நஜிப்பின் அரசமைப்புச் சட்ட குளறுபடி!

comment2013, மே 6-இல் பிரதமராகப் பொறுப்பேற்றதும் நஜிப் அப்துல் ரசாக் முதல்வேலையாக அமைச்சரவையை அமைத்தார்.

பிரதமர் அமைச்சரவையை விருப்பம்போல் அமைத்துவிட முடியாது. அரசமைப்பைப் பின்பற்றித்தான் அமைச்சர்களை நியமனம் செய்ய வேண்டும்.   கூட்டரசு அரசமைப்புச் சட்ட பகுதி 43(2)(பி) அமைச்சர்கள் “நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவது ஒன்றின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்” என்கிறது.

வழக்கமாக, டேவான் ரக்யாட் (மக்களவை) டுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், பிரதமர் விரும்பினால் செனட்(மேலவை) உறுப்பினர்களையும் அமைச்சர்களாக நியமனம் செய்யலாம்.

ஆக, ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக முடியாது. எல்லா நாடாளுமன்ற மக்களாட்சி நாடுகளிலும் இந்த நடைமுறை உண்டு.

துணை அமைச்சர்களும், நாடாளுமன்றச் செயலாளர்களும்கூட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத்தான் இருத்தல் வேண்டும் என்கிறது அரசமைப்பின் பகுதி 43ஏ (1).  அரசியல் செயலாளர்களுக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை.

comment1எனவேதான் பால் லவ் மே 24-இல், தாம் இன்னும் செனட்டராக்கப்படவில்லை என்று சொன்னதைக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது. இருந்தும் அவர் மே 16-இல், பேரரசரின் முன்னிலையில் அமைச்சராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

“செனட்டராக நியமனம் செய்யப்பட்ட நான், என் பொறுப்புகளை முழு ஆற்றலுடன் நிறைவேற்றுவதாகவும் நாட்டுக்கு உண்மையான விசுவாசத்துடனும் பற்றுடனும் இருப்பேன் என்றும் அரசமைப்பை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் தற்காக்கவும் பாடுபடுவேன்  என்றும் உளப்பூர்வமாக உறுதி கூறுகிறேன்” என்றுதான் பால் லவ் உறுதிமொழி கூறியிருப்பார்.

அதே மே 16-இல், இன்னொரு அமைச்சரும் (அப்துல் வாஹிட் ஒமார்) மூன்று துணை அமைச்சர்களும்கூட பேரரசின் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள்.

இந்த நியமனங்கள் எல்லாமே அரசமைப்புச் சட்டப்படி செல்லாதவை என்பது வெள்ளிடைமலை.

மேலே குறிப்பிட்ட உறுதிமொழியைச் சொல்லி அவர்கள் பதவி  ஏற்றிருந்தால், அவர்கள் பொய் சொன்னதாகத்தான் பொருள்படும். ஏனென்றால், அமைச்சராகவோ, துணை அமைச்சராகவோ நியமிக்கப்படுவதற்குமுன் அந்த ஐவரில் ஒருவர்கூட செனட்டர் ஆக்கப்படவில்லை.

நியமனங்களுக்கு பின்தேதியிட முடியாது

comment2அரசமைப்புச் சட்டம், வரிசைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது : ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது செனட்டராக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும், அதன் பின்னரே அமைச்சராக முடியும்; இந்த வரிசைமுறையைத் திருப்பிப் போட முடியாது. ( ஒருவரை அமைச்சராக்கி விட்டு அதன்பின் அவரை செனட்டராக்குவோம் அல்லது தேர்ந்தெடுப்போம் என்பது நடவாது.)

ஆக,  இந்த அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் மே 16 தொடங்கி தத்தம் அமைச்சுகுரிய பணிகளை ஆற்றி வந்திருந்தால் அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்படும்.

அந்த நியமனங்களைப் பின்தேதியிட்டு அமல்படுத்துவதும் முடியாத செயல். எனவே, அவர்கள் முறைப்படி முதலில் செனட்டர்களாக்கப்பட்டு அதன்பின்னரே  பேரரசரின் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கூட்டரசு  அரசமைப்புச் சட்டம்  நாட்டின் உச்ச சட்டம். அது எல்லாச் சட்டங்களுக்கும் மேலானது. ஆனால்,  ஒரு சாதாரணமான, காலம்காலமாகக்  கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ள  நடைமுறை  மீறப்பட்டிருக்கிறது.  அரசாங்கமும் அதன் அதிகாரிகளும்  அதன்மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் போலியானது என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

மெர்டேகா தொடங்கி நூற்றுக்கணக்கான அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்  நியமிக்கப்பட்டு  வந்திருக்கிறார்கள். எனவே, அமைச்சர்களின் நியமனம் சட்டப்பூர்வமானதாகவும்  முறையானதாகவும் இருப்பதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை  அதிகாரிகள் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள் என்றுதான் எதிர்பார்ப்போம்.

சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுவலகத்திலும் பிரதமர்துறையிலும்  அமைச்சரவை செயலகத்திலும் உள்ள மூத்த அதிகாரிகள் இந்த விசயத்தில் பிரதமர் நஜிப்புக்கு சரியான ஆலோசனை சொல்லியிருந்தால் இந்தக் குளறுபடியைத் தவிர்த்திருக்கலாம்.

நம் அரசாங்கத்துக்கே மானக்கேட்டை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் பிழை நேர்ந்திருக்கிறது. இதைத் திருத்தி அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நேர்ந்துவிட்ட தவற்றுக்கு மலேசியர்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.

அது போக, நடந்துவிட்ட குளறுபடிக்குப் பொறுபேற்கவும் வேண்டும். அப்படிப் பொறுப்பேற்க, தனிப்பட்ட முறையிலோ கூட்டாகவோ, யாரேனும் முன்வருவார்களா?

———————————————————————————————————————————————

TOMMY THOMAS,  அரசமைப்புச் சட்டத்தில் தேர்ச்சிபெற்ற ஒரு வழக்குரைஞர்

TAGS: