சிறை மீண்ட செம்மலே வருக… கரை தட்டா கப்பலே வருக… என்றெல்லாம் கூட போஸ்டர் அடித்திருப்பார்கள்.
ஆனால் இனிமேலும் அடக்கி வாசிக்கலைன்னா அந்தமான் ஜெயிலுதாண்டீய்… என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக அடக்கியே வாசித்தார் பவர்ஸ்டார் சீனி.
சும்மா நச்சுன்னு இருக்கு ஊடகவியளாலர் சந்திப்புக்குப் போன பலருக்கும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. தனது பளீர் பல் வரிசை மேலும் வெளியே தெரிகிற அளவுக்கு வாசலிலேயே நின்று ஊடகவியளாலரை வரவேற்றார் பவர்.
இந்த படத்தில் முழு நீள நகைச்சுவை, சைட் நீள சரவெடி எல்லாமே நம்ம பவர்தான். இவருக்கே இவருக்கென தைக்கப்பட்ட ஒட்டு முடியை ஸ்டைலாக தலையில் மாட்டிக் கொண்டு நின்றிருந்த பவரை மீடியாக்களின் பளிச் லைட் மேலும் நன்றாக கழுவி எடுத்து உள்ளே அனுப்பியது.
நம்ம கெட்ட நேரம் படம் லேட்டாக டவுன் லோட் ஆக, பவர் கையில் மைக்கை கொடுத்தார்கள். டெல்லி திஹார் சிறை வரைக்கும் தன் புகழை பரப்பிய பவரிடம், கேள்வி பதில் நேரம்.
முதல் கேள்வியை (கடைசி கேள்வியையும்) படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்தான் கேட்டார். நீங்க ஏன் டெல்லிக்கு போனீங்க? இதுதான் கேள்வி. அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொன்னார் பவர்.
எனக்கு பணம் தர்றேன்னு சொன்ன ஒருத்தர் கடைசி நேரத்துல கையை விரிச்சிட்டாரு. அதனால்தான் நான் மாட்டிகிட்டேன். இனிமேல் இது மாதிரி சிக்கல் வராம பார்த்துப்பேன்.
இவ்வாறு அவர் சொல்லி முடிக்கும்போது, பவரின் கூடவே வந்த ஜால்ராக்கள் கோஷமிட ஆரம்பித்தது. தலைவா….ஆஆஆஆஆ… என்று அவர்கள் போட்ட கூச்சலை சகிக்க முடியாத மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கர்ண கொடூர கோபத்தோடு அந்த பக்கம் திரும்பினார்.
யேய்… எவனும் இங்க நின்னு கத்துற வேலை வச்சுக்காதீங்க. இது ஊடகவியலாளர் சந்திப்பு. உங்க ஜால்ராவையெல்லாம் வெளியில வச்சுக்கணும் என்று எச்சரித்தார்.
அதற்கப்புறம் ஜால்ராக்கள் எல்லாமே அமைதி ஆனது. சிறிது நேரம் கழித்து வெளியேறிய பவரை துரத்திக் கொண்டே ஓடினார் பிரபல சேனல் ஒன்றின் நிருபர். நேரடி ஒலிபரப்பு வேன் ஒன்றும் பவருக்காக காத்திருந்தது.
நேற்றைய திஹார்தான் இன்றைய ஃபிகராகவும் விளங்குகிறது. என்ன கொடுமை இது!