வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

anti-waythamurthy-protestகா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம்.

சகோதரர் பொ. வேதமூர்த்தி தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்களும் அவர் அம்னோ தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த போது அவருடனிருந்து ஆதரவு நல்கிய மஇகா-வும் இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்ப்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஆனால், காரணங்கள்தான் மாறுபட்டவை.

வேதமூர்த்தி அவரது குழுவும் தேசிய முன்னணியிடம் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்பதுதான் எனது ஆலோசனை. அதை அவர்கள் ஏற்கவில்லை. அந்த ஆலோசனை வழங்க அதிகம் யோசிக்க தேவையில்லை! பிரதமர் நஜிப் அவர்கள் நல்லவர், இந்தியர்களுக்கு அதிகமாகவே செய்துள்ளார் என்ற நிலைப்பாட்டை பலர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்தியர்களின் ஓட்டுக்காக அந்த  நல்லவர் கண்டிப்பாக ஹிண்ராப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார். அதை ஏற்க மறுப்பது அரசியல் சாணக்கியம் அல்ல.

மக்கள் கூட்டணி குடியுரிமை பிரச்சனை, கடனற்ற இலவச கல்வி, அதிகமான குறைந்த பட்ச சம்பளம், பெட்ரோல் விலை குறைப்பு போன்றவற்றைத்  தேர்தல் கொள்கையறிக்கையில் கொண்டிருந்தனர். இதை செயலாக்கம் செய்தால் நாடு திவாலாகும் என்றார் நமது நல்ல பிரதமர்.

najib_waythamurthyஇந்தியர்களின் வாக்குகளை விலை பேச ஹிண்ராப்ட் முன் வந்த போது, ஏற்கெனவே மஇகா கேட்டதை, கேட்பதை ஓர் உருமாற்று வகையில் இருப்பதை ஏற்பதில் என்ன பிரச்சனை என்ற வகையில் அதை அப்படியே தனக்கு சாதகமான அரசியலாக ஆக்கி கொண்டார் பிரதமர் நஜிப்.

இதன் வழி ஒரே கல்லின் இரண்டு மாங்காய் அடித்தார் நஜிப்.

முதலாவது இந்தியர்களின் உரிமை குரலாக ஒலித்த ஹிண்ராப்ட் தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கருவியாக உருமாற்றம் கண்டது. அடுத்தது சமத்துவம் அற்றது என்றும் இனவாதம் கொண்ட அரசாங்கம் என்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தைச் சாடி வந்த வேதமூர்த்தியின் ஹிண்ராப்பை  வீழ்த்தி காலடியில் பணிய வைத்தார்.

மீனுக்குத் தலையையும், பாம்பிற்கு வாலையையும் காட்டும் விலாங்கு மீன்போல் தன்னை ஒரு சாணக்கியவாதியாக காட்ட முற்பட்ட வேதமூர்த்தியின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்த போது ஏமாற்றம்தான் மிஞ்சியது.

மக்களைப் பொறுத்த மட்டில் வேதமூர்த்தியின் இந்த சாணக்கியத்தில் துரோகம்தான் நிறைந்துள்ளது. நடந்த தேர்தலில் மாற்றம் வழிதான் அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்க இயலும் என்று மக்கள் நம்பினார்கள். அதிலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு இரு கட்சி அரசியல் அமைந்தால் சிறுபான்மையினரின் வாக்குரிமையின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். அம்னோவின் ஆதிக்கம் குறைந்தால்தான் நமக்கு விமோசனம் என்ற நிலைப்பாடு அது. அதன்வழி  மட்டுமே சிறுபான்மை இனம் தனது பேரம் பேசும் வலிமையை அதிகமாக்க இயலும். கொள்கை மாற்றம் உருவாக வழிமுறைகள் உருவாகும். அம்னோவின் ஆதிக்கம் இருக்கும் வரையில் நாம் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் இருக்க வேண்டும்.

PTJ16_160512_PM_KABINETவேதமூர்த்திக்கும் தீவிரமான ஆதரவாளர்கள் உள்ளனர். அதில் திறமையானவர்களும் உள்ளனர். அவர்களின் ஆதங்கம் மக்கள் கூட்டணி அவர்களைப்  புறக்கணித்து விட்டதால் எடுத்த முடிவு என்கிறார்கள். அதனால்தான் கொள்கையை மாற்றினோம் என்றால் அதை எப்படி ஏற்பது. தேர்தலின் போது தினசரிகளில் அவர்கள் வெளியிட்ட விளம்பரங்கள் ‘நாங்கள் விலை போய்விட்டோம்’ என்பதைத்தான் பறைசாற்றின. உரிமையற்ற நிலையில் சலுகைகள் பெறத்தான் மஇகா இருக்கிறதே, அதை உணர்ந்து உரிமை போராட்ட களத்தில் இருந்து வழி நடத்தாமல் ஏன் இந்த குள்ள நரித்தனமான தேர்வு.

நாடளவில் நடந்து வரும் கருப்பு பேரணிகள் ஒன்றை மட்டும் ஆழமாக கூறுகிறது. மொத்த வாக்காளர்களின் 51 விழுக்காடு பெரும்பான்மை தேர்வு மக்கள் கூட்டணியாகும். தேசிய முன்னணி பெற்றது 47 விழுக்காடு மட்டுமே. அதனால் ஜனநாயக உரிமை மக்களிடம் உள்ளதை களவாடி அரசாங்கம் அமைத்துள்ளவர்கள் உணர வேண்டும்.

அதே வேளையில் மஇகா-வுக்கு போட்டியாக வேதமூர்த்தி துணையமைச்சராக உருவாக்கப்பட்டதை மஇகா தலைவலியாக கருதுகிறது.  இதில் பொது இயக்கங்கள் தங்களுக்கும் தலைவலி என்பது அர்த்தமற்றதாகும்.

பிரதமர் நஜிப் தனது அரசாங்கத்தை தொடர தனக்கு அடிபணியும் ஆட்களைதான் வைப்பார். அதுதான் அம்னோவின் இனவாத அரசியல். அதை எதிர்த்து ஆட்சி மாற்றம் கோரி போராடும் பொது இயக்கங்கள் அம்னோவின் நியமனங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

TAGS: