாக  பதிந்துள்ளனர். எதனால் இதெல்லாம்?

Image 1அடுத்தது நாட்டின் நிதி நிர்வாகத்தைப் பார்ப்போம். இன்று நாட்டின் கடன் ரிம 502 பில்லியன் ஆகும். 2008-இல் ரிம 274 பில்லியனாக இருந்த கடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரிம 228 பில்லியனாக கூடியுள்ளது. சாதாரண மக்களுக்கு இதன் தாக்கம் புரியாது. அதிகமான கடன் வாங்காமல் செயல்படும் போது நாட்டின் வருமானததை மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். இந்த கடனால் மட்டும் வருடம் ரிம 17 பில்லியன் வட்டி கட்ட வேண்டும். இது நாள் ஒன்றுக்கு ரிம 46 கோடியாகும். இந்த கடனைக் கட்ட இயலாத சூழலில் அரசாங்கம் பணத்தை அச்சடித்துக் கட்டும், அந்நிலை வந்தால் பண வீக்கமும் விலைவாசியும் உயரும். நமது பணத்தின் மதிப்பு சரிவடையும். ஆனால் அயல்நாட்டில் முதலீடும் சொத்தும் வைத்துள்ளவர்களும் சொகுசாக வாழ்வார்கள்.

உங்களுக்குத் தெரியுமா! திருட்டுத்தனமாக பணம் வெளியாகும் நாடுகளில் மலேசியா மூன்றாம் நிலை வகிக்கிறது (**). 2001 முதல் 2010 வரையிலும் ரிம 873 பில்லியன் (USD 285.24) நமது நாட்டிலிருந்து அயல் நாட்டுக்கு வெளியேறியுள்ளது. இது வருடத்திற்கு ரிம 87.3 பில்லியன் (8,730 கோடி) ஆகும். இது யாருடையது, எப்படி கிடைத்தது என்பதெற்கெல்லாம் விசாரணைக் கிடையாது.

அதிகாரம் ஊழலுக்கு வித்திடும், முழுமையான அதிகாரம் முடிவற்ற ஊழலுக்குத் துணை போகும் என்பது போல நமது நிலமையுள்ளது. அதனால் தொடர்ந்து அதிகாரம் கோரும் தேசிய முன்னணிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கோருவதற்கு வலுவான காரணங்களே கிடையாது. நாட்டைச்  செம்மைப்படுத்த அதிக காலம் ஒரே கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து வரலாறு படைத்தவர்கள் நாம்.

மக்களின் கடமை

நாட்டைச் சீரமைப்பது நாட்டு மக்களின் கடமை. ஜனநாயகம் என்பது வாக்களிப்பது மட்டுமல்ல. நாட்டின் நலத்தைப்பேண போராடுவதும்கூட ஜனநாயகம்தான். இந்த கட்டுரையின் வழி பகிர்ந்து கொண்டவை:

bersih1. ஒரே ஆட்சிமுறை என்ற நிலையில் அதிகாரத்தை ஒரே தரப்பினரிடம் நீண்ட காலம் கொடுப்பதால் மக்களாட்சி என்பது சர்வதிகார ஆட்சியாக மாறுகிறது.

2. ஜனநாயகம் என்பது அதிகாரத்தை மக்களிடம் கொடுப்பதாகும். சர்வதிகார முறையை உருவாக்கும்  ஒரே ஆட்சி முறை அரசியல் அதிகாரத்தைத் தற்காக்க போராடும். பல மோசமான வழிமுறைகளையும் கையாளும்.

3. உலகத்திலேயே அதிக காலம் ஒரே ஆட்சியில் இருக்கும் நாடு மலேசியா ஆகும்.

4. மலேசியர்கள் ஆட்சி மாற்றம் செய்வதன் வழி மட்டுமே ஜனநாயகத்திற்கு உயிர் கொடுக்க இயலும்.

5. நாட்டை வளமாக்க 56 ஆண்டுகள் கொடுத்தும் தொடர்ந்து சுமார் 65 % குடும்பங்கள் வறுமை சூழலில்தான் வாழ்கிறார்கள். அதே வேளையில் நாட்டின் கடன் அதிகரித்துள்ளது, நாட்டின் வளம் திருட்டுதனமாக வெளிநாடு செல்கிறது.

எனவே, ஒரே கட்சி முறையில் கடந்த 56 வருடங்கள் மலேசியாவை ஆண்ட தேசிய முன்னணி நம்மை ஒரு தரமான நாட்டு மக்களாக உருவாக்கத் தவறி விட்டது. அதுவே மீண்டும் தேர்தலில் வெற்றியடைந்தால், அது ஜனநாயகத்தை விரும்பும் மலேசியர்களுக்குக்  கிடைக்கும் பெரிய தோல்வியாகும்.

குறிப்பு :

(*) – Political Order and One-Party Rule, Beatriz Magaloni and Ruth Kricheli Department of Political Science, Stanford University, Stanford, California 94305; The Annual Review of Political Science;, Rev. Polit. Sci. 2010. 13:123–43.

(**) http://www.theedgemalaysia.com/business-news/227556-in-top-3-for-illicit-capital-outflow-.html

 

TAGS: