பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தையின் மதம் மாற்றல்; சிலாங்கூரில் எப்படி?

conversion casesஜீவி காத்தையா, ஜூன் 13, 2013.

தகப்பனுக்கு மட்டும் பிறந்த குழந்தையும் இல்லை. தாய்க்கு மட்டும் பிறந்த குழந்தையும் இல்லை. ஆனால், இந்நாட்டில் ஒரு குழந்தையை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்வதற்கு அக்குழந்தையின் ஒரு பெற்றோர் முடிவு செய்தால் போதும். சிலாங்கூர் மாநிலத்தில் அதுவும் தேவையில்லை.  இங்கு அது ஓட்டமேட்டிக்!

இந்த விவகாரம் இந்திய குடும்பங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து பல இந்திய தாய்மார்கள் நற்றாற்றில் விடப்பட்ட பிணங்களாக்கப்பட்டுள்ளனர். பேராக் மாநிலத்தில் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி இச்சிக்கலில் அகப்பட்டு இன்றுவரையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற பிர்ச்னைகளுக்கு ஒரு தீர்வாக குழந்தைகளின் இரகசிய மத மாற்றத்திற்கு தடை விதிக்க அரசாங்கம் ஏப்ரல் 2009 இல் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியர்களின் நம்பிக்கை நாயகனான பிரதமர் நஜிப் ரசாக்கின் அமைச்சரவை இம்முடிவை எடுத்தது. அந்நம்பிக்கை நாயகனின் முத்திரையான, சட்டத்துறைக்கு அன்று பொறுப்பு வகித்த அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் “தம்பதிகளுக்கிடையில் மத மாற்றம் குறித்த பிரச்னைகள் எழும்போது குழந்தகளை அவர்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய திருமணத்தின் போது பின்பற்றிய பொதுவான மதத்தின் அடிப்படையில் வளர்க்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்று கூறினார். (“The cabinet decided that when it comes to issues of conversion of the spouse…the religion in which the children should be brought up must be in accordance to the common religion at the time of marriage.”)

பிளவை விளைவிக்கும் இப்பிரச்னையை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் நஸ்ரி “சட்டத்தில் மாற்றம் செய்யப்படும். அப்போது இரு பெற்றோர்களின் ஒப்புதல் இன்றி குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்படுவது அனுமதிக்கப்படாது”, என்றார்.

இந்த அறிவிப்பு ஏப்ரல் 2009 இல் வெளியிடப்படது. இன்று ஜூன் 13, 2013. அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால், ஒரு பெற்றோருக்குத் தெரியாமல் இரகசியமாக இன்னோர் பெற்றோர் குழந்தையை மதம் செய்வது பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில், நெகிரி செம்பிலானில் இப்படி ஒரு சம்பவம் நடதுள்ளது. இவ்விவகாரம்  வெளிச்சத்திற்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இந்து சங்கத்தின் முன்னாள், இந்நாள் மற்றும் அடுத்தநாள் தலைவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.

மஇகா தலைவர்கள் வருத்தம் தெரிவிப்பார்கள். போராடுவோம் என்பார்கள். இன்னும் யார் யாரோ தோன்றுவார்கள். புரிந்துணர்வுகளில் கையொப்பமிடுவார்கள். பின்னர் ஏதோ ஒரு சட்டத்திர்கு ஆதரவாக கைதூக்குவார்கள். தாய்மார்கள் தொடர்ந்து நற்றாறில் மிதப்பார்கள்!

நெகிரி மாநிலத்தில் நடந்த குழந்தை மத மாற்றல் சம்பவத்தில் எழுந்த பிரச்னைக்கு பதில அளித்த சமய இலாகாவினர் அம்மாநில சட்டப்படி குழந்தையின் பெற்றோர்களில் ஒருவர் மதம் மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்தால் போதும் என்று கூறியுள்ளனர்.

அது நெகிரி செம்பிலான் சட்டம். சிலாங்கூர் மாநிலத்தில் அப்படி எதுவும் தேவை இல்லை என்பதைக் கொண்ட சட்டம் இருக்கிறது.

சிலாங்கூ சட்டமன்றம் 1989 ஆண்டில் “Administration of Islamic Law Enactment 1989” என்ற சட்டத்தை இயற்றியது.

அச்சட்டத்தின் செக்சன் 70 இன் கீழ் இஸ்லாத்திற்கு மதம் மாறிய கட்டத்தில் மதம் மாறியவருக்கு, ஆணோ பெண்னோ, Hukum Syara”படி வயதை அடையாத குழந்தை இருந்தால் அக்குழந்தையும் அதே நேரத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாற்றலாகிறது. (“70. If, at the moment of conversion to Islam, a muallaf whether male or female, has any natural child who has not attained the age of majority according to Hukum Syara’ (baligh), the child becomes converted to Islam at the same moment.”)

சிலாங்கூர் சட்டமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு மசீச மற்றும் மஇகா சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவை வஞ்சகமில்லாமல், ஒளிமறைவு இல்லாமல் வழங்கியிருந்தனர். இதற்கு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு வேளை புனித பாதயாத்திரை மேற்கொள்வார்களா? அதற்கும் ஆசிர்வாதம் பெற புத்ரா ஜெயாவிற்கு செல்வார்களா? பிறகு, சட்டத்தைப் பழுது பார்க்கலாம் என்பார்களா?