வன்முறை குறைய வழி இளையராஜா சொல்கிறார்

Ilayaraja Latest Stillsஇசையை கட்டாயப் பாடமாக்கினால் இளைஞர்கள் மனதில் வன்முறை உணர்வு குறையும், என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

மதுரை தியாகராஜர் கல்லூரியின் இசை ஆய்வு மையத்தை நேற்று அவர் தொடங்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழ் இசை மிகவும் பாரம்பரிய கலாச்சாரம் மிகுந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவான இந்த இசை, பல சோதனைகளைத் தாண்டி வந்துள்ளது. நமது பாரம்பரிய இசையைக் காக்க, அதை பள்ளிப் பாடங்களில் ஒரு அங்கமாக அரசு சேர்க்க வேண்டும்.

சமீபத்தில் வெளியான தமிழ் இசை அகராதியைப் பார்த்தபோது பல ஆயிரம் இசை வார்த்தைகளை அதில் படிக்க நேர்ந்தது. அவற்றில் பல எனக்குத் தெரியாதது. ஆனால் நமது இசை எந்த அளவு பெரிய வரலாற்றைக் கொண்டது என்பதைப் புரிய வைத்தது.

நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதைக் குறைக்கிற வல்லமை இசைக்குத்தான் உள்ளது. இசையின் நினைப்பு வந்தாலே மனதிலிருக்கிற வன்முறை உணர்வு தானாகக் குறைந்துவிடும். அதனால் இசையை மாணவப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்,” என்றார்.

பின்னர் தான் எழுதி இசைத்துப் பாடிய இதயம் ஒரு கோயில் பாடலை மாணவர் மத்தியில் பாட, அனைவரும் நெஞ்சுருகக் கேட்டனர்.