இராமன் ஆள, பீமனாக மாற்றம் காண்போம்!

64d94bcf6c19560597d078070a1d64ebஇராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? சீதையை யார் கடத்திலாலென்னா? சீதையை யார் சீரழித்தாலென்ன? நமக்கு வேண்டியது எலும்புத் துண்டு!

இந்த எலும்புத் துண்டுக்காக கடந்த 57 ஆண்டுகாலமாக இந்நாட்டை ஆண்டு இந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களின் சீதையை கடத்திச் சென்று சீரழைத்து விட்ட பாரிசான் கூட்டணிக்கு சீதையை இழந்து நிற்கும் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும். அக்கூட்டணி மூன்றில்-இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார் காந்தியை முன்வைத்து இந்தியர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்துவதாக முனகும் மிகச் சமீப காலத்தில் பாரிசான் அரசால் பதிவு செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப் எனப்படும் ஓர் அமைப்பின் தலைவர் பி. வேதமூர்த்தி.

யார் ஆண்டால் என்ற மனப்போக்குடையவர்கள் பிரிட்டீசார் இந்நாட்டை ஆண்ட போது எவ்வாறான மனப்போக்கை கொண்டிருந்திருப்பார்கள்? பிரிட்டீசார் ஆண்டால் என்ன? நமக்கு வேண்டியது கோட்டும் சூட்டும், கும்பனியில் கோழி மேய்க்கும் வேலையும் இருந்தால் போதும் என்றுதான் இருந்திருப்பார்கள். அப்படித்தான் இருந்தார்கள்!

இப்பேர்ப்பட்ட மனப்பாங்குடைய, அடிமைத்தனம் படைத்தவர்கள் எல்லா இனங்களிலும் இருக்கின்றனர். நாட்டின் சுதந்திரத்திற்காகவும், மலாய்க்காரர்களின் உரிமைக்காகவும் போராடுவதாக கூறிக்கொண்ட அம்னோ “அப்பா, எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று பிரிட்டீசாரிடம் கேட்டுக்கொண்டது. அதன் தலைவர் ஓன் பின் ஜாபார் “Mr.Churchill, I invite you to preside over the consolidation of the Empire” என்று வேண்டுகோள்  விடுத்தார்.

ஓன் பின் ஜாப்பாரை போலவே வேதமூர்த்தியினரும் பிரிட்டீசாரால் இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இந்தியர்களுக்கு பிரிட்டீசார் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு எவ்விதப் பாதுகாப்பையும், உரிமையையும் ஏற்படுத்தித்தரவில்லை. ஆகவே, பிரிட்டீஷ் அரசு இங்கு வாழும் இந்தியர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று பிரிட்டீஸ் (அம்மா) அரசியாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

old-manஇந்நாட்டை சுரண்டிய வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு வேண்டுகோள் விடுத்த ஓன் பின் ஜாப்பாரை போலவே இந்நாட்டு இந்தியர்களை சுரண்டிய அம்னோவின் தலைவர் நஜிப் ரசாக்கிற்கு வேண்டுகோள் விடுத்து அவரின் தலைமையில் இயங்கும் அமைச்சில் ஒரு நாற்காலியும் கேட்டுள்ளார் வேதமூர்த்தி. இந்த நாற்காலியின் விலை என்ன? அன்று ஓன் பின் ஜாப்பாரும், துங்கு அப்துல் ரஹ்மானும் பிரிட்டீஸ் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். இன்று அம்னோவின், அம்னோ மலாய்க்காரர்களின் மேளாண்மைக்கு முன்னுரிமை வழங்க முன்வந்துள்ளார் வேதமூர்த்தி.

கடந்த 57 ஆண்டுகளாக அம்னோ மலாய்க்காரர்கள் நடத்திய இராவண ஆட்சியில் இந்தியர்களின் சீதைக்கு பாதுகாப்பில்லாமல் சீரழிக்கப்பட்டுவிட்டாள்.

சீதை என்ற உரிமையைப் பாதுகாத்து நீதி வழி நல்லாட்சி வழங்குவது இராமன் ஆட்சி. உரிமையைப் பறித்து, சீரழித்து அநீதி வழி நரக ஆட்சி நடத்துவது இராவணன் ஆட்சி. இவ்விரு ஆட்சி முறையில் எந்த ஆட்சி நான் கேட்கும் எலும்புத் துண்டை தருவதற்கு முன்வருகிறோ அந்த ஆட்சியை நான் ஆதரிக்கிறேன். மற்றவர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான அடிமைத்தனம்.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையில் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ண பரமாத்மா. புத்தர், ஏசுநாதர், முகமட், மார்க்ஸ், காந்தி, மாவ் போன்ற பெருந்தகைகளின் அறவழி மற்றும் ஆயுதவழி நடத்திய போராட்டங்கள் நீதியயை நிலைநிறுத்துவதில், நல்லாட்சி வழங்குவதில் பெரும் வெற்றி ஈட்டியுள்ளன. இருப்பினும், அக்கிரமவாதிகள் இன்னும் சீதையை சீரழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தீய சக்திகளுக்கு ஆதரவு அளிப்போரும் தொடர்ந்து பல உருவங்களில் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

சுரண்டப்படும் இந்நாட்டு இந்தியர்களைப் போல் துரியோதனர்கள் தருமர்களை சுரண்டினர். கிருஷ்ணா அவர்களை போரில் அழித்தார். நல்லவன் கர்ணன் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்ததால் அவனும் அழிக்கப்பட்டான். புத்தரும், ஏசுவும், முகமட்டும், மார்க்ஸ்சும், காந்தியும், மாவ்வும் யார் ஆண்டால் என்ன, எலும்புத் துண்டு போதும் என்ற போக்கை கொண்டிருக்கவில்லை. “Quit India” என்றார் காந்தி. சியாங்கைசேக் கூட்டத்தினரை அழித்தார் மாவ்.

உலகில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை ஆட்டங்காணச் செய்தது இரு சம்பவங்கள். அச்சம்பவங்களை உருவாக்கியது ஒரு நாடும், ஒரு தனி மனிதரும் என்று ஒரு பிரிட்டீஷ் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். 1905 ஆம் ஆண்டில் ஜப்பான் ரஷ்யாவை தோற்கடித்ததும், பிரிட்டீஷ் பேரரசுக்கு காந்தி கொடுத்த உதையும்தான் அவ்விரு சம்பவங்கள் என்று அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.

Waythamoorthyஇராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன, எனக்கு எலும்புத் துண்டு போதும் என்று காந்தி கூறியிருந்தால், பிரிட்டீஷ் பேரரசு அவருக்கு கோஹினூர் வைரத்தை கொடுத்திருக்கும்; இந்தியாவின் கவர்னர்-ஜெனரலாக நியமிக்கப்பட்டிருப்பார். இராமன் ஆட்சிதான் வேண்டும் என்றதற்காக காந்திக்கு கிடைத்தது 13 ஆண்டு சிறைவாசம்.

செல்வந்தரின் மகனே, உனக்கு ஏன் இந்தப் போராட்டங்கள். உனக்கு என்ன பதவி வேண்டும் என்று பிரிட்டீஷ் இந்தியாவின் வைஸ்ராய் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார். தமக்கு வேண்டியது சுதந்திரம் என்றதற்காக இராமனைப் போல் ஜவஹர்லால் நேருவுக்கு 14 ஆண்டு சிறைவாசம் கிடைத்தது. வங்காளத்து சிங்கம் சந்திரபோஸ் ஆயுதம் ஏந்தினார். நான் இறந்தால் இந்தியா விடுதலை பெறும். என்னை தூக்கிலிடு என்று கர்ஜித்தான் பகத் சிங். திருப்பூர் குமரன், செங்கோட்டை வாஞ்சிநாதன் போன்ற பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களுடைய உரிமைக்காகப் போராடி மாண்டனர். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற இந்திய இளைஞர்கள் சுதந்திரத்திற்காகப் போராடியதற்காக அந்தமான் தீவில் பிரிட்டீசாரின் சிறையில் தோலுரிக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டனர். அக்கொடுமைகளின் குறிப்புகள் அச்சிறையில் இன்றும் இருக்கின்றன. அவற்றை படிக்கும்போது எலும்புத் துண்டு எண்ணம் வராது. கொலை வெறி உச்ச கட்டத்தை அடையும்!

