பாலாவின் மனைவி : ஒரு மறைக்கப்பட்ட உண்மை…

அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும் ஆரம்பமானது. ஆனால், மரணம் அவர் சொல்ல வந்த தகவல்களைத் தற்காலிகமாகதான் நிறுத்தி வைத்தது. . இப்போது அவர் மனைவி மறைக்கப்பட்ட உண்மைகளைப் பேசத் தொடங்கியுள்ளார். இந்தப் பதிவு அவர் KINI TV க்கு 20 நிமிடத்திற்கு மேல் அளித்த நேர்காணலின் எழுத்துவடிவம். இனி அவர் குரலில்…

05நான் செல்””வி. பாலசுப்ரமணியத்தின் மனைவி. எனக்குத் தொடர்ந்து ஏற்படும் தொந்தரவுகளால் உண்மையைச் சொல்லகூடிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

3.7.2008. இரவு 8.30pm மணிக்கு நான் செய்தி பார்த்துக்கொண்டிருந்த போது அதில் என் கணவரின் முகம் ஒளிப்பரப்பானது. நான் அதிர்ச்சியடைந்தேன் . அவருக்கு அழைத்த போது அப்பொழுது பேச மறுத்துவிட்டார். அதன் பிறகு ஒரு சிவப்பு நிறக்கார் என் வீட்டின் முன் உலவு பார்ப்பதையும் அறிந்தேன். அதன் பிறகு அதிகாலை 2.30 மணிக்கு என் கணவர் ASP சுரேஷ் மற்றும் அவரின் நண்பர் கிறிஸ்தபருடன் வீட்டிற்கு வந்தார். சோர்வின் காரணமாக விசயத்தை என் கணவரால் விளக்க முடியாததால் ASP சுரேஷ் விசயத்தை விளக்கினார். உங்கள் கணவர் நஜீப்பிற்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள். ஆதலால் நீங்கள் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என கூறினார். ஆனால் இவை எல்லாம் தற்காலிகமானதுதான். நஜீப் பிரதமரானவுடன் நீங்கள் நாட்டுக்குள் வரலாம். இதற்கு பிரதிபலனாக ‘அவர்’ உங்களுக்கு 5 மில்லியனும் மாதந்தோறும் 20000 வெள்ளி கொடுப்பார் என்றும் கூறினார்.

உயிருக்கு ஆபத்து என்பதால் வெளிநாட்டிற்குச் செல்ல நாங்கள் சம்மதித்தோம். எங்களிடம் உள்ள அனைத்து தொடர்பு சாதனங்களும் பறிக்கப்பட்டன. மறுநாளே, எங்கள் 4 பேருக்கும் (நான், கணவர், 2 பிள்ளைகள்) வெளிநாடு செல்வதற்கான கடப்பிதழ்கள் 2 மணி நேரத்திற்குள் செய்து கொடுக்கப்பட்டபோது ஆச்சரியப்பட்டோம். டாமான்சாரவில் இருந்து சிங்கப்பூர் விமானநிலையத்திற்கு எங்களின் முதல் பயணம் ஆரம்பமானது. பயண நெடுகிலும் கூட இந்தத் திடீர் பயணத்திற்கான காரணத்தை என் கணவர் கூற மறுத்துவிட்டார். சிங்கப்பூரில்தான் நாங்கள் நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டதை என் கணவர் மூலம் அறிந்தேன்.

அதற்குப் பிறகுதான் எங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்தன. இரு நாடுகளுக்கிடையிலான எல்லையில் எவ்வித சோதனையுமில்லாமல் மிக எளிதாக நாங்கள் சிங்கப்பூர் விமான நிலையத்திற்குச் சென்றுவிட்டோம். அங்கு எங்களைச் சோதனை செய்த குடிநுழைவு அதிகாரி சிறு சந்தேகத்திற்குப் பின் யாருக்கோ அழைத்துப் பேசினார். உடனடியாக நாங்கள் விடுவிக்கப்பட்டு ஹாங்காங் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டோம். ஆனால் எங்கள் 4 பேரின் கடப்பிதழ்களும் விமானியின் பாதுகாப்பில் இருந்தன. இவை அனைத்தும் யாரோ ஒருவரின் கட்டளையின் கீழ் நடந்துகொண்டிருந்தது.

