இரண்டு இல்லாத ஒன்று இல்லை. இது உலக இயற்கை நியதி. இரவும் பகலும் அற்ற நாள் இல்லை. இரு துருவங்கள் அற்ற பூமி இல்லை. பெண் ஆண் இல்லாத உயிரினம் இல்லை. அதே வேளையில், இரண்டும் ஒன்றாகவே இருந்ததில்லை. ஏனெனில் இரண்டும் வேறுபட்டவை. வேறுபட்ட நிலையில் வேறுபட்ட செயல்பாடுகள் கொண்டவை. உயிரனங்களும் அவ்வாறே. மனிதர்களுக்கிடையில் வேறுபட்ட சிந்தனைகள், வேறுபட்ட செயல்பாடுகள். இவை வேறுபட்ட கருத்துகளாக, வேறுபட்ட விளைவுகளை நாடுகின்றன.
மாக்களாக இருந்தவர்கள் மக்களாக மாறி மழை பெய்ததுகூட தெரியாமல் “மந்திரியே மழை பெய்ததா?” என்று வினவும் அரசனின் ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியத் தோற்றுவித்த மக்கள் தங்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட பிரதமர் மக்களின் நலனைவிட மகனின் நலனுக்காக விடுப்பு எடுத்துக்கொண்ட முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் டோனி பிளேரை சாடினர். அவரை பிரதமர் பதவிலிருந்தும் அகற்றினர். அவரது ஆளுங்கட்சியையும் தோற்கடித்தனர். இன்னொரு மாற்றரசுக் கட்சியையும் அதன் தலைவரையும் ஆட்சியில் அமர்த்தினர். இப்போது அவரும் விரட்டப்படும் நிலையில் இருக்கிறார்.
மக்கள் நலன் பேணாத, மக்களின் மனப்போக்கிற்கு மதிப்பளிக்காத தலைவரும் அவரின் அரசியல் கட்சியும் அகற்றப்பட வேண்டும். இரண்டாவது உலகப் போரின்போது மிகப் பிரசித்தி பெற்ற போர்க்கால பிரதமராக விளங்கினார் வின்ஸ்டன் சர்ச்சில். போர் முடிந்த பின்னர் நடந்த பிரிட்டீஷ் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் சர்ச்சிலின் கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஏன்? “வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களே, நீங்கள் ஒரு சிறந்த போர்க்கால பிரதமர். ஆனால், நாங்கள் இப்போது ஓர் அமைதிக்கால பிரதமரை விரும்புகிறோம்”, என்பது பிரிட்டீஷ் மக்களின் பதிலாக அமைந்தது.
இது முதிர்ச்சியடைந்த பிரிட்டீஷ் ஜனநாயக முறையின் வெளிப்பாடு. இது பிரிட்டீஷ் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறையாகும்.
மலேசியாவும் பிரிட்டீஷ் நாடாளுமன்ற முறையத்தான் பின்பற்றுகிறது. ஆனால், அதில் அர்த்தமற்ற, ஆணவத்தனமான முடிச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மலேசிய அமைச்சரவை உறுப்பினர்கள் ஏன் இராணுவத் தலைவர்கள்போல் சீருடை அணிந்துகொள்கின்றனர் என்று கேட்டதற்கு நாம் மன்னர் ஆட்சிமுறையைப் பின்பற்றுகிறோம். அதனால்தான் சீருடை என்றார் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான்!
பிரிட்டனிலும் மன்னர் ஆட்சிமுறைதான். ஆனால், அந்நாட்டு அமைச்சர்கள் இந்த கோமாளி உடைக்கு மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதில்லை. அந்நாட்டில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் “The Leader of Her Majesty’s Opposition in Parliament” என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அரசியார் நடுவிலும், பிரதமர் அரசியாரின் வலப்பக்கத்திலும், எதிர்க்கட்சி தலைவர் இடப்பக்கத்திலும் இருந்து நாடாளுமன்ற மேளவைக்குச் சென்று அந்த அவையின் கதவை அம்மூவரும் ஒன்றாகத் தட்டி கூட்டத் தொடரை தொடக்கி வைப்பது பிரிட்டீஷ் பாரம்பரியம். நாட்டின் விவகாரங்கள் மீதான அரசாங்க நடவடிக்கைகள் குறித்து எதிரணித் தலைவருக்கு முறையாக, முழுமையாக தெரியப்படுத்துவது பிரிட்டீஷ் பிரதமரின் கடமையாகும். இது அரசியல் நாகரீகத்தின் சிகரம்!