இராமனா? இராவணனா? எலும்புத் துண்டா? இராமன் ஆட்சிதான் வேண்டும் என்பதில் இமயத்தைப் போல் உறுதியாக இருந்து போராடி தமது வாழ்நாளில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்த மனித உரிமை தெய்வம் இன்றும் நம்முடன் இருக்கிறது. எலும்புத் துண்டை நாடியிருந்தால்,  அவர் செல்வந்தராக, பட்டம் பதவிகளுடன் சொகுசான வாழ்க்கை நடத்தி இருக்க முடியும். கொடுங்கோலர்களான தென் ஆப்ரிக்க வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி 27 ஆண்டுகள் சிறையில் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா.

நெல்சன் மண்டேலா இருக்கையில் நாம் திசை மாறலாமா? சீதையை விற்கலாமா?

அம்னோ மலாய்க்காரர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருக்க எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அம்னோ தலைவர்களுக்கு நேர்மை, நீதி என்பது ஒரு விளையாட்டு பொருள். அவர்கள் அனைவரும் நம்பிக்கை துரோகிகள். அனைத்து இனங்களுக்கும் போராடுவதகாக கூறிய ஓன் பின் ஜாபார் இந்நாட்டில் சீன மற்றும் இந்திய மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக தங்களுடைய இரத்த சகோதரர்களான இந்தோனேசியர்களை கொண்டு வர வேண்டும் என்றார். அதனை நாம் இன்று காண்கிறோம்.

துங்கு அப்துல் ரஹ்மான் சிரித்தே மற்ற இனத்தினரை ஏமாற்றியவர். மலாயா வானத்தின் கீழ் அனைவருக்கும் இடமுண்டு என்றார். அடுத்த நிமிடமே மலாயா மலாய்க்காரர்களுக்கு மட்டுமே என்றார்.

இனப்பாகுபாடற்ற பொருளாதாரக் கொள்கை என்று கூறிய அப்துல் ரசாக் அப்பொருளாதாரக் கொள்கை மலாய்க்காரகளுக்கு மட்டுமே, அதுவும் அம்னோ மலாய்க்காரர்களுக்கு மட்டுமே, என்றாக்கினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறிய மகாதீர் முகமட் இனவாதத்தை வளர்த்தார். விருந்து முடிந்ததும் விருந்தினர்கள் வீடு திரும்ப வேண்டும் என்றார். இந்தியர்களும் சீனர்களும் விருந்தாளிகள் (வந்தேறிகள்). அவர்கள் தங்களுடைய நாட்டிற்கே திரும்ப வேண்டும் என்பதாகும். கொடுத்த வாக்குறுதியை (சீனமொழி கல்வி விவகாரம்) உதறித்தள்ளுவதிலும், போட்ட கையொப்பத்தை துச்சமாகக்குவதிலும் வல்லவர் இந்த மகாதீர்.

தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு இந்த “செயற்கை” மலாய்க்காரான மகாதீர் அவரது அரசாங்கம் இட்ட கையொப்பத்தையே மீறியவராவார். மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சிங் பெங்குடன் செய்து கொண்ட ஹதாய் அமைதி ஒப்பந்தத்தின் சரத்துகளை மீறியவர் இந்த நம்பிக்கை துரோகி.

இந்த ஹதாய் அமைதி ஒப்பந்தத்தில் மலேசியா அரசாங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான போலீஸ் படையின் முன்னாள் ஐஜிபியான அப்துல் ரஹிம் நோர் இந்த ஒப்பந்தத்தின் கீழ் சின் பெங் நாட்டிற்குள் வந்து நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்படாதது ஒப்பந்தத்தை மீறியதாகும் என்று கூறினார். இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்றார்.

“Therefore, logically, both sides must respect (the agreement). To the best of my knowledge, Ching Peng’s side has observed every (one of the) terms and conditions of the peace treaty…As a professional, I believe that the government should keeps its end of the bargain”, என்று ரஹிம் நோர் நவம்பர் 30, 2009 இல் கருத்து தெரிவித்தார்.

chinpengசின் பெங்கிற்கே அல்வா கொடுத்தவர் இந்த அம்னோ தலைவர். உறுதிமொழிக்கும் கையொப்பத்திற்கும் அம்னோ தலைவர்கள் கொடுக்கும் மரியாதைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்தியர்களின் வாக்குகள் மிக அவசியம் என்பதை வலியுறுத்தி வந்த மகாதீர் இப்போது மலாய் இன உரிமை போராட்ட தீவிரவாதிகளான பெர்காசா அமைப்பின் இப்ராகிம் அலியும் சுல்கிப்லி நோர்டினும் அம்னோவுக்கு தேவை. அவர்கள் நமக்காக போராடுகிறார்கள் என்று கூறுகிறார்.

