இளையராஜா என்னை விரட்டி அடித்தார்: இயக்குனர் மிஷ்கின்

cinema25613a1.”ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எந்த மாதிரி படம்?

த்ரில்லர் படம். ஆட்டுக் குட்டிக்குள் இருக்கும், ஒரு ஓநாயைப் பற்றிய கதை. இதில், ஓநாய் கேரக்டரில் நானும், ஆட்டுக் குட்டி வேடத்தில், “வழக்கு எண் ஸ்ரீயும் நடித்துள்ளோம். இப்படத்தில், கதாநாயகி கிடையாது. தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான படமாக இருக்கும்.

2.மீண்டும் இளையராஜாவுடன் இணைந்திருப்பது பற்றி?

நான் இயக்கி, நடித்த, “நந்தலாலா படத்துக்கு அவர் தான் இசையமைத்தார். அவர், இப்படத்துக்காக உருவாக்கிக் கொடுத்த சில பாடல்களை ஆடியோவில் வைத்து விட்டு, படத்தில் வைக்காமல் விட்டுவிட்டேன். இதனால், இந்த முறை நான் அவரிடம் சென்ற போது, “வெளியே போ என்று, கோபத்தை காட்டினார். நான், அந்தக் கதைக்கு பாடல்கள் தேவைப்படவில்லை என்பதால், எடுத்து விட்டேன் என்பதை விளக்கிய போது, புரிந்து கொண்டார்.

3.புதிய படத்தில் எத்தனை பாடல்கள் இடம் பெறுகிறது?

ஒரு பாடல் கூட கிடையாது. இந்தக் கதைக்கு பாடலை விட, பின்னணி இசையே தேவைப்படுகிறது. அதோடு, படத்தில், 90 சதவீதம் வசனமே கிடையாது. படம் முழுக்க, இளையராஜாவின் இசை தான் பேசப் போகிறது. இளையராஜா தான் என் கடவுள். இந்தப் படத்துக்கு, அவரால் மட்டுமே இசையமைக்க முடியும்.

4.இன்றைய ரசிகர்கள் குத்துப்பாட்டு பிரியர்களாக இருப்பது பற்றி?

“சித்திரம் பேசுதடி படத்தில் “வாளமீன் பாடல், “அஞ்சாதேயில் “கத்தாழை கண்ணாலே, “யுத்தம் செய் படத்தில், “கன்னித் தீவு பொண்ணா ஆகிய பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. இளைஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான் என்றாலும், இன்றைய ரசிகர்கள் குத்துப்பாட்டு தவிர, நல்ல விஷயங்களையே அதிகமாக ரசிக்கிறார்கள் என்பதே உண்மை.

5.திடீரென்று தயாரிப்பாளராக உருவெடுத்ததேன்?

எனக்கேற்ற தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்பதால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். இனி, நான் இயக்கும் அனைத்து படங்களையும், என் நிறுவனம் மூலமே தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன்.