இங்கும், அன்வார் இப்ராகிம் “நாடாளுமன்றத்தில் மாட்சியை தங்கிய பேரரசரின் எதிரணித் தலைவர்” தான். ஆனால், அவருக்கு அளிக்கப்படும் மரியாதையைக் கண்டு கரப்பான் பூச்சிகூட ஓடாமல் நின்றுவிடும். ஒரே மாதிரியான நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பின்பற்றும் பிரிட்டீஷ் மக்களுக்கும் மலேசிய மக்களுக்கும் இடையில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?
இந்நாட்டில் சுதந்திரகால தொடக்கத்திலிருந்து மக்கள் அரசியல்வாதிகளிடம் சரணடைந்து விட்டனர். இன, சமய அடிப்படையிலான அரசியலைப் புகுத்தி, மலாய் இனத்தின் மேளாண்மை சித்தாந்ததை வலியுறுத்தி, நாட்டின் வளத்தைக் கொள்ளையிட்டு, ஊழலை பூதாகரமாக வளரவிட்டு விட்டனர்.
அனைத்து இன ஏழைகளுக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை என்று அறிவித்து விட்டு அதனை மலாய்க்கார்களுக்கு மட்டும் அமல்படுத்தி வந்த அம்னோ, மலாய் இன ஏழைகளையும் ஏமாற்றி விட்டது. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 54 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சந்தைப் பங்குகளில் ரிம52 மில்லியன் இப்போது அவர்களிடம் இல்லை என்று கூறுகிறார் நஜிப். எங்கே போயிற்று என்ற கேள்விக்கு அவர் இன்றுவரையில் பதில் கூறவில்லை.
அம்னோ ஆட்சியில் சீன, இந்திய மலேசியர்கள் உரிமைக்கு கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க வேலை, பொருளாதார வாய்ப்பு, கல்வி போன்ற எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அவற்றில் சீன, இந்திய மலேசியர்களுக்கு உரிய இடம் இல்லை. அம்னோ அரசாங்கத்திடம் இந்தியர்களுக்காக பிச்சை கேட்டு கேட்டு அலுத்துப்போன அம்னோவின் கீழ்மட்ட பங்காளியான மஇகாவின் முன்னாள் தலைவர் ச.சாமிவேலு இனிமேல் அரசாங்கத்திடம் எதுவும் கேட்கமாட்டே.ன். கடையை மூடப்போகிறேன் என்று ஒப்பாரி வைத்தார்.
பணக்கார மசீசவும் அம்னோவிடம் மண்டியிட்டு நின்றது. நிலைமை இவ்வாறு இருந்தும் மசீச மற்றும் மஇகா போன்ற கட்சிகள் அவற்றின் சுயநலன்களுக்காக அம்னோவின் அடிமைகளாக செயல்பட்டு வந்தன, செயல்பட்டு வருகின்றன.
இந்த அம்னோ அடிமைக் கூட்டணி ஆட்சி நிரந்தரமானது. அம்னோவின் மலாய் இனம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுக்கான போராட்டம் அதன் ஆட்சியை நிரந்தரமாக்கும் என்ற அதன் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கனவுக்கு மக்கள் வெடி வைத்தனர்.
மார்ச் 8, 2008 இல் அம்னோவின் ஒட்டுமொத்த ஆதிக்க ஆட்சி ஆட்டம் கண்டது. விழித்தெழுந்த மக்கள் எதிர்க்கட்சி அரசுகளை பல மாநிலங்களில் அமைத்தனர். 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கண்டும் கேட்டுமிராத மாற்றங்களை மக்கள் மாற்றரசுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கண்டனர்.
ஓர் இந்திய மாநில துணை முதலமைச்சர்! ஓர் இந்திய சட்டமன்ற தலைவர்!! சாலைப் பெயர்கள் தமிழில்!!! ஓர் இந்திய பெண் சட்டமன்ற செயலாளர்!!!! இதென்ன அடிமை காணும் கனவா? இல்லை, இல்லை. அம்னோவுக்கும் அதன் கூலிப்படை பங்காளிகளுக்கும் வாக்காளர்கள் கொடுத்த வாக்குச் சாட்டை அடியின் விளைவு இது.
ஐயோ! தமிழ்ப்பள்ளி, யாராவது தத்து எடுக்கமாட்டார்களா? அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுங்களேன் என்று அம்னோவின் கூலிப்படை பங்காளிக் கட்சி தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருக்கையில், எதிர்க்கட்சி ஆளும் சிலாங்கூர் மாநில அரசு ஒரு பிரமாண்டமான தமிய்ழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தது. பினாங்கிலும் தமிழ்ப்பள்ளிகளுக்காக பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
இது போன்ற பல்வேறு திட்டங்களை மாற்றரசுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகள் அம்னோவுக்கும் அதன் கூலிப்படை பங்காளி கட்சிகளுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. இதன் விளைவாக அம்னோ மாநில, மத்திய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அம்னோ கூலிப்படை பங்காளி கட்சிகளின் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு, அரிசி, சோறு, சாறு, கறி, துண்டு, சேலை, பரிசுக்கூடைகள் போன்ற பல பிச்சைகளுடன் மானியங்கள் என்ற பெயரில் எல்லாருக்கும் கோடி கோடியாக போடுகிறார்கள். இன்னும் பல சலுகைகள் ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடையை மூடப் போகிறேன் என்று ஒப்பாரி வைத்த ச. சாமிவேலு இப்போது சுங்கை சிப்புட்டில் கடை திறக்க தயார் என்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் எதிரணியினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்நாட்டில் இப்போது மக்களிடையே ஓர் எழுச்சி அலை வீசத் தொடங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மாற்றரசுக் கட்சிகள் வேண்டும். ஒரே கட்சி ஆட்சியில் பலனடைபவர்கள் கட்சி தலைவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் மட்டுமே. மக்களின் தேவைகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன என்பதை மாநில மாற்றரசுக் கட்சிகளின் கடந்த ஐந்த ஆண்டுகால ஆட்சி மூலம் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
மேலும், இந்த மாற்றரசுக் கட்சி ஆளும் மாநிலங்கள் மக்களின் வரிப்பணத்தை சிறப்பாக கையாண்டுள்ளன என்று மலேசிய ஆடிட்டர் ஜெனரல் சான்று வழங்கியுள்ளார்.
மக்கள் கவனிக்கத் தொடங்கி விட்டனர். ஒரு கட்சியின் ஆட்சியைக் கண்காணிக்க இன்னொரு கட்சி. தட்டிக் கேட்க தம்பி வேண்டும். அதற்கு இரு கட்சி ஆட்சி முறை வேண்டும். மக்கள் அந்த இரு கட்சி ஆட்சி முறைக்கு, ஏன் தேவைப்பட்டால் இன்னும் பல கட்சிகளின் கூட்டு ஆட்சி முறைக்கு, மாற வேண்டும். மாற்றம் என்ற ஒன்று மட்டுமே நிரந்தரமானது.
-ஜீவி. காத்தையா
என்னவோ உலகத்தில் நசிப்பும் அவர் கூட்டமும்தான் நாட்டை ஆளும் திறமை பெற்றவர்கள் போலவும் மற்றவர் அனைவரும் முட்டாள்கள் போலவும் மோசடி வார்தைகள் கூறி மக்களை ஏமாற்றி வருவது மிகவும் அருவருக்க தக்க அரசியலாகும். இந்த 3 ஆண்டு காலத்தில் 58 பில்லியன் மலேசியா வெள்ளியை தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள (பல கடுமையான கிரிமினல் குற்ற சாட்டுகள் உள்ளன) பல தவறான வழிகளில் பொறுப்பில்லாமல் செலவிட்டுள்ளார் நஜிப். இது தொடர்ந்தால் மலேசியா திவால் ஆவது நிச்சையம். பிஎன் 56 ஆண்டுகள், ஆண்டு ஆண்டது போதும்.. இந்த மக்கள் விரோத அரசை மாற்றுவோம். புதிய பாக்கத்தான் அரசின்மேல் நம்பிக்கை வைப்போம்!
என்னையா கொடுமை இது! யாருக்கு யார் எஜமானர்? யாருக்கு யார் நன்றி சொல்லவேண்டும்? நசிப்பும் பிஎன்னும் செய்த உதவிகளுக்கு நன்றிமறவாமல், அவர்கள் தொடர்ந்து கொள்ளையடிக்க, மக்கள் அவர்களுக்கு தொடர்ந்து ஓடுப்போட கடமை பட்டுள்ளனராம். இல்லையேல் நாட்டில் அமைதி இருக்காதாம். செலவளிப்பது என்ன அவர் குடும்ப பணமா? என்ன ஆணவம் இந்த பின் அரசியல் வாதிகளுக்கு. மக்களுக்காகதான் அரசியல் வாதிகள் என்பதை நமது ஓட்டின் மூலம் ஆட்சியை மாற்றி உணர்த்துவோம் !!!