இந்நாட்டின் செல்வம் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தத்துவம் பேசிய அப்துல்லா பாடாவி, இந்தியர்களின் சொத்துடமை அதிகரிக்க உதவ வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் மேளவையில் கோரிக்கை விடுத்த மஇகா உறுப்பினருக்கு அளித்த பதிலில் “அது இந்திய சமுகத்தின் பொறுப்பு” என்றார்.

இன்றைய அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அவரது அப்பனையும் மிஞ்சிய நம்பிக்கை துரோகி. மலாய்க்காரர்களின் மேளாண்மையை வளர்ப்பதற்காக அவரது தலைமையின் கீழ் இனவாத வெறுப்பு பயிற்சி அளிக்கும் பிடிஎன் (BTN) துறையை நடத்தும் பிரதமர் இவர்.

தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை துடைத்தொழிக்கும் அம்னோவின் இறுதிக் கொள்கை (Ultimate objective) கைவிடப்படும் என்று உறுதியளிக்கத் தயாராக இல்லாத நஜிப், அவரது சகாவும் அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசினின் ஒரே மொழி, ஒரே பள்ளி” என்ற அறிவிப்பை தடுக்க இயலாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்போது அது அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இப்போது அவ்விருவரும் தமிழ்ப்பள்ளி இருக்கும், சீனப்பள்ளி இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், அவற்றின் வளர்ச்சி தேசிய ஒற்றுமையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்று சென்ற ஆண்டு நஜிப் வெளியிட்ட மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 (Malaysian Education Blueprint 2013-2025) அறிக்கையில் அழகாக அச்சடிக்கப்பட்டுள்ளது.

najibஅரசாங்கப் பணத்தில் கட்சியின் வெற்றிக்காக அரிசி, மாவு, சீனி, பால்டின், மீ போன்றவற்றை தூக்கி எறிந்து அவற்றை இந்தியர்கள் பொறுக்கி எடுக்கும் பிச்சைக்கார கலாச்சாரத்தை வளர்ப்பதில் நஜிப் அம்னோவின் முதல்தர தலைவராகியுள்ளார்.

ஒரே மலேசியாவின் ஒப்பற்ற நம்பிக்கை துரோகியான நஜிப் இந்தியர்களை எப்படி வேண்டுமானாலும் மேய்க்கலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டார். இந்து மதத்தை இழிவுப்படுத்திய ஒரு மலாய்க்காரரை, மலாய் இன வெறி அமைப்பின் துணைத் தலைவரை அம்னோவின் வேட்பாளராக நியமித்து அவரை இந்தியர்கள் ஆதரித்து, வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற அவரின் ஆணவத்தைக் காட்டியுள்ளார். தம்முடைய பாரிசான் கூட்டணியில் இருக்கும் எந்த இந்திய தலைவரும் தம்மை எதிர்க்க மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். மலாய் இனமும், இஸ்லாமும்தான் நஜிப்பின் மூச்சும் உயிரும். அவற்றை வளர்க்க இந்தியர்கள் அவருக்கும் அவரின் அம்னோ தலைவர்களுக்கும் வாக்களித்து ஆட்சியை அவர்கள் கையில் கொடுக்க வேண்டும். நஜிப் இவற்றை சாதிப்பதற்கு பாரிசான் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும். இது வேதமூர்த்தியின் வேண்டுகோள்.

இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன, சீதை எக்கேடுகெட்டால் என்ன, எனக்கு எலும்புத் துண்டு போதும் என்பது வேதமூர்த்தியின் பிராத்னையாக இருக்கலாம்.

துரியோதனின் சபையில் திரௌபதையின் துயிலை உறிந்த துதனின் தொடை எலும்பை உடைத்து அதனை சீப்பாக்கி, அந்த இரத்தைத் திரௌபதையின் தலையில் தேய்த்து சீவி விடுவேன் என்று சபதமிட்டு அதை நிறைவேற்றிக் காட்டினானே பீமன்,   அவனைப் போல் இந்தியர்களின் சீதையை பறித்து அவர்களின் சமயத்தை இழிவு படுத்திய அம்னோ மலாய்க்காரர்களை தோற்கடிப்போம் என்று நாம் சபதம் ஏற்க வேண்டும்.

-ஜீவி காத்தையா, மே 4, 2013.

TAGS: