பயப்பட வேண்டியவர்கள், பயமுறுத்த முயலக்கூடாது!

indian-malaysiansகா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம்.

சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு சட்ட மன்றங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றியது ஒரு புதிய சாதனையாகும். பிரதமர் நஜிப்பின் தலைமையில் பாரிசானின் களம் இறங்கியபோதும் துணிவாக போரடி மாற்றம் படைத்தார்கள் சிலாங்கூர் மக்கள். சுமார் 53 விழுக்காடு மலாய்காரர், 28 விழுக்காடு சீனர், 14 விழுக்காடு இந்தியர் மற்றும் இதர இனத்தினர் 5 விழுக்காடு ஆவர். மலேசியாவின் பொருளாதார உற்பத்தியில் கால் பகுதியாக வருடம் சுமார் ரிம 130,000 கோடியை ஈட்டி வருகிறது. மலேசியாவின் சிறந்ததாகவும் முக்கியமானதாகவும் இந்த மாநிலம் கருதப்படுகிறது.

அதிகப்படியான இந்தியர்கள் இங்கு வாழ்வதால் இதில் காணப்படும் மாற்றங்கள் மலேசிய இந்தியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். அதனால்தான் சிலங்கூர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் போது அதில் இந்தியர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டியதை அதில் உள்ள இந்தியத் தலைவர்களும் அங்கத்தினர்களும் உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் கூட்டணியில் உள்ள மலாய்காரர்கள் அவர்களது உரிமையை தற்காக்கத் தயங்கியது கிடையாது. அவர்கள் பாஸ் கட்சியில் இருந்தாலும் சரி, அம்னோவில் இருந்தாலும் சரி, இரு தரப்பினருமே அதிகபட்ச பலனுக்காக போராடுகிறார்கள். சீனர்களும் அப்படித்தான். டிஏபி கட்சியில் இந்தியர்கள் இருப்பினும் அதன் போரட்டம் சீனர்களைத்தான் முன்நிலைப் படுத்துகிறது. இதில் எஞ்சியிருப்பது பிகேஆர் கட்சி மட்டும்தான். சிலாங்கூரில் உள்ள இதன் அங்கத்தினர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கு அதிகமானோர் இந்தியர்கள் ஆவர். இருப்பினும் இதில் உள்ளவர்களூம் மலாய்காரர்களுக்குப் போரடினால், இந்தியர்களின் நிலையை தற்காப்பது யார்?

arumugam_suaram_newஇந்த கேள்வி எழும் போது, அதற்கான எளிமையான பதில், இந்த கட்சி இனங்கள் அடிப்படையில் அமைந்தது அல்ல, அனைவருக்கும் ஒரே நிலைப்பாடுதான் என்பதாகும். இது ஓர் இனப்பாகுபாடு அற்ற அரசியல் கட்சி இதில் அனைவரும் சமம் என்ற தத்துவம் சொல்லப்படும். ஓட்டு சேகரிப்பில் இதைப் பேசாத அரசியல்வாதியே கிடையாது.

ஆனால், சிலாங்கூர் மாநிலத்தின் முதல்வராக இந்தியரோ, சீனரோ வர இயலாது. தேர்தல் தொகுதிகளைப் பிரித்துக்கொடுக்கும் போது அது இன வாரியாக கொடுக்கப்படுகிறது. பிரச்சனைகளை கையாளும் விதமும் இன வாரியாகவே உள்ளது. அதனால், இனவாதம் ஒழிய வேண்டும் என நினைத்தாலும், அதனை செயலாக்கம் செய்ய முடிவதில்லை.

மொழி, பண்பாடு ஆகியவற்றால் மக்கள் இனவாரியாக இருப்பதால் அவர்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளும் அவையோடு ஒன்றி விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது அரசமைப்பு சட்டமாகும். அதில் உள்ள இனவாத சட்டம் கொள்கையளவில் எல்லா நிலைகளிலும் வியாபித்துள்ளதால் சீனர்களும் இந்தியர்களும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தங்களது சமூக பொருளாதார உரிமைகளை கோர அரசியல் வழி மாற்று வழிமுறைகளை தேடுகிறார்கள். அவையும் இன அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது.

அன்வார் தலைமையில் இயங்கும் பிகேஆர் கட்சி இனவாதமற்ற நிலையில் செயல்பட வேண்டும். இனவாத அற்ற முறையை யாரால் கொண்டுவர முடியும் என்பது முக்கியமானது. பிகேஆர் கட்சி வலுவாக இருக்க வேண்டுமானால் அதற்கு மலாய்காரர்கள் தேவை. இதில் உள்ள மலாய்காரர்கள் இனவாதமற்ற வகையில் செயல்பட முற்பட வேண்டும். அது போலவே இந்தியர்களும் சீனர்களும் முன்வர வேண்டும். ஆனால், தற்போது உள்ள நிலைப்பாடு தர்ம சங்கடமாக உள்ளது.

1 aa excoசிலாங்கூர் ஆட்சிகுழு உறுப்பினர் நியமனத்தில், பிகேஆர் கட்சி ஓர் இந்தியரை நியமனம் செய்வதில் இருந்து தவறி விட்டது. இதைப்பற்றி போராடுவதும் பேசுவதும் அந்த கட்சியில் உள்ள தலைவர்கள்தான் செய்ய வேண்டும். இனவாதமற்ற வகையில் அவர்கள் ஓர் இந்தியரை நியமனம் செய்திருந்தால் இன்று அது ஒரு வரலாற்று சம்பவமாக நிகழ்ந்திருக்கும். ஆனால், அது நிகழவில்லை என்பது வருந்தத்தக்கது.

இது இந்தியர்களின் உரிமை பிரச்சனையாகும். அந்த அடிப்படையிலே பார்க்க அதன் தலைவர்களும் அங்கத்தினர்களும் முன்வர வேண்டும். இதைப் பேச்சு வார்த்தைவழி தீர்க்க முறையிருந்தால் சிறப்பாக இருக்கும். இல்லையென்றால் மாற்று வழி போரட்டம்தான்.

இந்நிலைபாடு சரியல்ல என்று வாதிடும் நபர்களில் சிலர் உலகத்தமிழர் நிலைப்பாடு குறித்து மாநாடு நடத்தியதும், இந்தியர்களின் பிரதிநிதி என்று வேடம் போடுவதும் வேடிக்கையாக உள்ளது.

அரசாங்கம் என்பது மக்களால் தேர்வு செய்யப்படுவது. மக்களை கண்டு அரசாங்கம் பயப்பட வேண்டும், அது மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். அதனால் அரசாங்க நியமனங்கள் சார்பாக முறையிடுவதை செவிமடுங்கள்.

பயப்பட வேண்டியவர்கள், பயமுறுத்த முயலக்கூடாது. தேசிய முன்னணியின் பயமுறுத்தும் அரசியலாக இருந்த அது போன்ற நடைமுறை இன்று காலவதியாகிவிட்டது.

TAGS: