வன்முறை நாடகம்!

– முனைவர் ஆறு. நாகப்பன், ஆகஸ்ட் 30, 2013. 

aru nagappanஇந்திய இளைஞர்கள் நடத்தும் வன்செயல்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் பின்னால் முக்கிய அரசியல் புள்ளிகள் இருப்பதாக உள்துறை அமைச்சர் கூறுகிறார். (மக்கள் ஓசை 29.8.2013, முதல் பக்கம்) இதைத்தான் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன சொன்னாலும் அதைக் காது கொடுத்துக் கேட்க அமைச்சர்களுக்கு நேரம் இல்லை. கேட்டாலும் பொருட்படுத்துவதில்லை.

மலேசியாவில் கொள்ளைகள், கொலைகள் பெருகிவிட்டன என்பதை அமைச்சர் கைரி ஜமாலுடின் வீட்டிலேயே திருடர்கள் நுழைந்த பிறகுதான் காவல் துறை ஒப்புக் கொண்டது. வன்செயல்களில் இந்தியர் அல்லாத மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என்றாலும் இந்த வேலைகளில் இந்தியர்களின் விழுக்காடு மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே இந்திய அமைச்சர்களும் சமூகத் தலைவர்களும் மேடை ஏறியதும் பேசுவதற்குத் தயாராக வைத்திருக்கும் தலைப்பு இதுதான். இவர்களுக்கு வேறு எதுவும் பேசத் தெரியாத நிலையில் வன்செயல் இளைஞர்கள்தாம் கை கொடுத்து உதவி வருகிறார்கள். சமூகத்தின்பால் அளவு கடந்த அக்கறை உள்ளவர்கள் போல் பத்திரிகைக்காரர்கள் படம் பிடிக்கும் வரை இதைப் பற்றிப் பேசிவிட்டுப் போவார்கள்.

இப்போது இன்னும் வசதியாகப் போய்விட்டது. கையை வெட்டினான், காலை வெட்டினான் என்ற செய்திகள் வளர்ச்சி அடைந்து சுட்டு வீழ்த்தினான் என்று சூடு பறக்கச் செய்திகள் வருகின்றன. வன்முறைகளின் வெளிப்பாடுகளைத்தான் நாம் வேடிக்கை பார்க்கிறோம். இவற்றின் நதி மூலம் எங்கே, எப்படி என்று ஆழமாக யாரும் பார்ப்பதில்லை. சமூகப் பார்வையாளர் பலருக்கு எல்லாம் தெரிகிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை.

வன்முறையின் வேர்

தோட்டப் புறங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள் மறுகுடியேற்ற வாய்ப்புகள் இல்லாமல் நகர்ப்புறங்களின் காலி இடங்களில் குடிசைகள் கட்டிக் கொண்டு குடியேறினர். தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுகுடியேற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தொழிலாளர் சட்டம். மனித வள அமைச்சு கண்ணை மூடிக் கொண்டது. தோட்டப்புறத் தமிழர் குடிசைப்புறத் தமிழராக மாறினர். தோட்டத்திலாவது  வேலை, ஏழாம் தேதிக்குள் சம்பளம், கோயில், பள்ளிக் கூடம், கள்ளுக்கடை, விளையாட்டுத் திடல் என்று சில சமூக வசதிகள் இருந்தன. இப்படி எதுவும் இல்லாத குடிசைப்புறத்தில் எல்லாவற்றையும் தேடிக் கொள்கிற போராட்டமே இவர்கள் வாழ்க்கையாக இருந்தது.

தோட்டங்களிலிருந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டு அந்த இடங்கள் நகர மயப்படுத்தப்பட்ட போது கிராமப் புறங்களிலிருந்து மலாய்க்காரர்கள் நகர்புறங்களில் குடியேற்றப்பட்டனர். நகர்ப்புறங்களில் உருவான வேலை வாய்ப்புகளும் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளும் மலாய்க்காரர்கள் வசமாகின. கல்வி, வணிகம், பொருளாதாரம் போன்றவற்றில் மலாய்க்காரர்கள் விரைந்த வளர்ச்சி அடைந்தபோது அதே விரைவில் தமிழர் கல்வி, வணிகம், பொருளாதாரத்தில் கீழ்நிலை நோக்கி வீழ்ச்சி அடைந்தனர்.

நாடாளும் அம்னோவுக்கு இது தெரியும். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்ட ம.இ.கா.வுக்கும் இது தெரியும். சுதந்திரத்தின் பயனை, நாட்டு வளத்தை சலுகைச் சமுதாயத்திற்கு மட்டும் பகிர்ந்தளிக்கும் தனது நிலைப்பாட்டில் அம்னோ அசையாமல் இருக்கிறது. தேர்தலில் வாக்களிக்கும் மற்ற சமூகத்தினரைச் சரிகட்டும் பொறுப்பை ம.இ.கா. போன்ற கூட்டுக் கட்சிகள் ஏற்றுக் கொண்டு அதற்கான அன்பளிப்புகளைப் பெற்றுத் தங்கள் குடும்பங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டனர். இதுவும் போதாதென்று இந்தக் குடிசைத் தமிழரின் சில்லறைகளையும் இந்தியர் மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் இவர்கள் கொள்ளையடித்தனர்.

கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம், பொருளாதாரம் ஆகியவற்றில் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட இனப்பாகுபாடு நகர்ப்புறக் குடிசைத் தமிழர்களின் நிலையை வெகுவாகப் பாதித்தது. இது பதின்ம வயது இளையர்களின் மனத்தில் கடுமையான விரக்தியை ஏற்படுத்தியது. எதையாவது செய்து வாழ வேண்டிய நிலைக்கு இவர்கள் திட்டமிட்டுத் தள்ளப்பட்டனர்.

வாழ வேண்டிய காட்டாயத்தால் மட்டுமன்றி மற்றவர்கள் வளமாக வாழ்வதைக் கண்டு தாங்களும் அப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட இளைஞர்களை உள்துறை அமைச்சர் கூறிய அரசியல் பெரும் புள்ளிகள் வளைத்துப் பிடித்தனர். கொள்ளை, போதைப்பொருள் விற்பனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு இவர்கள் கூலி பெறும் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டனர்.

பி.எம்.டபள்யு போன்ற உயர்தரக் கார்களைத் திருடும் இந்த இளைஞர்களில் பெரும்பாலோர் மூன்றாம் படிவத் தேர்வில் கூடத் தேர்ச்சி பெறாதவர்கள். இந்த வகை கார்களை இவர்கள் பயன்படுத்தவும் முடியாது. திருடிச் சென்று விற்கவும் முடியாது.  அப்படியானால் இந்த உயர்தரக் கொள்ளையை இவர்கள் யாருக்காகச் செய்கிறார்கள்?

இதே பாணியில்தான் போதைப் பொருள் விற்பனையும். தாம் குடியிருக்கிற இடத்தில் போதைப் பொருள் விற்பவர் யார் என்ற விவரம் ஒவ்வொரு சராசரி மலேசியனுக்கும் தெரிந்திருக்கிறது. அந்த வட்டாரத்திலேயே காவல் அதிகாரிகள் அடிக்கடிச் சுற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுக்கு முதலாளிகளாகக் குண்டர் குழுத் தலைவர்கள். இவர்களுக்குக் காவலாக அரசியல் பெரும் புள்ளிகள். இல்லாவிட்டால் காவல் துறையின் கண்ணுக்கு முன்னாலேயே இந்தத் தொழில் ‘தீர்க்காயுசாக’ வாழ்ந்து கொண்டிருப்பது எப்படி?

இந்தத் தொழிலில் உள்ள போட்டியால் குட்டித் தலைவர்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லுகின்றனர். சுட்டுத் தள்ளுகின்றனர். ஆபத்தான குட்டித் தலைவர்களை முதலாளிகளே காட்டிக் கொடுக்க அவர்கள் காவல் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் மரணம் அடைகின்றனர். இவர்களின் முதலாளிகள் எந்த வகையிலும் அலட்டிக் கொள்ளாமல் புதிய தலைவர்களைப் பொறுப்பில் வைத்துவிடுகின்றனர்.

இதையெல்லாம் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிற காவல் துறை அவ்வப்போது ‘ஓப்ஸ்’ அது ‘ஓப்ஸ்’ இது எனத் தொடங்கி கையில் கிடைக்கிற சில பேரைத் தீர்த்துக் கட்டும். ஆனால் எல்லாக் குற்றச் செயல்களும் முன் போல் இடையூறு இல்லாமல் நடந்தபடியே இருக்கும். அதற்கான முதலாளிகள் அவர்களின் தொழிலாளிகள் இவர்களின் தோழர்களாகக் காவல்துறையினர் தொடர்ந்து கை கோர்த்துச் செயல்பட்டபடியே இருப்பர்.

கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை, குண்டர் குழு நடவடிக்கைகளால் மலேசியா அமைதியாக வாழ்வதற்கு தகுதி உடைய நாடு அல்ல என்ற நிலையை எட்டிவிட்டது. வணிகத் துறை பாதிப்படைந்துள்ளது. வெளி நாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

எல்லாவற்றுக்கும் காரணம் இந்திய இளைஞர்களின் வன்செயல்கள்தாம். சந்தேகம் இல்லை. 49 குண்டர் குழுக்கள். இதில் இந்தியர்கள் 28,926 பேர். சீனர் 8,214 பேர், மலாயர் 1,923 பேர். நாட்டின் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிலும் அடிமட்ட விழுக்காட்டு நிலையில் இருக்கும் இந்தியர்கள் இந்த விசயத்தில் மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றனர். ஏன்?

மோசமான குடியிருப்புகள், சுற்றுச் சூழல்கள், குறைந்த கல்வி, குறைந்த வேலை வாய்ப்பு, இவற்றுக்குக் காரணமான இனப் பாகுபாடு, விரக்தி போன்ற பலவும் உந்து சக்தியாகச் செயல்படும் அதே வேளையில் நிறைய சம்பளம் தரும் குண்டர் குழுத் தலைவர்கள் ஈர்ப்புச் சக்தியாகச் செயல்படுவதால் எதிர்மறைச் செயல்களில் இந்திய இளைஞர்களின் வாழ்க்கை நிரந்தரமாகச் சிக்கிக் கிடக்கிறது.

வன்செயல்களின் வேர்களைக் கல்லி எடுக்காமல் இலைகளையும் கிளைகளையும் ‘கவாத்து’ செய்யும் வேலையைக் காவல் துறை செய்து கொண்டிருக்கிறது. வேர்களைப் பிடுங்கினால் பல பெரிய மனிதர்களின் தலைகளைக் கொய்ய வேண்டி வரும். இவர்களின் தயவால் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் பெரும் புள்ளிகளின் முகங்களும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது. சாக வேண்டிய இளைஞர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர். ஆகவே ‘ஓப்ஸ்’கள் தொடரும்.