பேராசிரியரும், நடிகருமான பெரியார்தாசன் மரணம்

periyar thasanகல்லூரி பேராசிரியரும், பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவருமான பெரியார்தாசன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.30க்கு அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தற்போது அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரியார்தாசனின் கண்களையும், உடலையும் தானமாக பதிவு செய்து இருந்தார். இதனால், அவரது கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது உடலும் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.

மதிமுக கட்சியின் நிர்வாகியாக இருந்த இவர், சென்னை பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கருத்தம்மா, காதலர் தினம் உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர். ஏராளமான பட்டிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும் பேசி பகுத்தறிவு சிந்தனைகளை ஏற்படுத்தியுள்ளவர்.

இவருக்கு வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.