கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது இந்தக் கேளிக்கை வரி விலக்கு விவகாரம். தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து 2006 நவம்பரில் அப்போதைய முதல்வர் தமிழினத் தலைவர் கருணாநிதி அறிவித்தார்
தமிழை வளர்க்க இப்படியொரு வழியை கண்டறிந்த கருணாநிதியை எப்படி மெச்சினாலும் தகும்! தாய்மொழிப் பற்று ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. அதற்கும் நம் திரைப்படத் துறையினர் விலை பேசி ஆதாயம் பெறுகிறார்கள் என்றால் இதைவிடக் கேவலம் எதுவும் இல்லை.
இந்தக் கேளிக்கை வரியை கேலிக் கூத்தாக்கியதில் கருணாநிதியின் பங்கு அபரிவிதமானது. குறிப்பாக, 1987 வரை கேளிக்கை வரி 55 சதவீதமாக இருந்தது. 1989-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அதை 45 சதவீதமாகக் குறைத்தார். அவரையடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கேளிக்கை வரியை 30 சதவீதமாகக் குறைத்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் இதை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு 15 சதவீதமாகவும் இதர பகுதிகளுக்கு 10 சதவீதமாகவும் குறைத்தார் கருணாநிதி.
அதோடு மட்டும் விட்டாரா? தமிழுக்கு சேவை செய்கிறோம் எனத் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரியிலிருந்து விலக்கு என அறிவிக்க, கேளிக்கை வரி என்பது சூனியமாகிப் போனது. இப்படித்தான் தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு பாதிக்கு மேல் ஆங்கில வசனங்களும் காட்சிக்குக் காட்சி விரசமும் கொண்ட தமிழ்த் திரைப்படங்களுக்கும் கருணாநிதி அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துக் கொண்டிருந்தது.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்ட படங்கள் எப்படி எல்லாம் தமிழ்ப் பெயர்களாகின என்பதைச் சொன்னால், சிறுபிள்ளை கூட கைகொட்டிச் சிரிக்கும். திரைப்படங்கள் மூலம் பெறப்படும் கேளிக்கை வரியை அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் 55 சதவீதமாக இருந்த கேளிக்கை வரி காலப்போக்கில் ஒன்றுமே இல்லாமல் செய்ததால் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும்?
இந்த அறிவிப்புக்கு முன் தமிழக அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாக 2003 – 04-ம் நிதியாண்டில் ரூ. 75.07 கோடி கிடைத்தது. இதில் திரைப்படங்கள் மூலமான வருவாய் மட்டும் ரூ. 67.71 கோடி. ஆனால், அறிவிப்புக்குப் பின் இந்த வருவாய் 2006 – 07-ல் ரூ. 24.9 கோடியாகவும் 2007 – 08-ல் ரூ. 16.35 கோடியாகவும் குறைந்தது.
மொத்தத்தில் இந்த அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. கேளிக்கை வரி விதிப்பை அமல்படுத்தாமல் இந்தளவு தொகையை தமிழ்மொழி வளர்ச்சிக்கென்று பயன்படுத்தியிருந்தால் உண்மையிலேயே மொழி வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கும்.
கேளிக்கை வரி விலக்கால் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மக்கள் பணத்தில் அரசு அனுமதியுடன் கொள்ளை லாபம் ஈட்டினர். இதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று வேட்டியை மடித்துக் கட்டிய தமிழ்த் திரைப்பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத் தொகையை உயர்த்திக் கொண்டார்கள்.
அன்றைய காலங்களில் கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன், வீடு, கருத்தம்மா, பாரதி போன்ற படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இதை யாரும் குறை சொல்லவே முடியுமா? அப்போதெல்லாம் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் படங்களுக்கு மக்களிடமும் வழக்கமான நுழைவுக் கட்டணத்தை விட குறைவான கட்டணமே வசூலிக்கப்பட்டது, நினைவு கூறத்தக்கது.
எனக்கு நினைவு தெரிந்து இயக்குநர் பாலுமகேந்திராவின் வீடு படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டதால், அந்தப் படத்திற்கான முதல் வகுப்பு நுழைவுச் சீட்டு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஆனால் இப்போதைய கேளிக்கை வரி விலக்கால் மக்களின் நலத்திட்டம் பாதிக்கப்படுவதுடன் ரசிகர்களின் சட்டைப் பையில் திரைத் துறையினர் கையை விட்டுக் ஜேப்படி அடிக்கும் அவலம்தான் அரங்கேறுகிறது.
தமிழ்ப் பெயரை சூட்டுவதற்காக வழங்கப்பட்ட கருணாநிதியின் இந்தக் கேளிக்கை வரி விலக்கு திட்டத்தால் தமிழ் மொழி அசர வேகத்தில் வளர்ந்து விடவில்லை. மாறாக, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் படங்களைத் தயாரித்தும், வினியோகித்தும் கோடிக் கோடியாக சம்பாதித்தனர் என்பதை நாடறியும். அத்துடன் விட்டாரா கருணாநிதி, முதல் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகள் விருப்பம் போல் கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உத்தரவு போட்டார்.
இந்த முறை ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஜெயலலிதா கேளிக்கை வரியை 30 விழுக்காடாக உயர்த்தினார். தமிழ்ப் பெயர் வைத்தால் மட்டும் போதாது தமிழ்க் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதற்கான அளவு கோலை யார் வைத்திருக்கிறார்கள்? இதனால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களின் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கும் பிறருக்கு வரி விலக்கில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்ட கொடுமை தொடர்ந்தது.
மக்கள் நலனை தூர எறிந்த இந்தத் திராவிட ஆட்சியாளர்களால் கேளிக்கை வரி விலக்குப் பெறும் படங்கள் கூடுதல் விலைக்கு திரையரங்குகளுக்கு விற்கப்படுகின்றன. இப்படியான நிலையில் தான் எப்படியாவது கேளிக்கை வரி விலக்குப் பெற்று விடலாம் என்கிற நப்பாசையில் விஜய் நடித்த ‘தலைவா’ படம் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
ஆனால் படத்தைப் பார்த்த குழுவினர் விரசமான உரையாடல்களும், வன்முறைக் காட்சிகளும் அதிகமாக உள்ளதாக சொன்னதோடு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடியாது என்று அறிவித்தனர். அந்த அறிவிப்புக்குப் பின்னால், காழ்ப்புணர்ச்சி உள்ளிட்ட அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கேளிக்கை வரி விலக்கு இல்லை என்கிற இந்த அறிவிப்பால் ஏற்கெனவே அதிக விலை கொடுத்து ‘தலைவா’ படத்தை வாங்கிய திரையரங்கு உரிமையாளர்கள் ஆடிப் போனார்கள். கேளிக்கை வரி செலுத்தினால் லாபத்தில் துண்டு விழும் என்று துடித்துப் போனார்கள். அதன் விளைவாக படத்தின் விலையை குறைத்துக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்கள். படத் தயாரிப்பாளர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவேதான் வினியோகிஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் படத்தைத் திரையிட முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால்தான் குறிப்பிட்ட நாளில் தலைவா திரைப்படம் வெளியாகவில்லை.
இதற்கிடையே எப்படியாவது முதல்வரை சந்தித்துப் பேசி அவரது பரிந்துரையின் பேரில் கேளிக்கை வரி விலக்கைப் பெற்று விடலாம் என்று நடிகர் விஜய் மற்றும் தலைவா பட இயக்குநர் விஜய் முயற்சி செய்து பார்த்தார்கள். வேலை நடக்கவில்லை. இந்த உண்மையை மறைத்து இந்தப் படத்தை திரையிட விடாமல் அரசே சதி செய்வதாக வதந்தி பரப்பப்பட்டது. அனைத்துத் திரையரங்குகளுக்கும் வந்த அனாமதேய மிரட்டல் கடிதத்தை ஏதோ தலைவா படத்துக்கு எதிராக வந்ததாக செய்தி பரப்பப்பட்டது.
இங்குள்ள பெரும்பாலான ஊடகங்களும் ‘தலைவா’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து மேற்கண்ட உண்மையான செய்தியை வெளியிடாமல், மறைத்துவிட்டன என்பதுதான் இதில் உள்ள இன்னொரு வேதனை.
இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல், எங்கோ ஒரு ரசிகர் இந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை என்பதால் மனமுடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தமிழனுக்கு நேர்ந்த நிலையை நினைத்தால் தலையில்தான் அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது! இன்றைக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. எனவே தமிழ்நாட்டு கருத்துரிமை கந்தசாமிகள் இந்த நாளை கொண்டாடலாம். கேட்கவே கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது!