தலைவா திரைப்படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியுள்ளனர்

thalaiva‘தலைவா’ திரைப்படத்தின் படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.

தலைவா படத்தில் நடித்த விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ஆகஸ்ட் 16 அல்லது ஆகஸ்ட் 17 தேதிகளில் அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அனுமதி கோரி இன்று மனு கொடுத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தலைவா திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்னையில் சில திரை அரங்கங்களுக்கு கிடைத்த சில மர்ம மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்கள் காரணமாக திரையரங்க உரிமையாளர்கள் திரைப்படத்தை வெளியிட மறுத்து விட்டனர்.

இதனால் இத்திரைப்படம் தமிழ்நாடு தவிர்ந்த பிற மாநிலங்களிலும் வௌிநாடுகளிலும் வெளியாயின.

இதையடுத்து அரசாங்க ஒத்துழைப்பும் பாதுகாப்பும் கோரி முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் எடுத்த முயற்சி தோல்வியிலே முடிந்தன.

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தலைவா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதாக தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் கூறினார்.

இந்த நிலையில், இந்த வாரம்கூட படம் வெளியாக விட்டால் தான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாக நேரிடும் என்றும், இதனால் தமிழக முதல்வர் மனமிறங்கி தலைவா படம் வெளியிட நடவடிக்கை எடுத்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார். -BBC