அதன் பின்னர், நாங்கள் ஹாங்காங்கிலிருந்து  நேப்பாலுக்கும், நேப்பலிலிருந்து டெல்லிக்கும், டெல்லியிலிருந்து மதுரைக்கும் என அலைகழிக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொரு ஊரிலும் தொலைபேசி மூலம் வெவ்வேறு தங்கு விடுதிகளுக்கு மாற கட்டளைகள் இடப்பட்டன. அவற்றிற்கான கட்டணங்கள் அனைத்தும் ASP சுரேஷின் நண்பர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் செலுத்தினார்கள். நாங்கள் நிரந்தரமாக அங்கேயே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த அவர்கள் எங்கள் கடப்பிதழ்களை ரத்து செய்ய முனைந்தனர். இதை அறிந்த என் கணவர் கோபம் அடைந்தார். அதன் பின்னர் நாங்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு வர கட்டளையிடப்பட்டோம். அப்போது ASP சுரேஷை தொடர்புக்கொண்ட போது கூடிய விரைவில் உங்களை GF எனும் நபர் வந்து சந்திப்பார் என்று கூறினார். ஆனால் எங்களைச் சந்தித்தது சுரேஷ் தான்.  அவர் எங்களின் கடப்பிதழை புதுப்பித்து தருவதாகக் கூறினார். பாலா தாமே சுயமாகக் கடப்பிதழை புதுப்பித்துக்கொள்ளப்போவதாகக் கூறியபோது அவர்களிடையே தகறாறு ஏற்பட்டது.

Bala,Najib,Nazir n Rosmahஇந்த சிக்கலில் இருந்து மீள நாங்கள் அவர்கள் அனுமதியின்றியே வேறு இடத்திற்குச் சென்றுவிட்டோம். ஆனால், நாங்கள் தொடர்ந்து தேடப்பட்டு வந்தது சிலர் மூலம் அவ்வப்போது தெரிய வந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு நண்பரின் மூலமாக சுரேஷ் எங்களைத் தொடர்புக் கொண்டார். பணத்தாசைக் காட்டினார். எங்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக 1 லட்சம் ரிங்கிட்டை அவர் என் வங்கியில் போட்டார். என் கணவர் எதற்கும் இசையவில்லை. இந்த நிலையில் தான் என் கணவர் மலேசியாவிற்கு வருவதென முடிவெடுத்தார். எங்கள் மீது அக்கறை இல்லையா என்று நான் வினவியபோது, இவ்விவகாரத்தில் சொந்த நலனைவிட மக்கள் நலனே முக்கியம் என கூறினார்.

நாங்கள் என்ன தவறு செய்தோம் ? குடும்பத்தோடு கொல்லப்படும் நிலைக்கு ஏன் வந்தோம் என்பதைப் பற்றி தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.. இது குறித்துபேசும் எனக்கும் நாளைக்குக் கூட கொலை மிரட்டல் வரலாம். மலேசியாவிற்கு வந்த பாலா மீண்டும் நடந்த உண்மைகள் குறித்து கூற தயாராக இருந்தார். இந்த சூழலில்தான் அவர் மரணம் நிகழ்ந்தது.

என் கணவர் இறந்த பிறகு ஒரு அழைப்பு வந்தது. மக்கள் கூட்டணி கட்சி எனக்கு எதுவும் உதவியதா என்று அந்த அழைப்பில்பேசிய ஒருவர் கேட்டார். எந்த கட்சியுடன் தொடர்பு இல்லாத பட்சத்தில் நான் இல்லை என்றேன். அந்த அழைப்பில் பேசியவர் என் கணவர் சேர்த்து வைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்தால், எனக்கு மாதம் தோறும் சம்பளமும் என் பிள்ளைகளுக்கு கல்வி வசதியும் செய்து தருவதாகக் கூறினார். எனது கேள்வி என்னவென்றால், எதற்காக இத்தரப்பினர் இச்சலுகைகளை எனக்கு தரவேண்டும்?

