“தலைவா’ திரைப்பட பிரச்னை: முதல்வர் உதவ விஜய் கோரிக்கை

vijay_jaya_001“தலைவா’ திரைப்பட பிரச்னையில் தலையிட்டு அப்படம் வெளிவர உதவ வேண்டும் என முதல்வருக்கு நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய “தலைவா’, பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைபட்டது. இதையடுத்து அந்தப் படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

ஆந்திரம், கேரளம் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டப்படி 9-ஆம் தேதி படம் வெளியானதால், தமிழகத்தில் “தலைவா’ படத்தின் திருட்டு சி.டி.க்கள் வெளிவந்துள்ளன. இதனால் படக் குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திட்டமிட்டப்படி தமிழகத்தில் படம் வெளியாகாமல் இருப்பதால், திருட்டு சி.டி.க்களின் வருகை அதிகரித்துள்ளது.

சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்கள் தயாரித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். திருட்டு சி.டி.க்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். என்.எல்.சி., காவிரி உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் தமிழக முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

எல்லோருக்கும் நல்லது செய்யும் முதல்வர் “தலைவா’ பட பிரச்னையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகம் முழுவதும் “தலைவா’ படம் வெளிவர ஆவன செய்வார்கள். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த செய்திக் குறிப்பில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.