மலேசியாவில் ஊழல்

பூபாலன் முருகேசன். செம்பருத்தி.காம் 

 c4ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் ‘போர்’ தொடுத்திருப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருப்பதினூடே, மலேசியாவில் ஊழலின் அளவு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

GTP எனப்படும் அரசாங்க உருமாற்றத் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும்,  தேசிய அடைவு நிலைக்கான முக்கிய த்துறைகளின் கீழுள்ள ஊழல் எதிர்ப்பு முதன்மை செயல் திறன் குறியீடு 97% அடையப்பட்டிருப்பதாக 2012 அரசாங்க உருமாற்றத்திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் வேளையில், உலக ஊழல் அளவீடு  GCB  இதற்கு மாறான தகவலை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம், மேற்கூறப்பட்ட உண்மைகள் அரசாங்க உருமாற்றத் திட்ட நிபுணர்களின் கண்ணோட்டமாகவே தோன்றுகிறது.

c2ஓராண்டுக்கு முன்னரைவிட தற்போது அதிகமான மலேசியர்கள் கையூட்டு வழங்குகின்றனர் என GCB-யின் 2013 அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு முன்னிருந்த 1.2 %-லிருந்து  3 %-க்கு உயர்ந்துள்ளது.  Transparency International (TI)-யினால் வெளியிடப்பட்டுள்ள,  செப்டெம்பர் 2012 – மார்ச் 2013 காலக் கட்டத்தை உட்படுத்திய அறிக்கை மூன்று முக்கிய கருத்துகளை முன்வைத்துள்ளது.

முதலாவது: 

ஊழலுக்கு எதிராகப் போராடும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மலேசியர்களிடையே, கடந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 31%-லிருந்து  49%-க்கு நலிந்துள்ளது.   ஊழல் புள்ளிவிவரங்கள் மீதும், ஊழலுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கை மீதும் மலேசியர்கள் ஐயம் கொண்டுள்ளனர் என்பதை இதுகாட்டுகிறது.

இரண்டாவதாக:

ஊழல் அளவுகோலில் மிகத் தீவிரம் எனக் குறிப்பிடப்படும் 5-இல் , காவல் துறையின் ஊழல் 4-ஆகவும், அரசியல் ஊழல் 3.8-ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட புள்ளி விவரம், இந்நாட்டில் ஊழல் அளவுகுறித்த தேசிய அடைவுநிலைக்கான முக்கியத்துறைகளின் குறியீட்டுக்கும் பொதுமக்களின் கருத்துக்கும் தொடர்பற்ற தன்மையை நிரூபிக்கிறது.

 மூன்றாவது:

கையூட்டு வழங்குவோர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மலேசியா மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.  3000 நிறுவன நிர்வாகிகள் பங்குகொண்ட இந்த ஆய்வில்  50 விழுக்காட்டினர் , கையூட்டு காரணமாக ஒப்பந்தத்தை இழந்ததாக ஒப்புக் கொண்டனர்.

2013  GCB அறிக்கை வெளியிடப்பட்ட பின்,  மக்கள் தலைவர்கள் என கூறிக் கொள்ளும் சிலதலைவர்கள் , ஊழல் மலேசியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பரவலாக நிகழ்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது மட்டுமின்றி, பொதுமக்களின் கருத்துக்கும் உண்மை நிலவரத்துக்கும் மாறான சொந்த புள்ளிவிவரங்களை பெருமையுடன் வெளியிடுகின்றனர்.

மலேசியாவின் ஊழல் நிலை குறித்து நாம் கவலைப்படாமலிருந்து விட முடியுமா?  மலேசியா மீதான TI குறியீடு தொடர்ந்து வீழ்ச்சியை பதிவு செய்யுமேயானால்,  நமது பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்கும் அயல்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கண்டிப்பாக நாம் இழக்க வேண்டி வரும். இது, வணிக போட்டித் தன்மையை நாம் நம் அண்டை நாடுகளிடம் விட்டுக் கொடுக்கும் சூழலை ஏற்படுத்தி; அரசாங்கத்தின் பொருளாதார உருமாற்றத் திட்டம் (ETP) தோல்வியை தழுவக்கூடிய நிலை ஏற்படும்.

co1தேசிய அடைவு நிலைக்கான முக்கியத் துறைகளின் கீழுள்ள ஊழல் எதிர்ப்பு முதன்மை செயல்திறன் குறியீடு  97% அடையப்பட்டிருப்பதாக கூறும் அரசாங்கம் அதனை தீவிரமாகக் கருதி, அது அளவிடப்படும் முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.  அரசாங்க உருமாற்றத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து , ஊழலுக்கெதிராக தகவலளிப்போர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நிறுவன உயர்நெறி உறுதி ஆகியவற்றை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்பதையும் நாம் மறுக்கவியலாது.

cc3அதிகாரத் தரப்பின் நடவடிக்கைகள் ஏட்டிலுள்ள அளவுக்கு செயலில் இல்லை என்பதை TI குறியீடு பிரதிபலிக்கிறது. 2012 முடிய, 154 நிறுவனங்கள் நிறுவன உயர்நெறி உறுதியில் கையெழுத்திட்டிருந்தாலும், அவற்றில் எத்தனை நிறுனங்கள், தங்கள் வணிக நலனுக்காக கையூட்டு வழங்காமல் அதனை 100% அமல்படுத்துகின்றன என்பது கேள்வியே?

ஊழலுக்கு எதிரான போர் மேலிருந்து கீழாக செயல் படுத்தப்பட வேண்டும்.  ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிரான மிருதுவான நடவடிக்கை, மற்றவருக்கு தவறான செய்தியை அனுப்பிவிடுவதுடன் மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் அதிகாரமற்றுள்ளதென பொதுமக்கள் எண்ணுவதற்கு வாய்ப்பளித்து; முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் நலிவடையச் செய்யும்.

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையும் முயற்சியும், அதில் நாம் மிகத் தீவிரமாவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் உள்ளோம் எனவும் தேசிய நலனுக்கு மட்டுமே முதன்மையளித்து எவருக்கும் சார்பாக இல்லாமல் செயல்படுவோம் என எல்லாத் தரப்புக்கும் தெளிவான சமிக்ஞையை அனுப்ப வேண்டும்.