நடிகர் விஜயகுமாரின் மனைவியும், எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையுமான மஞ்சுளா(வயது 60) மரணம் அடைந்தார். சென்னை, ஆலப்பாக்கத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த மஞ்சுளா, கடந்த 18ம் தேதி பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. நடக்க முடியாமல், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அடிபட்ட இடத்தில் ரத்தம் உறைந்து போய் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜூலை 23ம் தேதி) காலை 11.45 மணியளவில் இறந்தார். காலையில் தனது கணவர் விஜயகுமாரிடம், தான் தைரியமான பொண்ணு என்றும், விரைவில் குணமாகி திரும்பிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
1953-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி பிறந்தவர் நடிகை மஞ்சுளா. 1969ம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார்.
பின்னர் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை உள்ளிட்ட பல படங்களிலும், சிவாஜியுடன் டாக்டர் சிவா, அன்பே ஆருயிரே உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி தவிர ரஜினி, கமல், ஆகியோரது படங்களிலும், தெலுங்கில் சோமன் பாபு, அக்கினி நாகேஸ்வரராவ் உள்ளிட்டவர்களின் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உன்னிடம் மயங்கினேன் படத்தில் நடிகர் விஜயகுமார் உடன் நடித்தபோது, அவருடன் காதல் வயப்பட்டார். விஜயகுமார் ஏற்கனவே திருமணமானவர் என்றபோதும் அவரையே திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களும் சினிமாவில் இருக்கின்றனர்.
மஞ்சுளாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், பிரபு, ஆதி, ஸ்ரீகாந்த், செந்தில், ஒய்.ஜி.மகேந்திரன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், ஒளிப்பதிவாளர் பிரியன், நடிகைகள் லதா, லட்சுமி, சங்கவி, சுஹாசினி, மீனா, இயக்குனர் கஸ்தூரி ராஜா, ஐஸ்வர்யா தனுஷ், சரத்குமார், ராதிகா, ராதாரவி, சாந்தனு, பூர்ணிமா பாக்யராஜ், பி.வாசு உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். தொடர்ந்து திரையுலகினர் ஏராளமானபேர் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
மஞ்சுளாவின் இறுதிசடங்கு ஜூலை 24ம் தேதி போரூரில் உள்ள மின் மயானத்தில் மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.
விதி முடிஞ்சா போக வேண்டியதுதானே, என்ன செய்வது…!
அவருடைய ஆன்மா சாந்தியடைய அனைவரும் வேண்டுவோம்…
இருந்தாலும் மு. க. முத்து அவரை மன்னிப்பாரா, குடியை கொடுத்து
முத்துவின் குடியை கெடுத்தவராயிற்றே! எப்படியோ ‘சாந்தி நிலையம்’ வழி வந்தவர் ஆன்மா சாந்தியடையட்டும்…
தேன் கனிகள் இரு புறமும் தாங்கி வரும் பூங்கொடியோ, நிலவு ஒரு பெண்ணாகி…அருமையான பாட்டு இது, ஆனால் இந்தப் பாடலில் நிறைய ஆபாச உள்ளர்த்தம் உள்ளது தெரியுமா?
தேன் கனிகள் இரு புறமும் தாங்கி வரும் பூங்கொடியோ…அந்தப் பாட்டை நானும் நல்லா ஆழ்ந்துக் கேட்டேன்! ரொம்ப ஆபாசமாத்தான் கவிஞன் எழுதியுள்ளார்…. அந்தக் காலத்துக் கவிஞர்களும் சும்மா இல்ல கில்லாடிகள் தான் பா….!