தொடரும் நடிகைகளின் மர்ம சாவுகள் !

cinema03713நடிகைகளின் மர்ம சாவுகள் தொடர்கின்றன. இளம் வயதிலேயே வாழ்க்கையை அவர்கள் முடித்து கொள்வது ரசிகர்களையும் திரையுலகையும் சோகபடுத்துகிறது.

இந்தி நடிகை ஜியாகான் மரணத்தை எவராலும் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியில் தயாரான ‘கஜினி’ படத்தில் நயன்தாரா வேடத்தில் இவர் நடித்ததால் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார். ஜியாகானுக்கு 25 வயதே ஆகிறது. அமிதாப்பச்சனுடன் ‘நிஷப்த்’ படத்தில் நடித்து சிறந்த நடிகை விருது பெற்றார். அக்ஷய் குமாருடன் நடித்த ‘ஹவுஸ்புல்’ படமும் பெயர் வாங்கி கொடுத்தது.

முன்னணி நடிகை நிலைக்கு உயர்ந்த அவர் தூக்கில் பிணமாக தொங்கியது பட உலகை உலுக்கி போட்டுள்ளது. தற்கொலைதானா என உறுதிபடுத்த போலீஸ் விசாரணை நடக்கிறது.பணம், புகழ், அழகு, செல்லுமிடமெல்லாம் ரசிகர்களின் ஆரவார வரவேற்பு என இருக்கும் நடிகைகள் ஏன் செத்துப்போகும் முடிவை எடுக்கின்றனர் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

மனச்சிதைவால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு சாகத்துணிவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தமிழ் நடிகைகள் பலர் இளம் வயதில் தற்கொலை என்ற பெயரில் மர்மமாக இறந்துள்ளனர்.

திறமையான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த ஷோபா தனது 17 வயதில் இறந்து போனார். 1980-ல் ஷோபா மரணத்துக்கு முன் ‘பசி’ படத்தில் அவர் சிறப்பாக நடித்து இருந்ததாக தேசிய விருது கிடைத்தது. ‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி தங்கையாக ஷோபா நடித்த கேரக்டர் இன்றும் பேசப்படுகிறது.

அதன் பிறகு படாபட் ஜெயலட்சுமியும் 1980-ல் விஷம் குடித்து இறந்தார். இவர் கமலுடன் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் அறிமுகமானார். ரஜினியுடன் ‘ஆறில் இருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா என்று படாபட் ஜெயலட்சுமி பாடிய பாடல் பட்டிதொட்டி யெங்கும் அப்போது ஒலித்தது. காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.கவர்ச்சி நடிப்பால் 1980-களில் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் ஸ்மிதா 1996-ல் தூக்கில் தொங்கி இறந்தார்.

காதல் தோல்வியில் மதுவுக்கு அடிமையாகி மன அழுத்தத்தில் இறந்ததாக கூறப்பட்டது. ‘மூன்றாம் பிறை’ படத்தில் இவர் பாடிய பொன்மேனி உருகுதே பாடலும் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் பாடிய நேத்து ராத்திரி யம்மா பாடலும் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டின.

சிம்ரனின் தங்கையான மோனல் தனது 21-வது வயதில் தூக்கில் தொங்கி இறந்தார். இவர் விஜய்யின் ‘பத்ரி’ படத்தில் நடித்தவர். இவர் சாவுக்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. இதுவும் காதல் தோல்வி தான் என்கின்றனர்.

இதுபோல் திவ்யா பாரதி மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இந்தி நடிகை பர்வீன் பாபி 2005-ல் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வாரத்துக்கு பிறகு அழுகிய நிலையில் அவரது பிணம் மீட்கப்பட்டது.