அழகிகளுடன் டி.ராஜேந்தர் போட்ட அசத்தல் ஆட்டம்! மிரண்டு ஓடினாரா நடிகை முமைத்கான் ?

cinema09713தமிழ் சினிமாவின் ‘சகலகலாவல்லவன்’ டி.ராஜேந்தர் தற்போது சினிமாக்களில் நடிப்பதில்லை என்றாலும், அவ்வப்போது அவர் பற்றிய செய்திகள் மீடியாக்களில் பரபரப்பாக அடிபடும். அப்படி இருக்கையில் ‘ஆர்யா-சூர்யா’ படத்தில் நம்ம டி.ஆர்., அழகிகளுடன் (?) ஆட்ம் போட்டிருக்கிறார் என்றால், பரபரப்புக்கு பஞ்சமில்லை.

தவிர, ‘ஆர்யா-சூர்யா’, இராம நாராயணணின் 126-வது படம். 1980களில் இராம நாராயணன் ‘சிவப்பு மல்லி’ உட்பட சில நல்ல படங்களை எடுத்தவர். அதன்பின் வேறு ட்ராக்கில் சென்று ஆனை, பூனை என்று மிருகங்களுடன் கூட்டணி வைத்து 125 படங்கள்வரை முடித்துவிட்டார். இந்த லிஸ்ட்டில் ஒன்றிரண்டுதான் பழுதே தவிர மீதி எல்லாமே சூப்பர் ஹிட் ரகங்கள்.

அந்தந்த சீசனுக்கு தக்க விதத்தில் ஏதாவது செய்து படத்தை ஓட வைத்து விடுவார். பவர் ஸ்டார் சீனிவாசன் பெயர் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பவரை போட்டு இராம நாராயணன் தயாரித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ செம வசூல். பவர் இப்போது ஜெயில் சாதம் தின்று கொண்டிருக்கிறார் என்பது வேறு விஷயம்.

எங்கு தட்டினால் எங்கு துட்டு விழும் என்பதை மிக நுட்பமாக அறிந்தவர் என்ற பெருமையை இன்டஸ்ட்ரியில் பல காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் இராம.நாராயணன், ஆர்யா-சூர்யா படத்தில் ஒரு பாடலுக்கு டி.ராஜேந்தரை ஆட வைத்ததும் அதே கால்குலேஷன் காரணமாகதான். (ஐயோ.. அதற்காக டி.ஆர். ஜெயிலுக்கு போவார் என்று அர்த்தமல்ல.. ஒரு சென்சேஷனை கிளப்பி விடுவதில் இராம.நாராயணன் புலி.. அவ்வளவுதான்)

cinema09713aஆர்யா-சூர்யா படத்தில் ஒரு பாடலுக்கு செம குத்து போட்டிருக்கிறார் டி.ஆர். என்ற செய்தி வெளியானதுடன், கூடவே இவருக்கு ஜோடியாக ஆடிய மும்பை நடிகை முமைத்கான் முதல் நாள் ஷுட்டிங்கில் டி.ஆரின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மும்பைக்கே பறந்து விட்டார் என மீடியாக்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து, நடிகை முமைத்கானையே மும்பைக்கு ஓட வைக்குள் அளவில் “அப்படி என்னதான் ஆட்டம் போட்டிருக்கிறார் டி.ஆர்.?” என்ற ஆவல் பலருக்கு ஏற்பட்டு விட்டது. பின்னர் விசாரித்தபோது, மறுநாள் ஷுட்டிங்குக்கு முமைத்கான் வரவில்லை என்பது உண்மைதான்.

ஆனால், அதன்பின் வந்து டி.ஆருடன் ஆடிவிட்டுத்தான் போனார் என்கிறார்கள் யூனிட்டில். எப்படியோ, இராம.நாராயணன் எதிர்பார்த்த சென்சேஷன் ஏற்பட்டு விட்டது.

ஆர்யா-சூர்யா பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தபோது, மைக்கைப் பிடித்த டி.ஆர்., “ரக்கர ரக்கர ரக்கர ரங்கு ரக்கர… ரக்கர ரக்கர ரக்கர ரங்கு ரக்கர…” என்று வாயாலயே மியூசிக் கொடுத்துவிட்டு முமைத்கானுடன் அவர் ஆடிய அந்த பாடல் உருவான விதத்தை அவர் வர்ணிக்க வர்ணிக்க, வாயில் ஈ புகுந்தால் கூட தெரியாமல் உட்கார்ந்திருந்தது கூட்டம்.

அதுவும் மேடையிலிருந்த கங்கை அமரன் இவரது வாயசைப்புக்கு ஏற்ப ஆடவே ஆரம்பித்துவிட்டார்.
இப்படிப்பட்ட ‘சரித்திரப் பிரசித்தி’ பெற்ற ஆட்டத்தை படம் வருவதற்கு முன் நீங்கள் சாம்பிள் பார்க்க வேண்டாமா?