கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் பொன்மாலைப் பொழுது.
ஆதவ் கண்ணதாசனும் காயத்ரியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.
காயத்ரியின் அப்பா அருள்தாஸ் எந்நேரமும் சந்தேகத்தோடும், கண்டிப்பாகவும் இருப்பவர்.
ஆதவின் அப்பா கிஷோர் இதற்கு நேர்மாறானவர். மகன் சிகரெட் அடிப்பதைக்கூட தட்டி கேட்க தயங்குபவர்.
ஆதவ், காயத்ரியிடம் நட்பாக பழகுவதை கண்டு அடித்து அவமானப்படுத்தி விடுகிறார் அருள்தாஸ்.
அதன் பின்பு அப்பாவை பழிவாங்க வேண்டும் என ஆதவ்வை காதலிக்கிறார் காயத்ரி.
பள்ளி பருவத்து தீவிர காதல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அதற்கு கிஷோர் என்ன முடிவு எடுத்தார் என்பதையும் இயக்குனர் யதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
அப்பாவின் தட்டிக்கொடுத்தலை தவறாகவும் பயன்படுத்தாமல், சரியாகவும் புரிந்துகொள்ளாமல் பள்ளியில் உடன் படிக்கும் காயத்ரியுடன் காதலில் விழும் அப்பா(வி) பிள்ளையாக ஆதவ் கண்ணதாசன்.
அறிமுகம் என்று சொல்லமுடியாத அளவிற்கு அர்ஜுன் பாத்திரத்தில் அப்பா(வி) பிள்ளையாக அசத்தியிருக்கிறார்.
காதலி காயத்ரியுடன் நிஜமான நெருக்கம் கிறக்கம் காட்டி நடித்திருக்கிறார்.
‘கண்ணதாசன் வீட்டு கட்டுத்தரியும் காதல் பாடும்தானே!’ என நிரூபித்திருக்கிறார்.
காயத்ரி, திவ்யாவாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘16 வயசு’ படங்களைக் காட்டிலும் இவரின் நடிப்பில் நல்ல பக்குவம் தெரிகிறது.
ஆதவ்வின் அப்பாவாக கிஷோர். தன் சிறு பிராய காதலையும் ப்ளாஷ்பேக்கில் நினைத்தபடி, மகனையும் அவனது காதலையும் முள்ளின் மீது பட்ட சேலையாக கையாளும் விதத்தில் ‘ஹேட்ஸ் ஆப் கிஷோர்’ சொல்ல வைக்கிறது.
பழைய இரும்பு வியாபாரியாகவும் புதிய நாயகி காயத்ரியின் அப்பாவாகவும் அருள்தாஸ் அலற வைக்கிறார்.
அனுபமா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட அம்மா கதாபாத்திரங்களும் பளிச்சிட்டிருக்கின்றனர்.
பாடல்கள் சுமார் ரகம் தான். ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு உண்மையாகவே அவரை ஒளிவீரன் என ஒப்புக்கொள்ள வைக்கும் பலம்!
ஏ.சி.துரை எழுதி இயக்கி இருக்கும் பொன்மாலைப் பொழுது – இசை, பாடல்கள் மாதிரி ஒரு சில குறைகள் இருந்தாலும் பள்ளி மாணவப்பருவ காதல் விழிப்புணர்வு ப(பா)டமாகும்.
நடிகர்கள்: ஆதவ் கண்ணதாசன், காயத்ரி, கிஷோர், அருள்தாஸ், அனுபமா
இயக்குனர்: ஏ.சி.துரை
ஒளிப்பதிவு: சி.சத்யா
தயாரிப்பு: அமிர்தா கௌரி