ஒவ்வொரு நாளும் எங்களுக்கு யாரவது உதவுவார்களா? என்று காத்திருக்கிறோம்.  குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஏங்குகின்றனர். ஒரு தனியார் பள்ளிகூடத்தில் இந்திய பாட திட்டத்தின் கீழ் பயின்ற என் பிள்ளைகளை என் ஒருவரின் வருமானத்தை வைத்துக்கொண்டு மேலும்  தொடந்து படிக்க வைக்க என்னால் இயலாது.

இந்த சிக்கலால், நாங்கள் நாடற்ற அகதிகளாக அலைய வேண்டியிருந்தது. என் பிள்ளைகள் விரும்பிய உணவுகளையும் வாழக்கையையும் கொடுக்க இயலாத நிலையில் இப்பொழுது நான் இருக்கிறேன். ஒரு வேளை, என் கணவர் இவ்விவகாரத்தில் 5 மில்லியன் தொகையை பெற்றிருந்தால் எங்களுக்கு விருப்பமான ஏகபோக சொகுசு வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்திருக்கலாம். என் கணவர் மீது சத்தியமாக கூறுகிறேன் நாங்கள் மக்களின் பணத்தை எவ்வேளையிலும் லஞ்சமாகப் பெற்று வாழ விரும்பவில்லை.

என்னுடைய கேள்வி, நாங்கள் நாட்டைவிட்டு செல்ல காரணம் என்ன? நாட்டை விட்டுச் செல்லும் அளவிற்கு நாங்கள் செய்த தவறு என்ன? இவ்விவகாரத்தில் என் கணாவர் செய்த சத்திய பிரமாணம் போலியானது என்றால் ஏன் கணவரை ஏன் நஜிப் நீதி மன்றத்தில் நிறுத்தவில்லை? இராணுவத்தில் உளவுத்துறையினர் அந்தச் சத்திய பிராமாணத்தை மீட்டுக்கொள்ள மிரட்டினர். அவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுக்க யாருக்கு சக்தி உண்டு என்பதை யோசித்துக்கொள்ளுங்கள். இராணுவத்திற்கு கட்டளையிட எளிய மனிதனால் முடியுமா? உண்மையை மறைக்க எங்களுக்கு 5 மில்லியன் கொடுக்குமளவிற்கு யாருக்கு சக்தி உள்ளது? ஒரு வேளை நான் அந்த பணத்தைப் பெற்றிருந்தால் மலேசியாவிற்குத் திரும்ப வந்து இந்த உண்மையை சொல்லிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கோ வெளிநாட்டில் சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். இறைவன் மீது ஆணையாக நாங்கள் எந்த பணத்தையும் பெறவில்லை.

என் கணவர் இதுநாள் வரை தனக்கு உடல்நலமில்லை என்று ஒருமுறை கூட என்னிடம் கூறியதில்லை. வெளிநாட்டில் இருக்கும்போது கூட அவர் திடகாத்திரமாகத்தான் இருந்தார். மாலைப்பொழுதில் பிள்ளைகளுடன் பூப்பந்து விளையாடும் அளவிற்கு ஆரோக்கியமானவர் அவர். இப்பொழுது அவர் மாரடைப்பால் இறந்தார் என்பதை நான் நம்பவில்லை. அவர் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. காலை 11.30 மணிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவரை நான் சுபாங் ஜெயா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மதியம் 1.30 மணிக்கு அவரின் மரணச் செய்தியைக் கேட்க நேரிட்டது, இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

இது இயற்கை மரணம் போல் இல்லை.

TAGS: