இந்து பெருமக்கள் இனியும் ஏமாறக்கூடாது, மோகன் ஷான்

batu caves

ஜிவி. காத்தையா, செம்பருத்தி.காம்   

மத மாற்ற பிரச்னைகளால் இந்நாட்டு இந்துக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இந்துக்களில் பலர் இப்பிரச்னை குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்று இன்று காலை பத்துமலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “மத மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு” நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் கூறினார்.

“அண்மைய காலமாக இந்து மக்களிடையே புற்றுநோய் போல் பரவிக் கொண்டிருப்பது மத மாற்ற பிரச்னைதான். பலர் இப்பிரச்னை குறித்து விழிப்புடன் உள்ளனர். ஆனால், பலர் இப்பிரச்னை குறித்து அலட்சியமாகத்தான் உள்ளனர்”, என்று மோகன் ஷான் கூறினார்.

மலேசிய இந்து சங்கம் இன்னும் 16 இயக்கங்களுடன் இணைந்து இந்த “மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது, பத்துமலை திருத்தலத்தில் இன்று காலை மணி 9.30 லிருந்து பிற்பகல் மணி 2.00 வரையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பெருமக்கள் கலந்து கொண்டனர்.

காலை மணி 8.00 லிருந்து மாநாட்டு மண்டபத்திற்கு வரத் தொடங்கிய இந்து மக்கள் Hindu sangam-logoஇவ்விவகாரத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக காணப்பட்டனர். அவர்கள் காரசாரமாகப் பேசிக் கொண்டனர். “இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்”, “நாம் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவர்களின் வலையில் மாட்டிக் கொண்டு பாழாகப் போகிறோம்”, “நம்ம அரசியல் தலைவர்களை நம்பி இனியும் இருந்தால், நாம் நாசமாகி விடுவோம்”, “என்ன தைரியம் இருந்தால் இந்துக்களை அவமானப்படுத்திய மனிதனை தேர்தலில் நிறுத்தி நம்மை ஓட்டுப் போடச் சொல்வார்கள்”, “இதுதான் நம்புங்கள் என்று சொல்லி நம்முடைய கழுத்தை அறுத்து, அடையாளத்தை அழிப்பதற்கானத் திட்டம்”, “இனிமேலும் சும்மா இருக்கக்கூடாது” என்று அவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை காலை உணவை அருந்திக் கொண்டே பேசிக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அதிகமான பெண்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பிணத்தைப் பறித்துக்கொண்டு போகும் அநாகரீகம்

மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 3(1) இல் இஸ்லாம் அதிகாரப்பூர்வமான சமயம் என்றும், இதர சமயங்கள் பின்பற்றப்படுவதற்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய மோகன் ஷான், அந்த உரிமைகள் “உண்மையாகவே பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறி”, என்றார்.

“திரைமறைவில் நமது உரிமைகள் நெருக்கப்பட்டு வருகின்றன. நமது சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் தற்போதைய உண்மை”, என்று அழுத்தமாகக் கூறினார்.

இந்நாட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மதம் மாறுவதைத் தடுக்க எந்த ஒரு சட்டமும் இல்லை. “ஆனால், மற்ற மதங்களைவிட இஸ்லாம் மதத்திற்கு மாறும்பொழுதுதான் ஏகப்பட்ட பிரச்னைகள் தலைதூக்குகின்றன” என்று கூறிய அவர், பிரச்னைகளைப் பட்டியலிட்டார்.

அந்தப் பிரச்னைகளில் மனநோயாளிகளைம், புத்தி சுவாதீனம் இல்லாதவர்ளையும் மதம் மாற்றி விடுவதும் அடங்கும். “இதைவிட பெரிய அநாகரீகமான விஷயம் என்னவென்றால், இறந்தவர்களைக் கூட மதம் மாறி விட்டார்கள் என்று பிரேதத்தைக் கூட பறித்துக்கொண்டு போவதுதான்!”, என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் இடித்துரைத்தார்.

கண்துடைப்பு நாடகமா?

குழந்தைகளின் மதமாற்ற பிரச்னை பற்றி குறிப்பிட்ட மோகன் ஷான், அது “மனசாட்சி இல்லாமல் நடந்து வருவது hindu sangam-presidentவருத்தப்படும் வகையில் உள்ளது”, என்றார்.

இது சம்பந்தமான சட்ட திருத்தத்தைக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்ட சட்ட திருத்ததையும் மக்களிடமிருந்து எழுந்த ஆட்சேபத்தின் காரணமாக அச்சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மீட்டுக்கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டிய அவர், இது “ஒரு கண் துடைப்பு நாடகமே!”, என்றார்.

இக்கருத்திற்குக் “காரணம் மாநிலங்களுக்கேற்ப சட்டங்கள் மாறுகின்றன. சிலாங்கூர், திரெங்கானு, பினாங்கு, நெகிரி செம்பிலான் – தாயும் தந்தையும். ஜோகூர், சபா, கூட்டரசு பிரதேசம் – தாய் அல்லது தந்தை இப்படி ஏற்கனவே மதமாற்றச் சட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபட்டிருக்கும் போது தற்போது இந்த மசோதாவை மீட்டுக்கொள்வதாக அரசாங்கம் சொன்னது வேடிக்கையாக உள்ளது”, என்று அவர் விளக்கமளித்தார்.

எல்லாவற்றுக்கும் வயது வரம்பு உண்டு. ஏன் மதமாற்றத்திற்கு இல்லை என்று அவர் வினவினார்.

“ஒரு பிள்ளை 18 வயது ஆனபின்பு தான் சுயமான முடிவை எடுக்க முடியும் என்பதுதான் சட்டம். ஆனால் ஷரியா நீதிமன்றச் சட்டம் அதற்கு மாறாக இருப்பதில் நியாயமே இல்லை எனலாம். ஓட்டுப் போடுவதற்கு 21 வயது வேண்டும். கல்யாணம் என்றால் 18 வயது வேண்டும். ஆனால் மத மாற்றத்திற்கு மட்டும் எதுவுமே தேவையில்லையாம்.

வாயளவில் உத்ரவாதம்

தனியார் உயர்நிலை கல்விக்கூடங்களில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாகரீகங்கள் ஒரு கட்டாயப் பாடமாக்கப்படும் என்ற கல்வி அமைச்சையின் அறிவிப்பு குறித்து பேசிய மோகன் ஷான் இவர்களின் வாக்குறுதியை கேள்விக்குறியாக்கினார்.

“புதிதாக இஸ்லாமிய, ஆசிய நாகரீகம் எனும் பாடத்திட்டத்தை தனியார் பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்போகிறார்களாம். இதனால் முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று வாயிலேயே உத்தரவாதம் தருகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

“காரணம், வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், 1987லில் கொண்டு வந்த ஷரியா சட்டத்தால், முஸ்லீம் அல்லாதவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று இதேபோல்தான் அன்றைய பிரதமர் வாயிலேயே உத்தரவாதம் கொடுத்தார்.

“இன்று, நாம் மாநாடு கூட்டும் அளவிற்கு பிரச்சனை பெரியதாக உள்ளது.  அல்வீன் தான், விவியன் லீ என்ற இருவரையும் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று சட்ட புத்தகங்களை எல்லாம் புரட்டி பார்த்து, தண்டனை கொடுத்துவிட்டார்கள். அது தவறுதான். ஆகவே தண்டனை கொடுத்தது சரிதான். ஆனால் நம் மதத்தை பழித்தவனுக்கு?

“நம் மதத்தை இழிவாக பேசிய அந்த சூல்கிப்ளி நோர்டினுக்கு மட்டும் ஷாஆலாமில் போட்டியிட சீட்! அந்த ஜாகிர் நாயக் என்பவனுக்கு தமிழ் வானொலி பிரிவிலேயே சந்திப்பு நேரமாம்! அதுவும் அவன் சொல்லும் கதைகளை எந்த அளவுக்கு உண்மை என்று கூட விசாரிக்காமல். இதெல்லாம் அநியாயமாக இல்லையா? இவர்களை தண்டிக்க சட்டத்தில் இடமில்லையா?”, என்று மோகன் கேள்விகளைக் கொட்டினார்.

“சமயம் என்பது மனிதனை நல்வழிக்கு செல்ல நெறிபடுத்தும் ஒரு சாதனமாகும். அதுவே சுயநலத்தோடு பலரை வேதனை படுத்தும் ஒரு ஆயுதமாக மாற கூடாது”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்விழிப்புணர்வு மாநாட்டில் பலர் உரையாற்றினர். அவர்களில் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் அ. வைத்திலிங்கம், பிரதமர்துறை துணை அமைச்ச்சர் பி.வேதமூர்த்தி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் ஆகியோரும் அடங்குவர்.

இம்மாநாடு 12 தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியது. மாநாட்டு மண்டபத்தில் இருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இத்தீர்மானங்களுக்குத் தங்களுடைய ஆதரவை அளித்தனர். (தீர்மானங்கள் தனியாக தரப்பட்டுள்ளன.)

அரசியல் தலைவர்களை என்ன செய்வது?

இந்த 12 தீர்மானங்களும் விரைவில் அனைத்து நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்களுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் முறையாக அனுப்பி வைக்கப்படும் என்று மாநாடு முடிவுற்ற பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மோகன் ஷான் கூறினார்.

சமயப் பிரச்னைகளைத் தூண்டிவிடும் மதவாதிகளோடு பழக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் வேளையில், அந்த najibமதவாதிகளுக்கு அரசியலில் இடம் கொடுத்து, பதவியிலும் அமர்த்தும் நஜிப் ரசாக் போன்ற அரசியல் தலைவர்களை என்ன செய்வது என்று செம்பருத்தி.கோம் முன்வைத்த கேள்விக்கு பதில் அளிப்பதில் தயக்கம் காணப்பட்டது.

“அது சரியல்ல”, என்று மோகன் ஷான் பதில் அளித்தார்.

அது சரியல்ல. அதனால்தான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது என்று வலியுறுத்தியும், “அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலர் சமய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கத்தின் நடவடிக்கை 12 தீர்மானங்களை நிறைவேற்றியதோடும் அவற்றை அனுப்பி வைப்பதோடும் முடிந்து விடக் கூடாது. இவற்றை அமல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்ற பொதுவான ஒரு கருத்தைத் தெரிவித்தனர்.